என் மலர்
புதுச்சேரி
- காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
- இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இந்து முன்னணி மற்றும் சதுர்த்தி பேரவை சார்பில் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பதற்காக (விஜர்சனம்) நேற்று மாலை புதுவை சாரம் அவ்வை திடலிருந்து புதுவை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையும், மதுரை வீரன் கோவில் தெருவில் வைக்கப்பட்டு இருந்த சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
டோபிகானா பகுதியில் வைக்கப்பட்டு இருந்த சிலையின் முன்பு விஷ்வா ஆதித்யா (வயது 21), அருண், சஞ்சய், அய்யனார் உள்பட பலர் நடந்து சென்றனர்.
அதுபோல் மதுரை வீரன் கோவில் தெரு விநாயகர் சிலையின் முன்பு அதே பகுதியை சேர்ந்த அசோக் (21), வசந்த் (23), சூர்யா (16) மற்றும் சிலர் சென்றனர்.
காந்திவீதியில் பெருமாள் கோவில் தெருவை கடந்து சென்றபோது இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி மோதலை கட்டுப்படுத்தினர்.
இந்த மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த விஷ்வா ஆதித்யா, அருண், சஞ்சய், அய்யனார், அசோக், வசந்த், சூர்யா ஆகிய 7 பேரும் படுகாயம் அடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருதரப்பினர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டதால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க புதுவை கடற்கரை சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
- மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காதில் 18.1 செ.மீ. முடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
- மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த வஷேஸ்வர் தயாள் தியாகி என்பவரும் காதில் நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.
புதுச்சேரி:
உலகில் பலரும் தங்களிடம் காணப்படும் தனி திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் காதில் 18.1 செ.மீ. முடி வளர்த்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த வஷேஸ்வர் தயாள் தியாகி என்பவரும் காதில் நீளமான முடி வளர்த்து கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பிடித்தார்.
அதேபோல் புதுவை காவல்துறை பயிற்சி பள்ளியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ரகுபதி காதில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனைக்கு தயாராகி வருகிறார். இயற்கையாகவே காதில் வளரும் முடியை இவர் அவ்வப்போது குறைத்து வந்துள்ளார்.
ஆனால் இதுபோன்ற சாதனை செய்திகளை கேட்ட பின்பு, தானும் அதே போல் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் கடந்த 2½ ஆண்டுகளாக காது முடிகளை வெட்டாமல் வளர்த்து வருகிறார்.
இப்போது 7 செ.மீ. வரை காதில் முடி வளர்த்துள்ளார். விரைவில் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சாதனை படைக்கும் அளவுக்கு முடி வளர்ப்பேன் என்று அவர் கூறினார். இன்ஸ்பெக்டர் ரகுபதி காதில் முடி வளர்ப்பதற்கு புதுவை காவல்துறையில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது.
- வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
புதுச்சேரி:
கேரள மாநிலம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிபா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு விதித்துள்ளது.
மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ந் தேதி) வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்திலும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு வாலிபர் கடந்த வாரம் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்துள்ளார்.
அதன்பிறகு, அவருக்கு அதிக காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால், தற்போது அந்த வாலிபர் உடல்நிலை தேறி வருகிறார்.
இருப்பினும், அவர் கேரளாவுக்கு சென்று வந்ததால் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அந்த நபருக்கு உமிழ்நீர், சிறுநீர், பிளாஸ்மா மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-
ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
எனவே, சமூக வலைதளங்களில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி துணை சபாநாயகர் ராஜவேலு உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் ராஜவேலு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று காலை துணை சபாநாயகர் ராஜவேலுவை பார்ப்பதற்காக சென்னை சென்றார்.
எனவே அவர் நேற்று பகல் முழுவதும் சட்டசபைக்கு வரவில்லை. அவரது அலுவலக ஊழியர்கள் நேற்று மாலை வழக்கம் போல் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இரவு 10 மணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வருவதாக சட்டசபை காவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் விரைந்து சென்று முதலமைச்சரின் அலுவலகத்தை திறந்து வைத்தனர். முதலமைச்சர் ரங்கசாமி இரவு 10 மணியளவில் சட்டசபை அலுவலகத்துக்கு வந்தார். சுமார் 20 நிமிடம் அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 10.20 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். முதலமைச்சர் ரங்கசாமி இரவில் திடீரென சட்டசபைக்கு வந்ததால் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
- திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- இவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணுக்கும் 2014 -ம் ஆண்டு திருநள்ளாறு கோவிலில் திருமணம் நடந்தது.
புதுச்சோரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளராக பணி செய்து வந்தவர் விநாயகம் (வயது 39). இவர் நிரவி காக்கா மொழி கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கும், தமிழ் இலக்கியா என்ற பெண்ணுக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருநள்ளாறு கோவிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விநாயகத்திற்கு அதிகப்படியான மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர் மது போதை மறுவாழ்வு மையத்திலும் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
விநாயகத்தை பரிசோதித்த டாக்டர்கள் இனி மது அருந்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விநாயகத்திற்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் விநாயகத்தை குடும்பத்தார்கள் தனியாக விடாமல் பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் விநாயகம் வழக்கம்போல் நேற்று முன்தினம் கோவில் பணிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அவரது மனைவி வேலைக்கு சென்ற பிறகு, விநாயகம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விநாயகத்தின் மனைவி திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. கண்டனம்
- மத்திய அரசின் சுகாதாரத்துறை 2 நாட்களுக்கு முன்பு முதுநிலை மருத்துவ படிப்பில் தகுதி இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ மாணவர்கள் சேரவில்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க.துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியா முழுவதும் முதுநிலை மருத்துவ படிப்பில் மருத்துவ மாணவர்கள் சேர்வதற்கு கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜிய பர்சன்டைல் அடிப்படையில் குறைத்து பணம் வைத்திருக்கும் மருத்துவ மாணவர்கள் அனைவரும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் காலியாக உள்ள இடங்களில் சேர்வதற்கும் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கும் மத்திய அரசின் சுகாதாரத்துறையின் தேசிய மருத்துவ கழகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொள்ளை யடிக்கின்ற முயற்சிகளுக்கு துணை போகும் மத்திய அரசின் சுகாதாரத்துறை தேசிய மருத்துவ கழகம் எடுத்த நடவடிக்கைகளை கண்டிக்கின்ற வகையில் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதனை கண்டிக்கின்ற வகையில் புதுச்சேரி கவர்னர் தமிழக அரசியலில் மூக்கை நுழைத்து தேவையற்ற சர்ச்சைகளை தொடர்ந்து உருவாக்கி, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு துணை போவது மிகவும் மோசமான செயலாகும்.
மருத்துவ படிப்பில் தரத்தை உயர்த்துகிறேன் என்ற போர்வையில் "நீட்"எனும் கொடிய விஷக்கொல்லி மருந்தினை இந்தியா முழுவதும் ஆளும் பா.ஜனதா அரசு 2017 ஆம் ஆண்டில் இருந்து தூவி, பல மாணவர்களை பலிகடா ஆக்கியிருக்கிறது.
சமீபத்தில் கூட ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்த 26 மாணவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். மேலும் மத்திய அரசின் சுகாதாரத்துறை 2 நாட்களுக்கு முன்பு முதுநிலை மருத்துவ படிப்பில் தகுதி இருந்தும் வசதி இல்லாத காரணத்தினால் மருத்துவ மாணவர்கள் சேரவில்லை.
இதனால் மருத்துவ முதுநிலை படிப்பில் ஏராளமான காலி இடங்கள் தனியார் கல்லூரிகள் நிகழ்நிலைப் பல்கலைக்கழகங்கள் நிரம்பாததால் அந்த தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்கும் வண்ணம் கட் ஆப் மதிப்பெண்ணை குறைத்து வசதி படைத்தவர் அனைவரும் எந்தவிதமான தகுதி இல்லாமல் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு வழிவகை செய்திருக்கிறது.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதேபோல பாஜக கூட்டணி கட்சியான பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியும் தேசிய மருத்துவ கழகத்தின் இந்த முடிவினை ஒரு வரலாற்றுப் பிழை என்று தெரிவித்திருந்தனர். இவர்களுக்கெல்லாம் பதில் கூறுவதை தவிர்த்து, தமிழக முதல்வர் கூறிய கருத்தை கண்டிக்கின்ற வகையிலே நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் புதுச்சேரி கவர்னர் கூறி இருப்பதை தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
- மாணவர்கள் ஒரு பிரிவிலும் 9, 10 என்று ஒரு பிரிவிலும் 11 மற்றும் 12 ஒரு பிரிவிலும் தலா 3 பரிசுகளும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
புதுச்சேரி:
புதுச்சேரி மணக்குள விநாயகர்தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை சார்பில் உலக சுற்றுசூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்போம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் மருத்துவர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்தி பேசினார்.
இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் முனைவர் ராஜாராமன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 75 பள்ளிகளிடமிருந்து 2500 மேற்பட்ட ஓவியங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன. அவைகளில் இருந்து சிறந்த ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவிலும் 9, 10 என்று ஒரு பிரிவிலும் 11 மற்றும் 12 ஒரு பிரிவிலும் தலா 3 பரிசுகளும் ஒவ்வொரு பிரிவிலும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் மலர்கண் முன்னிலை வகித்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் வெற்றி சான்றிதழ் வழங்கினார்.
விழாவில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 55) நரிக்குறவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிதம்பரம் கீதைப்பாளையம் பகுதியில் தொழில் செய்ய சென்றள்ளார்.
அப்போது தாய்தந்தை இல்லாத 5 வயதுடைய சுரேஷ் என்ற சிறுவனை கண்டு, தன்னுடனேயை அழைத்து வந்து வளர்த்து வந்தார். தற்போது 22 வயதான சுரேஷ் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமானது. உடனே அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவ மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அன்பழகன் கண்டனம்
- தவறுகளை சுட்டிக்காட்டியோ வாய் திறக்காத கம்யூனிஸ்ட்டு கட்சிகள் எங்களை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.கவை அடிமைக்கட்சி என்றும், சொந்த புத்தியில் செயல்படாத கட்சி என்றும் இந்தியகம்யூனிஸ்ட் தமிழ்மாநில செயலாளர் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் தி.மு.க.வோடு கூட்டணி வைத்து போட்டியிட்ட கம்யூனிஸ்டுகள் இன்று தமிழகத்தில் அறிவித்த எந்த திட்டங்களையும் தி.மு.க அரசு செயல்படுத்தாது குறித்தும், மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கட்ட பஞ்சாயத்துகள், லாக்கப் மரணம், சிறைச்சாலை மரணம், போலீஸ் நிலையத்தில் மரணம், தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை, ஆட்சியாளர்களின் முறைகேடுகள், ஊழல்கள், வன்கொடுமைகள் இவையெல்லாம் தினந்தோறும் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத இவற்றை பற்றியெல்லாம் இன்று வரை எதிர்த்தோ அல்லது தவறுகளை சுட்டிக்காட்டியோ வாய் திறக்காத கம்யூனிஸ்ட்டு கட்சிகள் எங்களை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது.
உண்மையான கம்யூனிஸ்ட்டுகளின் உணர்வுகளை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் முத்தரசன் போன்ற சுயநலமிக்கவர்களுக்கு அ.தி.மு.க.வை பற்றியும் எங்களது கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியாரை பற்றியும் பேசுவதற்கு எந்த தகுதியும், இல்லை.
புதுவையில் நடந்து வரும் சாலைபணிகளில் முறைகேடு நடக்கிறது. தரமற்ற சாலைகள் போடப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதை கண்காணிப்பதில்லை. இதை முதல்-அமைச்சர் கவனத்தில் கொண்டு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரிநீரை காரைக்காலுக்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில இணை செயலாளர் முன்னாள் கவுன்சிலர் கணேசன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
- விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்குகிறார்.
- குழுவின் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சாத னைகள் புரிந்த முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசிகிறார்.
புதுச்சேரி:
கிருமாம் பாக்கத்தில் உள்ள ஆறு படை வீடு மருத்துவ கல்லூ ரியின் 2023-ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கத் தில் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு சேலம் விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் தலைமை தாங்குகிறார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பெங்களூர் கிளையின் இயக்குநர் டாக்டர். பிரஷாந்த் மாத்தூர் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்
விநாயகா மிஷன் பல்க லைக்கழக இயக்குநர் டாக் டர் அனுராதா சிறந்த மாணவர்க ளுக்கான பரி சுகளை வழங்கு கிறார்.பல் கலைக்கழக மேலாண்மை- குழுவின் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் சாத னைகள் புரிந்த முன்னாள் மாணவர்களை பாராட்டி பேசிகிறார்.
- மாணவர்களைக் கொண்டு புதிய நர்சிங் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
- 40 மாணவர்களுடன் தொடங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவையில், நடப்புக் கல்வி ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் மருத்துவக் கல்லூரி குழுமத்தின்கீழ் நர்சிங் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியுள்ளார். செவிலியர் கல்லூரி, இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் 60 மாணவர்களைக் கொண்டு புதிய நர்சிங் கல்லூரி தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் காரைக்கால் பகுதியில் சுகாதாரத் துறையின் மூலம் நர்சிங் கல்லூரி, அன்னை தெரசா பட்டமேற்படிப்பு - சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் 40 மாணவர்களுடன் தொடங்கவும் கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
- தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
- தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை சாலை லதா ஸ்டீல் ஹவுஸ் அருகே தனியார் ஓட்டல் உள்ளது.
ஓட்டலின் தேவையற்ற பொருட்கள் போட்டு வைத்திருந்த பகுதியில் அதிகாலை 1 மணியளவில் திடிரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட ஊழியர்கள் அதனை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது.
இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சில ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்ததாக கூறப்படுகிறது.
தீ பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






