என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்.
    X
    கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்.

    அருப்புக்கோட்டையில் பழமையான சதிக்கல் கண்டெடுப்பு

    அருப்புக்கோட்டை மணி நகரம் ஓடை தெருவில் பழமையான சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை மணி நகரம் ஓடை தெருவில் நாயக்கர் காலத்தை சேர்ந்த சதிக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளரும், உதவிப்பேராசிரியருமான விஜயராகவன் கூறியதாவது:-

    கணவர் இறந்தவுடன் கணவர் உடலோடு, அவரது மனைவியும் சேர்த்து தீமூட்டி உயிரை மாய்த்து உடன்கட்டை ஏறும் நிகழ்விற்கு சதி என்று பெயர்.

    அவ்வாறு மரணத்தை தழுவிய பெண்களை தீப்பாய்ந்த அம்மன், சேலைக்காரி அம்மன் என்னும் பெயர்களில் சிற்பமாக செதுக்கி பொதுமக்கள் வழிபடுவர். இதைதான் சதிக்கல் என்பர். இதன் மூலம் அந்த காலப்பெண்களின் வீரம், கற்பு நிலையை பற்றி நம் அனைவராலும் அறிந்துகொள்ள முடிகிறது.

    அருப்புக்கோட்டை மணி நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல்லில் ஒரு பெண் சிற்பம் காலை மடக்கி, மற்றொரு காலை கீழே வைத்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அப்பெண் சதி மேற்கொண்ட அடையாளமாக இடது கையை உயர்த்தி காட்டியுள்ளார். அவளது வலது கையானது சிதைந்த நிலையில் உள்ளது.

    அந்த பெண்ணிற்கு வலதுபுறத்தில் கொண்டை போடப்பட்டுள்ளது.

    அப்பெண் காதுகளில் அணிகலன், கழுத்தில் கழுத்தாணியும், தோல் வளையமும் அணிந்து இருக்கிறது,

    அருகில் உள்ள ஆண் சிற்பமானது ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை கீழே வைத்த நிலையில் அமர்ந்திருக்கிறார். அவர் தலை முடியானது வலதுபுறமாக கொண்டை போடப்பட்டு உள்ளது.

    இவர் காதுகளிலும் கழுத்திலும், இரு புஜங்களிலும் அணிகலன் அணிந்திருக்கிறார். அவர் கையில் ஆயுதம் ஒன்றை வைத்திருக்கிறார். ஆனால் அது சிதைவடைந்து உள்ளது.

    அந்த ஆண், பெண் சிற்பத்தின் கீழே கெண்டி போன்ற அமைப்பு உள்ளது.

    கெண்டி என்பது நாயக்கர் கால பழமையான சின்னம்.

    ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சதி என்னும் உடன்கட்டையில் தன்னை மாய்த்துக் கொண்ட பெண்ணின் ஆன்மா சொர்க்கத்தை நோக்கி செல்கிறது என்று குறிக்கும் விதமாக கெண்டி சிற்பம் நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த சதிக்கல் தற்போது சேலைக்காரி அம்மன் என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று மக்கள் வழிபாடு செய்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×