என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசி சிவன்கோவில் அருகே நிறுத்தி வைக்கப்படும் தள்ளுவண்டிகளால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
    சிவகாசி:

    சிவகாசி சிவன் கோவில் எதிரில் உள்ள இடத்தில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வானங்களை நிறுத்தவும் இந்த இடம் பயன்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சிவன்கோவில் எதிரில் உள்ள காலி இடத்தில் அதிகாலை நேரத்திலேயே தள்ளுவண்டிகள் அதிக அளவில் நிறுத்தி வியா பாரம் செய்ய தொடங்கி விடுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தவும், அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்தவும் போதிய இட வசதி இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்க சிவன் கோவில் அருகில் உள்ள காலி இடங்களில் தள்ளு வண்டிகளை நிறுத்தவும், தரையில் அமர்ந்து வியாபாரம் செய்யவும் போலீசார் தடை விதிக்க வேண்டும். இவர்களுக்கு என பஜார் பகுதியில் தனியாக இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும்.

    வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தள்ளுவண்டிகளை நிறுத்துவதால் அந்த தள்ளுவண்டியில் விற்பனையாகும் பொருட்களை வாங்க வரும் வாடிக்கையாளரும் அதே பகுதியில் வாகனத்துடன் நிற்பதால் அங்கு அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை போலீசார் கண்டு கொள்வதில்லை.

    இதனால் அந்த பகுதியில் நிறுத்தப்படும் தள்ளுவண்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் தள்ளுவண்டிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. தேரடியில் இருந்து திருத்தங்கல் நோக்கி செல்லும் பாதையையும் ஒரு வழி பாதையாக போலீசார் அறிவித்து அது நடை முறையில் உள்ளது. இதனால் பெரும்பாலான வாகனங்கள் தற்போது சிவன் கோவில் வழியாக சென்று எண்ணைக் கடை முக்கு வழியாக வந்து பின்னர் அங்கிருந்து முருகன் கோவில் வழியாக திருத்தங்கல் ரோட்டை அடைகிறார்கள். போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்த போலீசார் சிவன் கோவில் அருகில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வரும் தள்ளுவண்டிகாரர்களையும், தரையில் அமர்ந்து வியாபாரம் செய்வர்களையும் கண்டு கொள்வதில்லை.

    இவர்களுக்கு என அந்த பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி கொடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும். சிவன் கோவில் அருகில் உள்ள 2 அடி பாதையில் வாகனங்கள் எதிர், எதிர் திசையில் வருவதால் அந்த பகுதியில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதை தவிர்க்க போலீசார் அந்த பகுதியை ஒருவழி பாதையாக அறிவிக்க வேண்டும். மேலும் ரத வீதிகளில் தினமும் ஒரு புது கட்டிடத்துக்கு அனுமதி வழங்கும் சிவகாசி நகராட்சி நிர்வாகம் அந்த புதிய கட்டிடத்தில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்க வலியுறுத்துவது இல்லை. கட்டிட வரைப்படத்துக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் அந்த வணிக நிறுவனத்தில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை இனி வரும் காலத்தில் கவனித்து அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சிவகாசியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தாயில்பட்டி:

    ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை மேக மூட்டமாக இருந்தது. பின்னர் மதியம் சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்தது. இதையடுத்து பலத்த மழையாக 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராஜபாளையத்தில் கட்டிடத்தின் அடிபகுதியில் நீர்கசிவு ஏற்பட்டு வணிகர்கள் பாதிப்பு அடைந்துள்ளது. கடைகளில் நீரூற்று வருவதால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகளும் அவதிப்படுகின்றனர்.

    அதேபோல வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாப்பட்டி, சேது நாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் மேலக்கோபாலபுரம், வ.புதுப்பட்டி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு சாரல் மழை தொடங்கியது.

    இந்த சாரல் மழையானது நேற்று அதிகாலை 4 மணி வரை பெய்தது. பின்னர் மீண்டும் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய சாரல் மழை மதியம் 1 மணி வரை நீடித்தது. தற்போது பெய்து வரும் சாரல் மழையால் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விஜய கரிசல்குளம், வன மூர்த்தி லிங்கபுரம், மடத்துப்பட்டி, சங்கரபாண்டியபுரம், குகன்பாறை, வல்லம்பட்டி, கோட்டப்பட்டி, பேர நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து கொண்டு வருகிறது. ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    தொடர்மழையினால் கீழ சத்திரம் கிராமத்தில் உள்ள ஊருணி நிரம்பியது. வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த விளாமரத்துபட்டியில் காளியம்மன் கோவில் தெருவில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் இருந்த 20 குடும்பத்தை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 22 ஆயிரத்து 578 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 15 ஆயிரத்து 958 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15,616 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 2,805 பேரின் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை.

    115 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தபடவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 983 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட சுகாதாரத்துறை 1,318 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 2,800-க்கும் மேற்பட்டவர்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் திடீரென நேற்று நோய் பாதிப்பு 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படாதது தான் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. மாவட்ட சுகாதார துறையினர் தொடர்ந்து நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பற்றிய விவரங்களை தெரிவிக்காததால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் மாவட்ட சுகாதாரத்துறையினர் நடைமுறையை மாற்றுவதற்கு தயாராக இல்லை.

    தற்போது ராஜபாளையம் தென்றல் நகர் பகுதி மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரமும் இப்பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதா என தெரியாத நிலை உள்ளது.

    இனிவரும் நாட்களிலாவது மாவட்ட நிர்வாகம் தொடக்க காலத்தில் இருந்ததை போல நோய் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் விவரங்களை தெரிவித்து அந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பொது இடங்களில் அரசு அறிவித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டையில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய வேளாண் திருத்தச்சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முத்தாலம்மன் பஜார் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் ஜெயக்குமார், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்திரபாண்டியன் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50 பேரை அருப்புக்கோட்டை நகர போலீசார் கைது செய்தனர்.

    சாத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் விஜயகுமார் தலைமையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் பழனிக்குமார் முன்னிலையில் முக்குராந்தலில் இருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று, தபால் அலுவலகம் முன்பு விவசாயிகள் வேளாண் சட்ட திருத்த நகலை எரித்தனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தபால்நிலையத்தை முற்றுகையிட்டு மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் பாரத், மாதர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை, ஒன்றிய செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல ராஜபாளையத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட அமைப்பாளர் அம்மையப்பன், மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 152 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.
    சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    திருப்பூர் மாவட்டம் பல வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 20). கட்டிட தொழிலாளியான இவர் விருதுநகர் அய்யன் கோவில் பகுதியை சேர்ந்த தனது உறவினரான 15 வயது சிறுமியை காதலித்து வந்த நிலையில் அவரை கடத்திச்சென்று திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிரபாகரன் தான் திருமணம் செய்துகொண்ட 15 வயது சிறுமியுடன் புதுச்சேரியில் வசிப்பதாக தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு விருதுநகர் காப்பகத்தில் சேர்த்தனர். சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக பிரபாகரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    காரியாபட்டி அருகே தங்க நாணயங்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரியன் (வயது 48). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 105 கிராம் தங்க நாணயங்கள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் ஆவியூர் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆவியூர் போலீசார் சூரியனின் பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சூரியன் வீட்டிலிருந்து 90 கிராம் தங்க நாணயங்களை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    தொடர்மழையினால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய் வேகமாக நிரம்புகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இந்த பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் உள்ள கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வந்தன. அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்த தண்ணீர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்தது.

    இதனால் பெரியகுளம் கண்மாய் தற்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த கண்மாயில் இருந்து வரும் தண்ணீர் மூலம் 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது தொடர்மழை பெய்ததால் பெரியகுளம் கண்மாயில் 70 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பி உள்ளது. இன்னும் 30 சதவீத தண்ணீர் வந்தால் பெரிய கண்மாய் நிரம்பி விடும்.

    ஆனாலும் இந்த 70 சதவீதம் தண்ணீர் சுமார் 4 மாதங்களுக்கு கண்மாயில் தேங்கி நிற்கும். வேகமாக பெரிய குளம் கண்மாய் நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பருத்தி, சூரியகாந்தி பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
    ஆலங்குளம்:

    விருதுநகர் மாவட்டத்தில் ஆலங்குளம், கொங்கன்குளம், டி.கரிசல்குளம், வலையப்பட்டி மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ஏ. லட்சுமியாபுரம், கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில் பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி இ.டி.ரெட்டியபட்டி, முத்துசாமியாபுரம், குண்டாயிருப்பு, கண்டியாபுரம், கோமாளிபட்டி, மேல பழையாபுரம், கீழபழையாபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு வரை விட்டு, விட்டு பெய்தது.

    இந்த மழை பருத்தி, சூரியகாந்தி ஆகிய பயிர்களுக்கு நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். அதேபோல தளவாய்புரம், சேத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டமாக இருந்தது. மாலையில் மழை பெய்தது. தாயில்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். அதேபோல சேதமடைந்த சாலையில் வாகனஓட்டிகளும், மக்களும் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
    வத்திராயிருப்பு அருகே முதியவரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே உள்ள எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் விக்கிரமாதித்தன் (வயது30). இவர் அதே பகுதியில் உள்ள விளாங்குடி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது முத்துச்செல்வம் (19), கருப்பசாமி (19), அஜித் (19), ராசுக்குட்டி (19) ஆகிய 4 பேரும் அங்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது விக்கிரமாதித்தனை, அவர்கள் 4 பேரும் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

    பின்னர் அந்த 4 பேரும் ஊருக்குள் உள்ள சமுதாய சாவடி முன்பு நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு விக்ரமாதித்தனின் தந்தை பெரிய போத்தி (70) வந்துள்ளார். அவரிடம் அந்த 4 பேரும் தகராறில் ஈடுபட்டு பெரிய போத்தியை அரிவாளால் வெட்டியதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பெரிய போத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித், முத்துச்செல்வம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கருப்பசாமி, ராசுகுட்டி ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    காரியாபட்டி அருகே தொடர்மழையால் வெங்காய பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி அருகே சொக்கனேந்தல், சித்தனேந்தல், எஸ்.மறைக்குளம், பெரிய ஆலங்குளம், எஸ்.தோப்பூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது வெங்காய பயிர்கள் வளர்ந்து விளைந்து மகசூல் தரும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெங்காய பயிர்கள் அழுகியும், திருகல் நோய் தாக்கியும் சேதமடைந்து வருகிறது.

    இதுகுறித்து சொக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்தையா கூறியதாவது:-

    எங்களது பகுதியில் ஆண்டுதோறும் வெங்காயத்தை பயிரிட்டு வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு இந்த பகுதியில் பெய்த தொடர்மழையினால் வெங்காயம் பயிர்கள் அழுகி சேதமாகி விட்டது. மேலும் திருகல் நோயினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளோம். நடவு, உரம், மருந்து என ஒரு ஏக்கர் வெங்காயம் சாகுபடி செய்ய குறைந்தது ரூ.50 ஆயிரம் வரை செலவு ஆகிறது.

    நான் 4 ஏக்கர் வெங்காயம் பயிரிட்டுள்ளேன். இதில் நான் சாகுபடி செய்துள்ள வெங்காய பயிர்கள் முற்றிலும் அழுகிய நிலையில் பாதிப்படைந்துவிட்டது. இதனால் ரூ.2 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    எங்களது பகுதிக்கு வெங்காய பயிர்களுக்கு காப்பீடு செய்ய முடியவில்லை. காப்பீடு செய்தாவது இழப்பை சரி செய்து கொள்ளலாம் என்றாலும் அதற்கும் வழியில்லை. எனவே சேதமடைந்த விவசாயிகளை காப்பாற்ற அரசு போதுமான நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புரெவி புயல் காரணமாக சாஸ்தா கோவில் அணையை ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    தளவாய்புரம்:

    சேத்தூர் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் அணை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. கடந்த மாதம் இந்த அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது அணையில் பாதி அளவு நீர் இருப்பு உள்ளது.

    புரெவி புயல் காரணமாக சாஸ்தா கோவில் அணையை நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுமதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் கண்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காசி செல்வி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஜான்சி அனிதா, ராஜபாளையம் தாசில்தார் ஸ்ரீதர், சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு உள்பட பலர் உடன் சென்றனர். அணையின் நீர் வரத்து, தற்போது அணையில் நீர் இருப்பு பற்றி ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
    விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 708 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 928 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 15 ஆயிரத்து 586 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,398 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 115 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் நேற்று மேலும் 14 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,300-க்கும் மேற்பட்டோருக்கு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அரசு அறிவித்தபடி மாவட்ட சுகாதார துறையினர் பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் பாதிப்படைந்த பகுதிகளின் விவரமும் தெரிவிக்கப்படாததால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் நடந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. மாநில சுகாதார துறையின் பட்டியலின்படி மாவட்டத்தில் 356 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலையில் மாவட்ட சுகாதாரத்துறை 115 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பாதிப்பு ஏற்பட்ட 255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்களா அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரா அல்லது சுகாதாரத் துறையினர் முறையாக கண்காணிக்காததால் அவர்கள் சிகிச்சை ஏதும் பெறாத நிலையில் உள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை. இந்த நடைமுறை மாவட்டத்தில் குறிப்பாக கிராமப் பகுதிகளில் நோய் பரவலை அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்தும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தினசரி நோய் பாதிப்படைந்த பகுதிகளின் விவரங்களை முழுமையாக வெளியிடவும், பாதிப்பு அடைந்தவர்களை சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் தொடக்க காலத்தில் செய்தது போன்று அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுப்பவும் அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    மேலும் பொது இடங்களில் நோய்தடுப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றவும் உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
    ×