என் மலர்
புதுச்சேரி
- கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி மனு
- புதுவை மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீர் குலைக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கவுரி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் கட்டுங்கடங்காது இயங்கி வரும் மதுக் கடைகளால் தமிழ் குடும்பங்கள் மிக வேகமாக சீரழிந்து வருகிறது. கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் அரசு, உயிருக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடான மதுவினை விற்க அனுமதிப்பது எவ்வகையில் நியாயமாகும்?
பெரும்பாலான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாலை விபத்து உள்ளிட்ட அனைத்து சமூக குற்றங்களுக்கும் அடிப்படை யாக இருப்பது மது பானங்கள்தான். புதுவை மாநிலத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் விதவைகள் வாழ மதுவே காரணம். பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கும் மது காரணமாகிறது.
எனவே புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். சுற்றுலாதலம் என்ற பெயரில் புதுவை மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீர் குலைக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது மகளிர் பாசறை பொருளாளர் தேவிகா, சசிகலா, பிரியாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இளங்கோவன், இரமேசு, திருமுருகன், காமராஜ், திவாகர், ஜெகதீஷ், வினோத், சுந்தர், சந்துரு, தனசேகரன், பிரியா, நிர்மல்சிங், யுவன்செந்தில், மதியழகன், வீராசாமி, பெரியான், செந்தில்முருகன், ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
புதுவையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர், அரசு மருத்துவக்கல்லூரி உட்பட அனைத்து தனியார் மருத்துவ கல்லூரியின் மருத்துவ படிப்புகளிலும் தேசிய மருத்துவ ஆணையமே பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது கலந்தாய்வு என்ற புதிய முறையால் புதுவை மாநிலத்திற்கென ஜிப்மரில் கிடைக்கும் இடஒதுக்கீடு ரத்தாகும். புதுவை மாநில அரசு மாணவர்களுக்காக பிராந்தியவாரியாக அளித்துவரும் இடஒதுக்கீடு, சமூகரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீடு முறைகள் ரத்தாகும். இது சமூகநீதிக்கு எதிரானது.
தற்போதுள்ள நடை முறையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். புதுவை மாநில மாணவர்களின் உரிமையை காக்க முதல்-அமைச்சர் முன்வர வேண்டும். உடனடியாக மத்திய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதுவை பெண்கள் அச்சம்
- ஒரே நாளில் 2 இடங்களில் பைக்கில் வந்த ஆசாமிகள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது. புறநகர், கிராமப்பகுதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் பைக்கில் வந்த சில நபர்கள் செயினை பறித்து சென்றனர். சில பெண்கள் தாலிச்செயினையும் இழந்தனர்.
கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் ஆகியவற்றிலும், மக்கள் கூடும் இடங்களை பயன்படுத்தி செயின்பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதில் ஒரு சில குற்றவாளிகளை போலீசார் பிடித்தனர். பின்னர் செயின்பறிப்பு சம்பவங்கள் சமீபகாலமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் செயின்பறிப்பு சம்பவங்கள் தலை தூக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 2 இடங்களில் பைக்கில் வந்த ஆசாமிகள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
புதுவை முத்திரையர் பாளையத்தை சேர்ந்தவர் வள்ளி. புதுவை கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அட்டென்டராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை 7 மணியளவில் அவர் பணி முடிந்து டெம்போவில் முத்திரையர்பாளையம் சென்று இறங்கி உள்ளார்.
அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் முககவசம் அணிந்து வேகமாக வந்த இரண்டு வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர். வள்ளி திருடன் திருடன் என கத்தியுள்ளார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் சுதாகரிப் பதற்குள் இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் வேகமாக தப்பி சன்றுள்ளனர். இதுகுறித்து வள்ளி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளனர். உதவி ஆய்வாளர் முருகன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார். இதே வாலி பர்கள் முதலியார்பேட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் நடை பயிற்சி சன்றுக்கொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கிலியையும் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை ஆய்வாளர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் செயின்பறிப்பில் ஈடுபட்டது ஒரே ஆசாமிகள் என தெரியவந்துள்ளது. வண்டியை ஓட்டும் நபர் முகத்தில் முககவசம் அணிந்துள்ளார்.
மற்றொருவர் முகத்தை மூடிக்கொண்டு செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் பயன்படுத்திய வாகனம் தமிழக பதிவெண்ணாக இருந்தது. இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளார்களா? என தமிழக போலீசாருடனும், படங்களை அனுப்பி பழைய குற்றவாளிகளா? என விசாரித்து வருகின்றனர். புதுவையில் மீண்டும் செயின் பறிப்பு சம்பவங்கள் தலை தூக்கியுள்ளது பெண்களிடையே அச்சத்தை உருவாக் கியுள்ளது.
- செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சமூக நலத்துறையின் மூலமாக நலிவடைந்த ஏழை சலவையாளர்கள் மற்றும் மருத்துவ இன மரபினர்களுக்கு இலவச தொழிற்கருவிகள் வழங்கும் விழா பாகூர் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் செந்தில் குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு 22 இஸ்திரி பெட்டி, 2 தவில் ஒரு சிகை திருத்தும் நாற்காலி வழங்கினார்.
இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலமாக 5 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப் பட்டது.
- மருமகள் போலீசில் வாக்குமூலம்
- எனது மாமியார் மேரிடெய்சி வீடு வாங்கி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
புதுச்சேரி:
புதுவை பஸ் நிலையம் எதிரில் உள்ள அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அண்ணாசாமி. இவரின் மனைவி மேரி டெய்சி, (வயது 72). இவரது கணவர் மற்றும் முதல் மகன் இறந்து விட்டனர்.
இளைய மகன் குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார். மேரி டெய்சி தனது வீட்டின் தரை மற்றும் முதல் தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார். 2-ம் தளத்தில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி இவரின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், மேரி டெய்சியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
படுகாயமடைந்த மேரி டெய்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உருளை யன்பேட்டை போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவரது மருமகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து மூதாட்டியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியின் 2-வது மனைவி குன்னுரை சேர்ந்த ரெபெக்கா (வயது 40), திருநெல்வேலியை சேர்ந்த கூலிபடையினர் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரிடம் மருமகள் ரெபெக்கா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனது முதல் கணவர் இறந்துவிட்டார். இதனால் மேரிடெய்சியின் மூத்த மகன் விஜய் ஆண்டனியை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். எனது மாமியார் மேரிடெய்சி வீடு வாங்கி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
இந்நிலையில் என் 2-வது கணவரும் இறந்துவிட்டார். இதனால் அவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை எனக்கு தரும்படி பலமுறை கேட்டேன். ஆனால் மேரிடெய்சி தரவில்லை. இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து, திருநெல்வேலியை சேர்ந்த கூலி படையினரிடம் உதவி கேட்டேன். அவர்களுக்கு பணம் கொடுத்து மாமியார் கொலை செய்யும்படி கூறினேன்.
எனது மாமியாருக்கு தொழில் ரீதியாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எதிரிகள் இருப்பதால் என் மீது சந்தேகம் வராது என நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்துவிட்டனர் என தெரிவித்தார்.
இதனையடுத்து குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பொதுமக்கள் கடும் அவதி- மறியல்
- மின்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மின்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதில் அரியாங்குப்பம் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாயத்து, அரியாங்குப்பம் நகரப் பகுதி, வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம், காக்காயந்தோப்பு, ராதா கிருஷ்ணன் நகர், மணவெளி, ஓடைவெளி, டோல்கேட் மற்றும் நோணாங்குப்பம் வரை மின் விநியோகம் வழங்கப்பட்டும் பரா மரித்தல் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இரவு 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் மின்சாரம் தடைபட்டு வருகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு 9 மணிக்கு தடைபடும் மின்சாரம் எப்ப வரும்? என எதிர்பார்த்து கொண்டு தங்களது தூக்கத்தையும் தொலைத்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அரியாங்குப்பம் கோட்டை மேடு சந்திப்பில் ஒரு சிலர் திடீர் சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த அரியாங்குப்பம் போலீசார் அவர்களை சமாதா னப்படுத்தி மின் இணைப்பு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.
கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து மின் விநியோகம் தடை இல்லாமல் வழங்க மின்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே நிலை நீடிக்கும் எனில் புதுவை-கடலூர் சாலையில், பாய், தலையணையுடன் படுத்து தூங்கும் போராட்டமும், மின்துறை அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டமும், நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரி வித்தனர்.
- பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
- தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை முப்படை நலத்துறை இயக்குனர் சந்திரகுமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2022-23-ம் கல்வியாண்டில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 3 மாணவ, மாணவி களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்குதல், இளநிலை, முதுநிலை கல்லூரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர்கள், சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வெகுமதி வழங்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த உதவிகளை பெற புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதி யுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், விதவை கள் விண்ணப்பத்தை முப்படை நலத்துறையில் வரும் 19-ந் தேதி முதல் ஜூலை 28-ந் தேதி வரை அடையாள அட்டையின் அலுவல கத்துக்கு வந்து நேரில் பெறலாம்.
இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை வரும் ஆகஸ்ட் 4-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். காரைக்கால், மாகே, ஏனாமில் பிராந்தியங்களில் கலெக்டர் அலுவலகம், மண்டல நிர்வாக அலுவலத்தில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள், பரிசீலனைக்கு ஏற்கப்படாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொதுப்பணித்துறை அறிவிப்பு
- முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடிநீர் வரிக்கான கட்டணத்தை செலுத்த பொது சுகாதார கோட்டம், பொதுப்பணித்துறை சார்பில் குடிநீர் அளவு கணக்கீட்டாளர் கணக்கெடுத்து ரசீது வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர் வரி ரசீது பெற்றோர் அதில் குறிப்பிட்ட வரியை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். இல்லா விட்டால் முன் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.
மீண்டும் மறு இணைப்புக்கான கட்டணம் ரூ.5 ஆயிரம் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டு நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் வரி, பயன்பாட்டு வரி மார்ச் முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டதணத்தையும் செலுத்த வரி கேட்டு ரசீது வழங்கப்பட்டுள்ளது. இந்த ரசீது கிடைத்த 30 நாட்களுக்குள் குடிநீர், கழிவுவரி கட்டணங்களை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- ராகேஷ், கழக சகோதரர்கள் சக்திவேல், பத்தாவச்சலம், பஸ்கல் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட தெப்பக்குளம் வீதியில் உள்ள தட்சணா மூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், புத்தகங்கள் மற்றும் சீருடை களை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊர் பஞ்சாயத்தாரர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொகுதி செயலாளர் சக்திவேல், துணை தொகுதி செயலாளர் ராஜி, மீனவரணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் காலப்பன் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் சக்திவேல், பத்தாவச்சலம், பஸ்கல் ஆகியோர் பங்கேற்றனர்.
- திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர்.
- திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது.
பழமையான கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் குருசுகுப்பத்தில் உள்ள என்.கே.சி. பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 பள்ளிகளும் ஷிப்ட் முறையில் இயங்கி வந்தது. என்.கே.சி. பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளி இயங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இந்த ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை சவரிராயலு வீதியில் உள்ள திரு.வி.க. ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
திரு.வி.க. பள்ளி மாணவர்கள் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு மாற்றி ஷிப்ட் முறையில் இயக்க முடிவு செய்தனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் வீரமாமுனிவர் பள்ளிக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தினர். அதேபோல வீரமாமுனிவர் பள்ளி மாணவர்களும் ஷிப்ட் முறையில் பள்ளி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று பள்ளி திறந்த போது சுப்பிரமணிய பாரதியர் பள்ளி மாணவிகள் திரு.வி.க. பள்ளிக்கு சென்றபோது பள்ளி நடைபெறவில்லை. பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.
இன்று திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளிக்கு இடம் இல்லாத நிலைக்கு சுப்பிரமணிய பாரதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தள்ளப்பட்டனர்.
இதையடுத்து மாணவிகள் கல்வித்துறை நோக்கி பெற்றோர்களுடன் செல்ல முயற்சித்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்து கம்பன் கலையரங்கில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டம் குறித்து தெரிந்த பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மாணவிகளை ஊர்வலமாக வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கத்துக்கு சமூக அமைப்பினர் அழைத்து வந்தனர். இதனிடையே நேரு எம்.எல்.ஏ. திரு.வி.க. பள்ளிக்கு சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்த நேரு எம்.எல்.ஏ. மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நேரு எம்.எல்.ஏ. அங்கிருந்து விலகிச்சென்றார். மாணவிகள் போராட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. புஸ்சி வீதி, அண்ணாசாலை, கடலூர் வழியாக வந்த வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அப்போது மாணவிகள், சரமாரியாக கேள்வி எழுப்பினர். தங்களுக்கு தனியாக பள்ளி வளாகம் வேண்டும், ஷிப்ட் முறையில் பள்ளியை நடத்தக்கூடாது என கேட்டனர். இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், 2 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார்1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- விளையாட்டு ஆணைய கூட்டத்தில் முடிவு
- கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் ரூ.11 கோடியில் அமைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் அமைச்சர் நமச்சிவாயம், விளையாட்டுக்களை மேம்படுத்தவும், வீரர்களை ஊக்கப்படுத்தவும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை உருவாக்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி தனி துறை அமைக்க கோப்பு உருவா க்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டது. அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அனுமதி கிடைத்தவுடன் தனி துறை ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்காக இயக்குனர், தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதனிடையே தனித்தனியே செயல்பட்டு வந்த புதுவை விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளி ஆகிய வற்றை ஒருங்கிணைத்து தமிழகம்போல புதுவை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, துணைத்தலைவராக அமைச்சர் நமச்சிவாயம், உறுப்பினர்களாக எம்.எல்.ஏ.க்கள் ரமேஷ், கல்யாணசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு சங்க தலைவர்கள், சர்வதேச பதக்கம் பெற்ற வீரர்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகளும் உறுப்பினர்களாக உள்ளனர்.
18 ஆண்டுக்கு பின் புதுவை விளையாட்டு கவுன்சில் கூட்டம் கல்வித்துறை வளாகத்தில் நடந்தது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். ஒலிம்பிக் சங்க தலைவர் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதில் விளையாட்டுகளை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப் பட்டது. புதிய பதவிகளை உருவாக்குவது, நிதி ஒதுக்கீடு, சம்பளம் உட்பட பல விஷ யங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற புதுவை விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகை 2004-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட வில்லை. நிலுவையில் உள்ள ரூ.7 கோடியே 93 லட்சத்து 34 ஆயிரத்தை வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொகையை ஒதுக்கித்தர முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தார்.
தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் விளையாட்டு மைதானம் ரூ.11 கோடியில் அமைப்பது குறித்தும் ஆலோசிக் கப்பட்டது.
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் அரங்கத்தை முழுமையாக புதுப்பிக்க முடிவு செய்யப் பட்டது. லாஸ்பேட்டை யில் தரை அமைத்து பணிகளை முழுமையாக்கவும், ஸ்கேட்டிங் வீரர்களுக்கு தனி பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் புதுவை நகரம் மற்றும் கிராமப்புறங்களில் 10 மினி மைதானங்கள் கட்ட மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி யுதவி பெற முடிவு செய்யப்பட்டது.
- உளவியல் பிரச்சினைகள், நோய் தீர்க்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
- இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் நலவழித்துறை சார்பில் ஆயுர்வேதத்தில் முதியோர் நலன் பாதுகாப்பு சிறப்பு முகாம் வில்லியனூர் மூலக்கடை சத்குரு ராம பரதேசி சித்தர் ஜீவ பீடத்தில் நடந்தது.
காலை 9 மணிக்கு தொடங்கிய முகாமில் இந்திய முறை மருத்துவம், ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குனர் ஸ்ரீதரன், ஆயுர்வேத மருத்துவ அதிகாரி பத்மாவதமா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் முதியோர் நலன் பாதுகாப்பு, முதியோரை பாதுகாக்கும் காரணிகள், வயது முதிர்வால் ஏற்படும் பிரச்சினைகள், உளவியல் பிரச்சினைகள், நோய் தீர்க்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும் ஆயுர்வேதத்தில் முதியோர் பராமரிப்புக்கான குணப்படுத்தும் சிகிச்சைகள், பஞ்சகர்மா உட்பட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.






