என் மலர்
புதுச்சேரி

சேதமாகி உள்ள இந்திராகாந்தி ஹாக்கி மைதானம்.
ஹாக்கி மைதானத்தை சீரமைக்க வேண்டும்
- பா.ம.க. வலியுறுத்தல்
- பல இன்னல்களுக்கு ஆளாகி மிக சிறிய மண் தரை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு மற்றும் விளையாட்டு துறை சார்பில் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் சர்வதேச தரம் வாய்ந்த செயற்கை புல் ஹாக்கி மைதானம் 2004 -ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
செயற்கை புல் ஹாக்கி மைதானத்தின் ஆயுட்காலம் என்பது 7 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் 7 ஆண்டுகளுக்கு பிறகு மைதானம் புதுப்பிக்க படாத காரணத்தினால் விளையாட்டு வீரர்கள் அதே மைதானத்தில் விளையாடி வந்தனர்.
ஆனால் தற்போது ஹாக்கி மைதானம் மிகவும் சேதமாகி உள்ளதால் விளையாட்டு வீரர்கள் சரியான முறையில் பயிற்சி பெற முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகி மிக சிறிய மண் தரை மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
மேலும் புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் போட்டிக்கு தயாராக ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3000 முதல் 5000 வரை செலவு செய்து சென்னை போன்ற நகரங்களில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தை வாடகை எடுத்து பயிற்சி செய்கின்றனர்.
ஹாக்கி விளையாடும் வீரர்களுக்கு இது பெரும் சுமையை ஏற்படுத்துகின்றது. இதனை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக ஹாக்கி மைதானத்தை சீர்படுத்தி தரவும் மேலும் அதனை தகுதி வாய்ந்த ஊழியர்களை கொண்டு பராமரிக்கவும், செப்பனிடவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






