என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் உள்பட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தாயில்பட்டி:

    சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  இதையொட்டி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பறக்கும் படையினர், 3 நிலை கண்காணிப்பு குழுவினர் உள்பட 18 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலை, சிவகாசியில் இருந்து கழுகுமலை செல்லும் மெயின் ரோடு, சாத்தூரிலிருந்து தாயில்பட்டி வழியாக சிவகாசி செல்லும் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஏழாயிரம்பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் போத்திராஜ் உள்ளிட்ட கண்காணிப்புக்குழுவினர் வாகனங்கள் மற்றும் பட்டாசு ஆலைக்கு சொந்தமான வேன்களிலும் முழுமையாக சோதனை நடத்தினார். இந்த சோதனைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
    சிவகாசி பகுதியில் சுமார் 800 அச்சகங்கள் உள்ளன. இதில் சுமார் 50 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
    சிவகாசி:

    அச்சுத்தொழிலில் உப தொழில்களான லேமினேஷன், ஸ்கோரிங் உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. சிவகாசியில் அச்சடிக்கப்படும் அச்சுப்பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு சிவகாசியிலிருந்து பள்ளி நோட்டுப்புத்தகம், பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக அச்சு காகிதம் மற்றும் காகித அட்டை ஆகியவை கடுமையாக விலை உயர்ந்து வருவதால் சிவகாசியில் அச்சு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து நேற்று சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இந்தியாவில் காகித தேவை அதிகமாக உள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்ய வேண்டும் என்றனர். அப்போது சிவகாசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசோகனுக்கு ஆதரவு கேட்டு மாணிக்கம் தாகூர் எம்.பி. சென்றார்.

    அவரிடம் அச்சக அதிபர்கள் தங்கள் பிரச்சினைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்.பி, உங்கள் பிரச்சினைகளை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றார்.
    அருப்புக்கோட்டை அருகே புகையிலை பொருட்களை விற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து போலீசார் காசுகடை பஜார், பெரியகடை பஜார், சந்திவீரன் கோவில் தெருவில் உள்ள கடைகளில் சோதனையிட்டனர். 

    இதில் 756 கிலோ எடைகொண்ட ரூ.2 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து புகையிலை பொருட்களை விற்ற கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன் (வயது44), கண்ணன் (46), முத்து முருகன் (34), நவநீதன்(34), பாக்கியராஜ் (52), சிவராமன் (51) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் வாக்கு சாவடி பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்பட்டு தபால் வாக்குப் பதிவு சேவைமையம் அமைக்கப்பட்டதாக கலெக்டர்கண்ணன் தெரிவித்தார் .
    விருதுநகர்:

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்றும் 11,376 வாக்குச்சாவடி பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் 7 மையங்களில் நடைபெற்றது.

    இப்பயிற்சி வகுப்பினை ஆய்வு செய்த பின் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

    நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு மாவட்டத்திற்குட்பட்ட 7 தொகுதிகளில் மொத்தம் 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட கூடிய 11 ஆயிரத்து 376 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    வாக்குசாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் சட்டமன்ற தொகுதி வாரியாக பணி ஒதுக்கீடு பொதுபார்வையாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

    வாக்குச்சாவடி பணியில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டாம் நிலை பயிற்சியில் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் எந்திரங்களை பயன்படுத்தும் வாக்குப்பதிவு படிவங்களை பூர்த்தி செய்தல் மற்றும் அமைதியான வாக்குப்பதிவினை நடத்துவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகள் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.

    முதற்கட்ட பயிற்சியின்போது அவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான 12 டி படிவம் வழங்கப்பட்டது.

    நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் தபால் வாக்கு சீட்டு வழங்கப்பட்டது. மேலும் தபால் வாக்குகளில் பதிவு செய்து உரிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க ஏதுவாக தபால் வாக்குப் பதிவு சேவை மையம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்குசாவடி அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் வாக்குப்பதிவு செய்வது குறித்து செயல்விளக்கம் அளித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கண்ணன் கூறினார்.

    இதில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், ராஜபாளையம் கல்யாண்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் முருகன், விருதுநகர் சந்தான லட்சுமி, சாத்தூர் புஷ்பா, அருப்புக்கோட்டை முருகேசன், திருச்சுழி கணேசன் மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 21-ந் தேதி வெளியிடப்பட்டது.

    மாவட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் 2,38,701 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 580 வாக்காளர்களும், சிவகாசி தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 941 வாக்காளர்களும், சாத்தூர் தொகுதியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 502 வாக்காளர்களும், விருதுநகர் தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 327 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 980 வாக்காளர்களும், திருச்சுழி தொகுதியில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 720 வாக்காளர்களும் ஆக மொத்தம் 7 தொகுதிகளிலும் 16 லட்சத்து 68 ஆயிரத்து 751 வாக்காளர்கள் இருந்தனர்.

    இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெளியான இணைப்பட்டியலின்படி 7 தொகுதிகளிலும் புதிதாக 2,245 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    இந்தநிலையில் தற்போது 7 தொகுதிகளிலும் 16 லட்சத்து 70ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    இவர்களில் 18 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் 41 ஆயிரத்து 489 பேரும், 20 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட 3 லட்சத்து 45 ஆயிரத்து 666 பேரும், 30 வயது முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 69 ஆயிரத்து 679 பேரும், 40 வயது முதல் 49 வயது வரை உள்ளவர்கள் 3 லட்சத்து 51 ஆயிரத்து 28 பேரும் ஆவர்.

    அதேபோல 50 முதல் 59 வயதுவரை உள்ளவர்கள் 2 லட்சத்து 75 ஆயிரத்து 774 பேரும், 60 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரத்து 665 பேரும், 70 வயது முதல் 79 வயது உள்ளவர்கள் 88 ஆயிரத்து 612 பேரும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 ஆயிரத்து 93 பேர் என ஆக மொத்தம் 16 லட்சத்து 70 ஆயிரத்து 996 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்களில் 18 வயது முதல் 19 வரை உள்ள 41 ஆயிரத்து 459 பேரும் 20 வயது முதல் 22 வயது வரை உள்ள சுமார் ஒரு லட்சத்து 616 பேரும் என மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 505 வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    2016-ம் ஆண்டு தேர்தலில் 7 தொகுதிகளிலும் 15 லட்சத்து 40 ஆயிரத்து 318 வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரம் முதல் முறை வாக்காளர்களும் இருந்தனர். இந்தநிலையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் முதல் முறை வாக்களிக்க உள்ள ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 505 வாக்காளர்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக இருப்பார்கள் என கருதப்படும் நிலையில் வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் அவர்களது ஆதரவை பெறுவதில் முனைப்புடன் ஈடுபட்டு உள்ளனர்.

    அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    அருப்புக்கோட்டை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந்் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலை, பாளையம்பட்டி விலக்கு, பந்தல்குடி விலக்கு ஆகிய பகுதிகளில் அருப்புக்கோட்டை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தையும் தேர்தல் பறக்கும் படையினர் 3 குழுக்களாக பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பாளர் முத்து சரவணகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம், தலைமை காவலர் முருகேஸ்வரி மற்றும் பறக்கும் படை குழுவை சேர்ந்தவர்கள் பாலையம்பட்டி நான்கு வழிச்சாலை விலக்கு வழியாக அருப்புக்கோட்டை நகருக்குள் வரும் வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    வாகன சோதனைகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
    தொடர் விபத்து நடைபெறுவதால் பட்டாசு ஆலைகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என அதிகாரி கூறினார்.
    சிவகாசி:

    சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

    கடந்த மாதம் சாத்தூர், சிவகாசி ஆகிய இடங்களில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 30 பேர் பரிதாபமாக இறந்தனர். அதிகாரிகளின் முதல்கட்ட விசாரணையில் மனித தவறுகள் தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இதை தொடர்ந்து பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாமல் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவதும், போதிய கவனம் செலுத்தாமல் கவனக்குறைவாக வேதிப்பொருட்ளை பயன்படுத்துவது மூலமும் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டது.

    இதைதொடர்ந்து தொழிலாளர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்கவும், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்கவும் மத்தியவெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை முடிவு செய்தது.

    இதனை தொடர்ந்து மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை அதிபர்களை நேரில் வரவழைத்து அதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் தொழிற்சாலைகளில் அதிக இடங் களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்ட வலியுறுத்தினார். அந்த ஸ்டிக்கர்களில் தொழிலாளர்களுக்கு ஆலோசனை கூறும் வாக்கியங்கள் இடம் பெற வேண்டும் என குறிப்பிட்டார்.

    இதை தொடர்ந்து தற்போது சிவகாசியில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    மேலும் பட்டாசு தொழிலாளர்கள் பயணம் செய்யும் வாகனங்களிலும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த முயற்சி நிச்சயம் தொழிலாளர்களுக்கு விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    தமிழக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய கடை பஜார், காசுக்கடை பஜார் மற்றும் சந்திவீரர் தெருக்களில் உள்ள சில கடைகளில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக அருப்புக்கோட்டை நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அந்த கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ரூ.2,73,600 மதிப்பிலான 256 கிலோ குட்கா மற்றும் ரூ.27 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் ராஜேந்திரன், கண்ணன், முத்துமுருகன், நவநீதன், பாக்கியராஜ், சிவராமன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 லட்சம் பணத்துடன் வாகனம் சிக்கியது. அது வங்கி பணம் என ஆவணங்களை ஒப்படைத்ததால் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மல்லி பகுதியில் துணை தாசில்தார் முத்துமாரி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வங்கிக்கு பணம் கொண்டு செல்லும் வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தின் உள்ளே 5 பெட்டிகள் இருந்தன.

    அதனை திறந்து காட்ட சொன்ன போது சாவிகள் இல்லை என வாகனத்தில் வந்தவர்கள் கூறினர்.இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு அந்த வாகனத்தை கொண்டு வந்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அந்த பணம் கோவில்பட்டி வங்கியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வங்கி மற்றும் சில வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதாகவும் அதில் ரூ.92 லட்சம் இருப்பதாகவும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சாவிகள் கொண்டு வரப்பட்டது.

    அதன்பின்னர் பெட்டிகள் திறக்கப்பட்டு பணத்தை தேர்தல் அதிகாரி முருகன் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர். அதில் ரூ.92 லட்சம் இருந்தது. இதை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இருந்ததால் வங்கி அதிகாரி வாகனத்துடன் பணத்தை எடுத்து செல்ல தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.

    உரிய ஆவணங்கள் இருந்தும் சாவி இல்லாததால் சந்தேகத்தினால் ரூ.92 லட்சம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஊழியர் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தில் பெத்து செட்டியபட்டியை சேர்ந்த ஆனந்த் (வயது 38) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

    இந்த ஆலை மாவட்ட வருவாய் அதிகாரி உரிமம் பெற்றது. இந்த ஆலையில் நேற்று வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்றது. மருந்து கலக்கும் அறையில் தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சங்கரலிங்கம் (30) என்ற ஊழியர் மட்டும் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென மருந்து கலக்கும் அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறை இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் இருந்த ஊழியர் சங்கரலிங்கம் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மற்ற அறைகளில் இருந்த ஊழியர்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் தப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருதுநகர் தீயணைப்பு படையினர், தீயணைப்பு நிலைய அதிகாரி மாரியப்பன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிக்கிடந்த சங்கரலிங்கத்தின் உடலை மீட்டனர்.

    வெடிவிபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத்துறை கோட்ட அதிகாரி கணேசன் விசாரணை நடத்தினார். அதேபோல போலீஸ் அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    கல்வியை, கண்டவர் கையில் கொடுத்துவிட்டு சாராயத்தை பாதுகாப்பாக விற்கிறார்கள் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அருப்புக்கோட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி. உங்களுக்கு வேலை செய்வதற்காக வந்துள்ளோம். உயர்ந்த நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படும், இலவசங்கள் கிடையாது. ஏனெனில் இலவசங்களால் ஏழ்மையை போக்க முடியாது.

    நாம் வறுமையற்ற அருப்புக்கோட்டையை உருவாக்குவோம். நான் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரம் செய்வதாக கூறுகிறார்கள். எனது சொந்த செலவில் நான் ஹெலிகாப்டரில் செல்கிறேன்.

    கஜா புயலைப் பார்வையிட்டது போல் மக்கள் பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை.  நமது வேட்பாளர்கள் உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளார்கள். இவர்களுக்கு நான் பல்லக்கு தூக்குவேன். என் தோளில் சுமப்பேன்.

    எனது வாக்குறுதிகளை ஸ்டாலின் அப்படியே எடுத்துக் கூறுகிறார். மிகுந்த பசியில் உள்ள அவர்கள் இரட்டை இலையில் கூட சாப்பிடுவார்கள்.

    திரைப்பட வாய்ப்பை விட்டு வந்ததால் எனக்கு ரூ.300 கோடி நஷ்டம் அல்ல. வருமானத்தை விட்டு விட்டு வந்துள்ளேன். அ.தி.மு.க. இடையூறு செய்யாமல் இருந்திருந்தால் எனது வருமானத்தை ரூ.250 கோடியாக காட்டியிருப்பேன்.

    ஆட்சியாளர்கள் பெரும் தொகையை எடுத்துக் கொண்டு இலவசங்கள் என்ற பெயரில் சில்லறையை வீசுகிறார்கள்.

    உங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்று கூறுங்கள். அல்லது ரூ.5 லட்சம் கேளுங்கள். சலுகைகளை கொடுத்தால் அதை திருப்பி வாங்க டாஸ்மாக் என்ற கல்லாப் பெட்டியை வைத்துள்ளார்கள்.

    கல்வியை, கண்டவர் கையில் கொடுத்துவிட்டு சாராயத்தை பாதுகாப்பாக விற்கிறார்கள். இங்கு படிப்புக்கு மதிப்பில்லாமல் போகிறது. எனவே இளைஞர்களின் திறனை மேம்படுத்த செய்ய வேண்டும்.

    திறன் மேம்பாட்டு மையம் அமைப்பது இந்தியாவின் புதிய சத்தியாகிரகம். மனிதவளம் தங்கத்தை விட மதிப்பு மிக்கதாக உயர்த்தப்பட வேண்டும்.

    வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தால் தமிழன் வெல்வான். நாங்கள் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம்.

    தமிழகத்தை கட்டமைக்க தேவையான அஸ்திவாரம் நேர்மை என்பதாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வருகிற 26-ந்தேதி பிரதோ‌ஷம் மற்றும் 28-ந்தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் பிரசித்தி பெற்றது. மலைமேல் உள்ள கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோச நாட்களில் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    அதன்படி வருகிற 26-ந் தேதி பிரதோ‌ஷம் மற்றும் 28-ந் தேதி பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அனுமதி கிடையாது.

    அவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். மலை அடிவாரத்தில் 26-ந் தேதி காலை 7 மணி முதல் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மலையேற அனுமதிக்கப் படுவார்கள். பிற்பகல் ஒரு மணிக்கு பின் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதி இல்லை.

    மேற்கண்ட நாட்களில் கோவிலில் தங்கவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் வருகையையொட்டி அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வ நாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×