என் மலர்
விருதுநகர்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டியது.
இதனால் ராஜபாளையத்துக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரி அதன் முழு கொள்ளளவான 18 அடியை எட்டி நிரம்பியது. மழை காரணமாக அய்யனார் கோவில் ஆறு, முள்ளியாறு, பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
இதேபோல் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. தேவதானம் பகுதியில் பெய்த மழையால் சாஸ்தா கோவில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. திடீர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருவதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தில் தேசிங்குராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் உரிமம் பெற்றது. இங்கு நேற்று காலை வழக்கம்போல பட்டாசு தயாரிப்பு பணி தொடங்கியது. ஒரு அறையில் தொழிலாளர்கள் சரவெடியினை பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது உராய்வு ஏற்பட்டதால் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஆனையூரைச்சேர்ந்த ஆதிலட்சுமி (வயது 35), செந்தில் (35), முத்துமாரி (37), அய்யம்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் (40) ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு 70 முதல் 100 சதவீதம் வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மற்ற அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணியில் இருந்த தொழிலாளர்கள் வேகமாக வெளியேறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சிவகாசி மற்றும் விருதுநகரிலிருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த 4 பேரும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆதிலட்சுமி பலியானார். இந்த விபத்தில் அறைகள் எதுவும் சேதமடையவில்லை.
வெடி விபத்து குறித்து வாடியூர் கிராம நிர்வாக அதிகாரி மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் பட்டாசு ஆலை உரிமையாளர் தேசிங்கு ராஜா, போர்மேன் தங்கேஸ்வரன் மற்றும் மேற்பார்வையாளர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (வயது 45). ராஜபாளையம் ஒன்றியம் 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.
நேற்று இவர் தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணாபுரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மூலக்கரை விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
வழியில் அவரை சுற்றி வளைத்த 3 பேர் கொண்ட கும்பல் அண்ணாமலை ஈஸ்வரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், சேத்தூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அண்ணாமலை ஈஸ்வரன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை கொன்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த குழந்தைவேல்குமார் (22), ஜெகதீஸ்வரன் (22), மதியழகன் ராஜா (26) ஆகிய 3 பேரும் சேத்தூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அண்ணாமலை ஈஸ்வரன் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைக்கனி (20). கபடி வீரரான இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு தாமரைக்கனி வந்தார். கல்லூரி மாணவராக இருந்த போதிலும் இவர் விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசிப்பது வழக்கம்.
அதேபோல் அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தாமரைக்கனி டிரம்ஸ் வாசிக்க சென்றார். அப்போது அந்த திருமணத்திற்கு வந்த அண்ணாமலை ஈஸ்வரன் மகன்கள் கணேஷ்குமார், செந்தில்குமார், பெரியப்பா மகன் கணபதி சங்கர் ஆகியோர் தாமரைக்கனியை பார்த்து கேலியும், கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தாமரைக்கனி அவர்களை திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. ஏப்ரல் மாதம் 7-ந் தேதி 3 பேரும் சேர்ந்து தாமரைக்கனியை கொலை செய்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக அண்ணாமலை ஈஸ்வரன், அவரது மகன்கள் கணேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் உறவினர் கணபதி சங்கர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நவம்பர் மாதம் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
அதன் பிறகு உயிருக்கு பயந்து அண்ணாமலை ஈஸ்வரன் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.
தேர்தல் அன்று ஓட்டு போடுவதற்காக அவர் சொந்த ஊர் திரும்பினார். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ராஜபாளையம் கிருஷ்ணா புரம் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அவர் சென்றார்.
கோவிலுக்கு செல்ல அவர் வயல் வெளி பகுதியில் நடந்து சென்றார். இதை அறிந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனியின் நண்பர்கள் குழந்தைவேல் குமார், ஜெகதீஸ்வரன், மதியழகன் ராஜா ஆகியோர் அண்ணாமலை ஈஸ்வரனை பின் தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.
நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க இந்த கொலையில் அவர்கள் ஈடுபட்டதாக போலீசாரிடம் கைதானவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கல்லூரி மாணவர் தாமரைக்கனி கொலை செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா மலை ஈஸ்வரனை தாமரைக் கனியின் நண்பர்கள் பழித்தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கைதானவர்களிடம் இருந்து போலீசார் கொலைக்கு பயன் படுத்தப்பட்ட 3 அரிவாள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்கு பழியாக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் கொரோனா பாதிப்பு தாக்கத்தால் மனவேதனை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் கடும் வெயிலால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்ட நிலையில் குடிநீர் பிரச்சினையும் கடுமையாகி விட்டது. மாவட்டத்தில் அனைத்து நகர் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒருபுறமிருந்தாலும், குடிநீர்தேவைக்கு நிலத்தடி நீரையே பிரதானமாக நம்பியிருக்கும் நிலை உள்ளது.
ஆனால் மழை பொய்த்து விட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையிலும் குடிநீர் கிடைக்காமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் குடிநீர் பிரச்சினை மேலும் கடுமையாகி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மதியம் எதிர்பாராத வகையில் 1 மணி நேரம் விருதுநகரில் மழை கொட்டித்தீர்த்தது. பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெள்ளமெனபெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பொதுமக்களும், வாகனங்களும், பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
ஏற்கனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தந்த போதிலும் முறையாக இந்த வடிகால் அமைக்கப்படாததால் தொடர்ந்து மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது. ஆனாலும் சமீப காலமாக மழை பெய்யாத நிலையில் பொது மக்களுக்கு இந்த சிரமம் தெரியவில்லை. நேற்று திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் பெருக்கெடுத்த மழைநீரில் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
நகராட்சி நிர்வாகம் நகரில் பஸ் நிலையத்தை சுற்றிலும், மற்ற சாலைகளிலும் மழை நீர் வடிவதற்கு முறையான வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் பல நீர்நிலைகள், கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்தால் தான் நீர்நிலைகளில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது. இல்லையேல் இம்மாவட்டத்தில் குடிநீர் வினியோகமும், பாசன வசதியும் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் மழை பெய்யும் காலங்களிலாவது நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கிநிற்க நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் நேற்று பெய்த மழை பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க உதவியது.
அதேபோல அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு கொரோனாதொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 17,224ஆகஉயர்ந்துள்ளது.
இதுவரை 16,779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 279 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 234 பேர் நோய் பாதிப்பிற்கு பலியாகி உள்ளனர்.
கொரோனா பாதிப்பை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் கொரோனா பாதிப்பை தடுப்பது தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் தலைமை தாங்கினார்.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 76 ரேஷன் கடைகளை சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.
ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் முக கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும்.
அதே போல் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கும்போது குடும்ப உறுப்பினர்கள் ஒருவரின் கைரேகை பதித்து பொருட்கள் வழங்க வேண்டும்.
வயது முதிர்ந்தவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க வரும்போது அவர்களுடைய ரேகை பதிவு ஆகா விட்டால் கூட பதிவேடு மூலம் கையெழுத்து பெற்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 100 சதவீத கைரேகை பதித்து பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறியதாவது:- கொேரானா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு கூறிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 17,152 ஆக உயர்ந்துள்ளது. 16,695 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 263 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நோய் பாதிப்பால் 234 பேர் பலியாகி உள்ளனர்.






