என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் விவரித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அதிக மழை பெய்யும் பகுதிகளில் தோட்டப்பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கண்ணன் விவரித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழையால் வயலில் நீர் தேங்காத வண்ணம் ஆங்காங்கே வடிகால் வசதி அமைத்து மழை நீரை வெளியேற்ற வேண்டும். உபரி நீர் வடிந்த பின்பு நடவு மற்றும் விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அதிக மழை பொழிவினால் பெரும்பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்திட வாய்ப்புள்ளதால் அறுவடைக்கு தயாராக இருக்கும் மரங்களின் பழங்களை அறுவடை செய்து மரங்களின சுமையை குறைக்கலாம். பசுமைகுடிலின் அடிப்பாகம் கம்பிகளால் இணைத்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கதவு, ஜன்னல்களை மூடி உட்பகுதியில் காற்று புகாத வண்ணம் அமைக்க வேண்டும். குடிலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிலை சுற்றி வேலி அமைக்கலாம்.

    குடிலின் அருகில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் அதனை அகற்ற வேண்டும். மா, கொய்யா, மாதுளை ஆகிய மரங்களின் கிளைகளை நன்கு கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு மரங்கள் சாய்வதை தவிர்க்கலாம். வாழையில் கீழ்மட்ட இலைகளை அகற்ற வேண்டும். காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக முட்டுக்கொடுத்து மரங்கள் சாயாத வண்ணம் பாதுகாக்கலாம்.

    மரங்களை சுற்றி மண் அணைக்க வேண்டும். இலைவழி உரம் கொடுத்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்யலாம். வாழை மரங்களில் உள்ள தார்களை அறுவடை செய்யலாம்.

    ராஜபாளையம் பகுதிகளில் ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் போன்ற நறுமண பயிர்களுக்கு பூஞ்சான நோய்களை தடுக்க சூடோமோனசம் மற்றும் டிரைக்கோ டெர்மா விரிடி தெளிக்க வேண்டும். காய்கறிகள், பந்தல் காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றில் காய்ந்துபோன இலைகளை அகற்றி, வடிகால் வசதி ஏற்படுத்தி பூஞ்சான் உயிர்கொல்லியை இலையில் தெளிக்க வேண்டும்.

    மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி வடகிழக்கு பருவ மழையால் பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டையில் தடுப்புச்சுவரின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    அருப்புக்கோட்டை:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் இப்ராஹீம் ஷா. இவருடைய மகன் அப்துல் ரகுமான் (வயது 36). இவர் நேற்று இரவு தனது காரில் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி அருகே வளைவில் திரும்பும் போது அங்குள்ள தடுப்புச்சுவரின் மீது கார் மோதியது.

    இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.

    இதையடுத்து விபத்தில் பலியான அப்துல் ரகுமானின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மருத்துவ துறையில் தமிழக அரசு சாதனை படைத்து வருகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் எண்ணற்ற பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்தநிலையில் இந்த அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இலவச கண் சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. ரூ. 1.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கண் நோய் சிகிச்சை பிரிவில் கண் புரை அறுவை சிகிச்சை உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    இந்த கண் சிகிச்சை பிரிவில் 20 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த மருத்துவமனையை குத்து விளக்கு ஏற்றி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் மனோகரன் தலைமையில், தலைமை மருத்துவர் பாபுஜி உள்பட ஏராளமான மருத்துவர்கள் கண் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தமிழகத்தில் மருத்துவ துறையில் சாதனைகள் நடைபெற்று வருகிறது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சைக்காக தனியாக ஒரு பிரிவு தொடக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனே பார்வையிட்டு, நிவாரணம் வழங்கினார்.

    தேர்தல் வருகிறது என்பதற்காக மு.க.ஸ்டாலின் தற்போது மக்களுக்கு சேவை செய்து வருகிறார். யார் என்ன செய்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

    108 ஆம்புலன்ஸ் சேவைகளை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார்.

    விழாவில் கலெக்டர் கண்ணன், தாசில்தார் ஸ்ரீதரன், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ், நகர செயலாளர் ராணாபாஸ்கரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நகர பேரவை செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன் ராஜா, கூட்டுறவு பால் சொசைட்டி சங்க தலைவர் வனராஜ், தொகுதி பொறுப்பாளரும், பால் கூட்டுறவு சங்க துணை தலைவருமான கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றிய பிரமுகர் நவரத்தினம், அவைத்தலைவர் பரமசிவம், பேரவை செயலாளர் ராஜ்குமார், சேத்தூர் நகர செயலாளர் பொன்ராஜாபண்டியன், நடிகர் விஜயகுமார், செட்டியார்பட்டி நகர செயலாளர் அங்குத்துரை, சேத்தூர் கூட்டுறவு சங்க தலைவர் பட்டுராஜன், மற்றும் நகர ஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    காரியாபட்டி பகுதியில் பெய்த மழையினால் நெற்பயிர்கள் சேதமானது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி தாலுகா அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

    இந்த மழையினால் நெற்பயிர்கள் முழுவதும் சாய்ந்து சேதமானதுடன், தண்ணீரில் மூழ்கியது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-

    காரியாபட்டி, அல்லாலப்பேரி, வல்லப்பன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது நெல் சாகுபடி செய்துள்ளோம். இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழைநீர் வயல்களில் தேங்கி நிற்கிறது.

    ஆதலால் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

    இந்த சூழ்நிலையில் தற்போது பெய்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பயிர்கள், வயலில் தண்ணீருக்குள் சாய்ந்து கிடப்பதால் எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்.

    ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 220 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 818 பேருக்கு நோய் பாதிப்பு உறுதியானது. 15 ஆயிரத்து 524 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,675 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. 66 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 15-க்கும் கீழ் நோய் பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் சற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை எச்சரிக்கையாக கொண்டு மாவட்ட சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனைகளை அதிகரிப்பதுடன் சோதனை முடிவுகளையும் உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், பொது இடங்களில் நோய் தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    சாத்தூர் அருகே டாஸ்மாக்கடை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே மேட்டமலை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அவர்கள் கடை செயல்பட எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கடையை அதிகாரிகள் அகற்றினர்.

    இந்தநிலையில் நேற்று மீண்டும் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அங்கு மதுபாட்டில்கள் வந்து இறங்கின. இதையறிந்த அந்த பகுதி மக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் கோட்டாட்சியர் காசி செல்வி, தாசில்தார் சிவக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். பின்னர் மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ராஜபாளையத்தில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி கருமலை நாச்சியார் (வயது 32). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது தாயாரை பார்க்க சென்றார். பின்னர் அரசு பஸ்சில் திரும்ப சேத்தூர் சென்று கொண்டு இருந்தார். பஸ்சில் அவருக்கு அருகே ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

    அந்த பெண் சங்கரன்கோவில் முக்கு பஸ் நிறுத்தத்தில் இறங்கும் போது, கருமலை நாச்சியார் பையில் வைத்திருந்த நகையை பறித்து கொண்டு அங்கிருந்து வேகமாக இறங்கினார்.

    உடனே கருமலை நாச்சியார் சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் உள்ள பயணிகள் தப்பி ஓடிய அந்த பெண்ணை பிடித்து ராஜபாளையம் தெற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த பெண் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோடாங்கிபட்டி சேர்ந்த செல்வம் மனைவி நாகலட்சுமி என்ற லட்சுமி (40) என்பது தெரியவந்தது.

    பின்னர் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 7 பவுன் நகையை போலீசார் மீட்டனர். 
    சாத்தூர் அருகே சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சாத்தூர்:

    சாத்தூரில் இருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் அணைக்கரைப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இருந்து கத்தாளம்பட்டி, குமரெட்டியாபுரம், அம்மாபட்டி வழியாக செலும் சாலை பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறி விட்டது.

    மேலும் மழைக்காலங்களில் இந்த சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

    ஆனால் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, சாலையை சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர்.

    அதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து சுமார் 1 மணி மணி நேரம் பாதிக்கப்பட்டது. அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக கிராம மக்கள் சிலர் மீது இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    அருப்புக்கோட்டை மணி நகரம் ஓடை தெருவில் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை மணி நகரம் ஓடை தெருவில் நாயக்கர் காலத்தை சேர்ந்த சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், உதவிப்பேராசிரியருமான விஜயராகவன் கூறியதாவது:-

    கணவர் இறந்தவுடன் கணவர் உடலோடு, அவரது மனைவியும் சேர்த்து தீமூட்டி உயிரை மாய்த்து உடன்கட்டை ஏறும் நிகழ்விற்கு சதி என்று பெயர்.

    அவ்வாறு மரணத்தை தழுவிய பெண்களை தீப்பாய்ந்த அம்மன், சேலைக்காரி அம்மன் என்னும் பெயர்களில் சிற்பமாக செதுக்கி பொதுமக்கள் வழிபடுவர். இதைதான் சதிக்கல் என்பர். இதன் மூலம் அந்த காலப்பெண்களின் வீரம், கற்பு நிலையை பற்றி நம் அனைவராலும் அறிந்துகொள்ள முடிகிறது.

    அருப்புக்கோட்டை மணி நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்லில் ஒரு பெண் சிற்பம் காலை மடக்கி, மற்றொரு காலை கீழே வைத்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அப்பெண் சதி மேற்கொண்ட அடையாளமாக இடது கையை உயர்த்தி காட்டியுள்ளார். அவளது வலது கையானது சிதைந்த நிலையில் உள்ளது.

    அந்த பெண்ணிற்கு வலதுபுறத்தில் கொண்டை போடப்பட்டுள்ளது.

    அப்பெண் காதுகளில் அணிகலன், கழுத்தில் கழுத்தாணியும், தோல் வளையமும் அணிந்து இருக்கிறது,

    அருகில் உள்ள ஆண் சிற்பமானது ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை கீழே வைத்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவர் தலை முடியானது வலதுபுறமாக கொண்டை போடப்பட்டு உள்ளது.

    இவர் காதுகளிலும் கழுத்திலும், இரு புஜங்களிலும் அணிகலன் அணிந்திருக்கிறார். அவர் கையில் ஆயுதம் ஒன்றை வைத்திருக்கிறார். ஆனால் அது சிதைவடைந்து உள்ளது.

    அந்த ஆண், பெண் சிற்பத்தின் கீழே கெண்டி போன்ற அமைப்பு உள்ளது.

    கெண்டி என்பது நாயக்கர் கால பழமையான சின்னம்.

    ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சதி என்னும் உடன்கட்டையில் தன்னை மாய்த்துக் கொண்ட பெண்ணின் ஆன்மா சொர்க்கத்தை நோக்கி செல்கிறது என்று குறிக்கும் விதமாக கெண்டி சிற்பம் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சதிக்கல் தற்போது சேலைக்காரி அம்மன் என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    தளவாய்புரம், சேத்தூர் பகுதியில் பெய்த தொடர்மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
    தளவாய்புரம்:

    தளவாய்புரம் அருகே உள்ள அயன்கொல்லன் கொண்டான், சொக்கநாதன்புத்தூர், சேத்தூர் ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட செங்கல் தயாரிக்கும் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளில் ஆண், பெண் என 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இங்கு தயாராகும் செங்கல்கள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, சிவகாசி, புளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்தநிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் செங்கல் தயாரிக்கும் பணி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக லேசான வெயில் அடித்தாலும் செங்கல்களை தயாரிக்க முடியாமலும், தயாரித்த செங்கல்களை காய வைக்க முடியாத நிலையும் நிலவுகிறது.

    இதனால் கடந்த 2 வாரங்களாக செங்கல் சூளைகள் சரிவர செயல்படவில்லை. ஆதலால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையினால் செங்கல் தயாரிக்க முடியாததால் தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே அரசு எங்களுக்கு போதிய அளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சாத்தூர் அருகே குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சாத்தூர்:


    சாத்தூர் மேட்டமலை அம்பேத்கர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாத்தூர்-சிவகாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சாத்தூர்- சிவகாசி சாலையில் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 5,436 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 762 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    15 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2,519 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 54 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 25 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15,782 ஆக உயர்ந்துள்ளது. வழக்கம்போல் மாவட்ட சுகாதாரத்துறையினர் பாதிப்படைந்த பகுதிகளின் விவரங்களை தெரிவிக்கவில்லை.

    தமிழக அரசு மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட கூடாது என்று வலியுறுத்தி உள்ள போதிலும் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 1,227 பேருக்கு மட்டுமே மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 2,519 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

    மருத்துவ பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாவட்ட மக்கள் நலன் கருதி வலியுறுத்தி வந்த போதிலும் மாவட்ட சுகாதாரத்துறையினர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையே நீடிக்கிறது.

    மேலும் நோய் பாதிப்பு ஏற்பட்ட கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்காமல் தொடர்ந்து அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள மலைப்பட்டி கிராமத்தை மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

    எனவே மாவட்ட நிர்வாகம் நோய் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தன போக்கை கடைபிடித்தால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×