என் மலர்
புதுச்சேரி
- இந்த மரம் 10 ஆண்டுக்கு முன்பு வாய்க்கால் சீரமைப்பு பணியின்போது வேர்களை வெட்டியதால் சரிந்தது.
- ஆபத்தான நிலையில் உள்ள மரத்தால் பொதுமக்களுக்கும், எனக்கும், எனது வீட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இயற்கை ஆர்வ லர்களான பிரெஞ்சுக் காரர்கள் புதுவையை நிர்மாணிக்கும்போதே பசுமையாக சாலைகளை அமைத்தனர்.
இதனால் புதுவை நகர பகுதியில் இருக்கும் பெரும்பாலான சாலைகளில் நிழல் தரும் மரங்கள் இருப்பதை பார்க்கலாம். சில சாலைகளில் மரங்களால் வெயிலே தெரியாது. இந்த சாலையில் வசிப்பவர்கள் தொடர்ந்து மரங்களை பராமரித்து வருகின்றனர்.
சில சாலைகளில் மரங்கள் இடையூறாகவும் உள்ளது. அண்ணாசாலை, பெருமாள் கோவில் சந்திப்பில் நீண்டகாலமாக வீடு, புத்தக கடை வாசிலில் மரம் உள்ளது. இந்த மரம் 10 ஆண்டுக்கு முன்பு வாய்க்கால் சீரமைப்பு பணியின்போது வேர்களை வெட்டியதால் சரிந்தது.
தொடர்ந்து வேர்கள் மீண்டும் வளரும்போது வீட்டின் தரைதளத்திற்குள் சென்றது. வனத்துறை அனுமதியின்றி மரத்தை வெட்டக்கூடாது என்பதால் வீடு, கடை உரிமையாளர் வேர்களை மட்டும் வெட்டி சரிசெய்து வந்தனர்.
சமீபகாலமாக தரை தளத்துக்கு வெளியில் வேர்கள் வர தொடங்கி ஆபத்தான நிலையில் உள்ளது. நடைபாதையில் நடப்பவர்களே வேர்கள் தடுக்கி கீழே விழும் நிலை உள்ளது. மரம் திடீரென பெயர்ந்து விழுந்தால் பொதுமக்களுக்கு பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
இதனால் கடை உரிமையாளர் கவர்னர், முதல்-அமைச்சர், கலெக்டர், வனத்துறை மற்றும் அதிகாரிகளுக்கு மரத்தை அகற்ற அனுமதி தரக்கோரி கோரிக்கை வைத்தார்.
அதேநேரத்தில், தனது கடையின் வாசலிலும், நூதனமாக ஒரு கோரிக்கை பேனர் வைத்துள்ளனர். அதில், ஆபத்தான நிலையில் உள்ள மரத்தால் பொதுமக்களுக்கும், எனக்கும், எனது வீட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த நூதன கோரிக்கை பேனர் அவ்வழியே செல்வோரை கவர்ந்துள்ளது.
அதேநேரத்தில் நேற்றைய தினம் வனத்துறை கடை உரிமையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் 10 மரங்களை நட்டு, பாதுகாப்பு வளையம் வைத்து சில நாட்கள் பராமரித்து போட்டோ எடுத்து தரும்படியும், அதை தொடர்ந்து மரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் கடை உரிமையாளர் 10 மரங்களை நட தயாராகி வருகிறார்.
- ஜிப்மர் டீன் வழங்கினார்
- ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
புதுச்சேரி:
உலக ரத்த கொடை தினத்தை முன்னிட்டு ஜிப்மர் ரத்த வங்கி சார்பில் ரங்கோலி கோலப் போட்டி நடத்தப்பட்டது.
இதில் ரத்தக்கொடை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரங்கோலிகள் போடப்பட்டன.
புதுவை மாநில என்.சி.சி. ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியர் அலமேலு மங்கை ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த ரங்கோலிகளை தேர்வு செய்தனர்.
சிறந்த ரங்கோலிக்கான முதல் பரிசை ஜிப்மர் செவிலிய அதிகாரிகள் சியாமளாதேவி - மாலதி அணியும், 2-வது பரிசினை ஓவியர்கள் அறிவழகி- ஞானவேல் அணியும் 3-ம் பரிசினை அர்ச்சுன சுப்புராய நாயக்கர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் விஜய விவேஷ்குமார்-விஜய விஜேஷ்குமார் அணி மற்றும் நந்தினி- அக்ஷ்யா அணியும் வென்றனர்.
ஜிப்மர் டீன் டாக்டர் பங்கச் குந்த்ரா, புதுவை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர், ஜிப்மர் பேராசிரியர் டாக்டர் அபிஷேக் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை முதன்மை மருத்துவ அதிகாரி வடிவேல் மற்றும் ஜிப்மர் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
- புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர்.
புதுச்சேரி:
தமிழ்நாடு போலீஸ் துறையில் பெண் போலீசார் கால் தடம் பதித்து 50 ஆண்டுகள் நிறைவு அடைந்ததையொட்டி பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
அதையொட்டி பெண் போலீசாரின் திறமைகளை பறை சாற்றும் வகையில் பல்வேறு போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் இருந்து பாய் மர படகு மூலம் புறப்பட்டு பழவேற்காடு வழியாக கோடியக்கரை வரை சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் பயண நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் கடந்த 10-ந் தேதி தொடங்கியது. 1,000 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தை 4 பாய்மர படகுகளில் 30 பெண் போலீசார் மேற்கொண்டனர். இந்த பாய்மர படகு பயணத்தில் பெண் போலீஸ் உயரதிகாரிகளான கூடுதல் டி.ஜி.பி.பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் மகேஸ்வரி, பவானீஸ்வரி, டி.ஐ.ஜி. கயல்வழி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கோடியக்கரை சென்று விட்டு மீண்டும் சென்னை திரும்பினர்.
இந்நிலையில் நேற்று காலை புதுவை தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். அவர்களை புதுவை மாநில காவல் துறை சார்பில் கடலோரக்காவல் போலீஸ் சூப்பிரண்டு பழனிவேல் மற்றும் போலீசார் வரவேற்றனர். பின்னர் அந்த குழுவினர் இங்கிருந்து மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த குழுவினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகம் சென்றடைகின்றனர்.
- முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் காரைக்காலில் இருந்து தங்களை புதுவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுவையில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் காரைக்காலுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் யாரும் அங்கு பணிக்கு செல்லவில்லை. இதனால் காரைக்காலில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களே கோடை விடுமுறைக்குப் பிறகும் பணியை தொடர வேண்டியது ஏற்பட்டது.
இந்நிலையில் காரைக்காலில் பணியாற்றி வரும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை பணியை முடித்துக் கொண்டு 2 பஸ்களில் புதுவைக்கு வந்தனர்.
கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர், இன்று (சனிக்கிழமை) சட்டசபைக்கு வந்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும், அதிகாரிகளை வரவழைத்து இந்த பிரச்சினை குறித்து தீர்வு காணலாம் என்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட ஆசிாியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் பணியிட மாறுதல் கோரி ஆசிரியர்கள் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணி யிடங்களை தேர்வு நடத்தி நிரப்பக்கோரி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்
- வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
புதுவையில் இந்திய வேளாண் அறிவியல் கழகம் சார்பில் இளைஞர்களை விவசாயத்தில் தக்க வைக்கவும் அவர்களை ஊக்கப்படுத்தவும் ஆர்யா என்ற திட்டம் பெருந்தலைவர் காமராஜ் வேளாண் அறிவியல் நிலையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் ஒரு பகுதியாக இன்று பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு முட்டை பொரிப்பான் மற்றும் சிறுதானியம் அரைக்கும் எந்திரம் ஆகியவற்றை வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார்.
இதன் பிறகு இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அவர்களை ஊக்கப்படுத்தி அரசு அளிக்கும் மற்ற திட்டங்களிலும் பயன்பெற்று விவசாயத்தை நீடித்து செயல்படுமாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் சிவசுப்பிரமணியன் மற்றும் கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் நரசிம்மன், சித்ரா, அமலோர்பவநாதன், பிரபு பொம்மி, சந்திராதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
- மறியல் போராட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வந்து சமாதானப்படுத்தி முடித்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் இயங்கிவந்த சுப்பிரமணிய பாரதியார் பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளி கட்டிடத்துக்கு மாற்றினர். பெண்கள் பள்ளி மாணவிகளை தங்கள் பள்ளியில் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டி வீரமாமுனிவர் பள்ளி மாணவர்கள் மறுத்தனர்.
இதனால் சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை சதுக்கத்தை சுற்றிலும் அமர்ந்து மறியல் நடத்தினர்.
2 மணி நேரம் நீடித்த மறியல் போராட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வந்து சமாதானப்படுத்தி முடித்து வைத்தார். 2 நாளில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தார். தொடர்ந்து 2 பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அமைச்சர் பேசினார்.
பேச்சுவார்த்தையில் இந்த கல்வியாண்டு மட்டும் வீரமாமுனிவர் பள்ளி கட்டிடத்தில் சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளுக்கு கல்வி கற்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. வீரமாமுனிவர் பள்ளி மாணவர்கள் திரு.வி.க. ஆண்கள் பள்ளி மாணவர்களோடு இணைந்து ஒரே ஷிப்டாக முழுநேரம் பள்ளியை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இன்றைய தினம் சுப்பிரமணியபாரதியார் மற்றும் வீரமாமுனிவர் பள்ளிகளுக்கு தற்காலிக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை பள்ளிகள் இடம் மாறி செயல்பட உள்ளது. அதற்கிடையில் பெற்றோர்களை அழைத்து பள்ளி வளாகத்திலேயே பேச்சு நடத்தவும் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, நடப்பு கல்வியாண்டில் மட்டும் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் வீரமாமுனிவர் பள்ளி கட்டிடத்தில் படிப்பர். விரைவில் பூமி பூஜை செய்யப்பட்டு சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி புதுப்பிக்கப்படும்.
இது தற்காலிக ஏற்பாடுதான். ஓராண்டில் பள்ளி கட்டிடம் கட்டப்படும். மீண்டும் மாணவிகள் அவர்கள் பள்ளிக்கே சென்றுவிடுவர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளதால் முழுமையாக பள்ளியை இயக்க வேண்டும். எனவே ஷிப்ட் முறையை கைவிட்டு வீரமாமுனிவர், திரு.வி.க. பள்ளி இணைந்து திரு.வி.க.பள்ளியில் முழுநேர பள்ளியாக இயங்கும். இருதரப்பு பள்ளியை சேர்ந்த பெற்றோர்களையும் கலந்து ஆலோசித்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
- மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வரே மாணவிகளைக் கம்பன் கலையரங்கம் அருகே போராட்டம் செய்ய வைத்துள்ளார்.
புதுச்சேரி:
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 நாட்களாக புதுவை அரசுப் பள்ளிகளில் நடந்து வரும் பெற்றோர் மாணவர் போராட்டங்கள் அரசு பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் செயல்பாடுகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.
தற்போதுள்ள பிரச்சினை சென்ற ஆண்டு குருசுகுப்பம் என்.கே.சி மேனிலைப் பள்ளியில் நடந்த மாணவிகள் போராட்டத்தை கல்வித்துறை இணை இயக்குநர் சரியாக விசாரிக்காமலும் போராட்டத்தைத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் வேறு ஒருவரை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதும் மாணவிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் மெத்தனமாக இருந்ததே காரணமாகும்.
சுப்பிரமணிய பாரதியார் பள்ளியின் தற்போதைய துணை முதல்வரே மாணவிகளைக் கம்பன் கலையரங்கம் அருகே போராட்டம் செய்ய வைத்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பி அனுப்பும் போது ஒரு துணை முதல்வரே மாணவிகளைப் பள்ளியை விட்டு தூரமாக இருக்கும், போக்குவரத்து அதிகம் உள்ள இடத்தில் போராட்டம் நடத்த வைத்திருப்பதும் அதை பள்ளிக் கல்வி இயக்குநரகம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் வேதனையாக உள்ளது.
தொடரும் மாணவர்கள் போராட்டங்கள் அனைத்திற்கும் முழுக் காரணமான பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணை இயக்குநரைப் பதவி நீக்கம் செய்ய கோரி போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பலமுறை கேட்டும் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தனர்.
- வைத்திலிங்கமும் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தனக்கு சொந்தமாக சொகுசு கார் வைத்திருந்தார்.
இவரது சொகுசு காரை இவரது நண்பரான சேலியமேடு பகுதியை சேர்ந்த செல்வமூர்த்தி என்பவர் முதலியார் பேட்டை ஜான்சிநகரை சேர்ந்த வைத்திலிங்கம் கடந்த 2019 -ம் ஆண்டு இரவலுக்கு வாங்கி கொடுத்தார்.
ஆனால் அந்த காரை திருப்பி கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தனர்.
பின்னர் விசாரித்த போது ராமமூர்த்தியின் சொகுசு காரை அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்த ஜெகஜீவன்ராம் மனைவி ஜெயலட்சுமியிடம் வைத்திலி ங்கம் விற்றது தெரியவந்தது.
மேலும் அந்த காரை கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த வெங்கடேச பெருமாள் என்பவர் ஓட்டி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து ராமமூர்த்தி முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது சொகுசு காரை இரவலுக்கு வாங்கி சென்று செல்வமூர்த்தியும், வைத்திலிங்கமும் சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்தலாம் என சந்தேகப்படுவதாக தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருக்கனூர் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கோர்ட்டு அனுமதி பெற்று, காவலில் வைத்து விசாரித்தனர்.
- திருடிய நகைகளை அவர்கள் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.
புதுச்சேரி:
திருக்கனூார் போலீஸ் சரகத்தில் கடந்த மாதம் அடுத்தடுத்து பூட்டிய வீடுகளின் கதவை உடைத்து நகை, பணம் மற்றும் மளிகை பொருட்கள் திருடுபோனது.
இதில் ஏனாம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகத்தின் செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள வீட்டிலும் திருடுபோனது. இது குறித்து திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த 1-ந் தேதி, நெட்டப்பாக்கம் போலீசார் வாகன சோதனை செய்தனர். அப் போது, பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித் தனர்.
அதில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம், வளவனூரை அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த அய்யனார் (44), சீனிவாசன், (26), சிறுவந்தாட்டைச் சேர்ந்த தமிழ்ராஜ்(36), என்பதும், அவர்கள் ஓட்டி வந்த பைக், நெட்டப்பாக்கத்தில் திருடியது என்பதும், மேலும், இவர்கள், திருக்கனூரில் இன்ஸ்பெக்டர் வீடு உள்ளிட்ட 4 வீடுகளின் கதவை உடைத்து திருடியதும் தெரிய வந்தது.
அதன் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து திருக்கனூர் போலீசார், சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரையும் கோர்ட்டு அனுமதி பெற்று, காவலில் வைத்து விசாரித்தனர்.
மேற்குப் பகுதி எஸ்.பி. வம்சித ரெட்டி திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
திருக்கனூர் பகுதியில் திருடிய நகைகளை அவர்கள் அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க நகை, 650 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அலமேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
முருங்கப்பாக்கம் சுகாதார ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி அலமேலு (வயது59). இவர் அரியாங்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் உதவி யாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 10 நாட்களாக அலமேலு கால்வீக்கம் மற்றும் கை நடுக்கம் காரணமாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் இதற்காக அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதித்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்த அமலமேலு திடீரென மயங்கி சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அலமேலுவை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே அலமேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் பார்த்தீபன் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தலைமை செயலருக்கு ஏப்ரல் 11-ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் 20-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு புதுவையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த சாலைகளில் இருக்கக்கூடிய மது விற்பனை உரிமத்தை உடனடியாக 4 வாரத்தில் இடமாற்றம் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுப்ரீம்கோர்ட்டு குறிப்பிட்டுள்ள புதுவையில் உள்ள தேசிய, மாநில மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில், என்.எச் 45 ஏ புதுவை- மதகடிப்பட்டு எல்லை முதல் முள்ளோடை எல்லை வரை, என்.எச் 66 புதுவை இந்திராகாந்தி சதுக்கம் முதல் கோரிமேடு எல்லை மாநில நெடுஞ்சாலை வரை, கணபதி செட்டிகுளம் முதல் பிள்ளைச்சாவடி வரை(கிழக்கு கடற்கரை சாலை), கருவடிகுப்பம் முதல் ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் வரை(கிழக்கு கடற்கரை சாலை), லால்பகதூர் சாஸ்திரி வீதி, எஸ்.வி.படேல் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை, பாரதி வீதி, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி, முகமது காசிம் சாலை, செஞ்சி சாலை, மறைமலை யடிகள் சாலை, திருவள்ளுவர் சாலை, ஆம்பூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலை, வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரையுள்ள சாலை,
மகாத்மா காந்தி சாலை, ஜவகர்லால் நேரு வீதி, மிஷன்வீதி மெயின் சாலை, கருவடிக்குப்பம் மெயின்ரோடு, ஏழை மாரி யம்மன் கோவில் மெயின் ரோடு, கடலூர் மெயின்ரோடு, லெனின் வீதி, வில்லியனூர் மெயின்ரோடு, திருக்காஞ்சி மெயின்ரோடு, வில்லியனூர் முதல் பத்துகண்ணு வரையுள்ள மெயின்ரோடு, பத்துக்கண்ணு முதல் திருக்கனூர் வரை சோரப்பட்டு வழி செல்லும் சாலை, ராஜீவ்காந்தி சதுக்கம் முதல் திருக்கனூர் மெயின்ரோடு வரை, மதகடிப்பட்டு முதல் திருக்கனூர் வரை மெயின்ரோடு, திருக்கனூர் முதல் மணலிப்பட்டு வரை மெயின்ரோடு மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள முக்கிய வீதிகளும் அடங்கும்.
சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தி புதுவை மாநில அதிமுக சார்பில் தலைமை செயலருக்கு ஏப்ரல் 11-ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
அதற்கு எந்தவித பதிலும் தலைமை செயலாளர் அளிக்கவில்லை. இதனால் கடந்த மே 11-ம் தேதி சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் புதுவை அரசு எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை ஏற்காமல் இருப்பது, இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். எனவே புதுவை அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி, சுப்ரீம்கோர்ட் உத்தரவை புதுவை அரசு பின்பற்ற உறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.
- மது போதையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
- 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை மடுவுபேட் சந்திப்பில் உள்ள மதுக்கடையில் 2 பேர் குடித்து விட்டு மது போதையில் ரகளை செய்வதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரகளை செய்த 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்த எழில்(வயது38) மற்றும் கோட்டக்குப்பம் அபிஷேக் நகரை சேர்ந்த சாந்தநாதன்(26) என்பது தெரியவந்தது. இதைத்தொடந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






