search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கடலூர் வாலிபருக்கு நிபா வைரஸ் இல்லை- சுகாதாரத்துறை விளக்கம்
    X

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கடலூர் வாலிபருக்கு நிபா வைரஸ் இல்லை- சுகாதாரத்துறை விளக்கம்

    • வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது.
    • வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 150-க்கும் மேற்பட்டோர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நிபா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை கேரளா அரசு விதித்துள்ளது.

    மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (24-ந் தேதி) வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுச்சேரி மாநிலம் மாகி பிராந்தியத்திலும் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு வாலிபர் கடந்த வாரம் கேரளாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வந்துள்ளார்.

    அதன்பிறகு, அவருக்கு அதிக காய்ச்சல், சளி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதால், தற்போது அந்த வாலிபர் உடல்நிலை தேறி வருகிறார்.

    இருப்பினும், அவர் கேரளாவுக்கு சென்று வந்ததால் நிபா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய அந்த நபருக்கு உமிழ்நீர், சிறுநீர், பிளாஸ்மா மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு கூறியதாவது:-

    ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

    எனவே, சமூக வலைதளங்களில் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வாலிபருக்கு நிபா வைரஸ் தொற்று என வதந்தி உலா வருகிறது. இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×