search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 3 வாலிபர்கள்.
    X
    கைதான 3 வாலிபர்கள்.

    ராஜபாளையம் அருகே திமுக கவுன்சிலர் கொலை: கைதான 3 பேர் வாக்குமூலம்

    ராஜபாளையம் அருகே முன்விரோத தகராறில் தி.மு.க. கவுன்சிலர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை ஈஸ்வரன் (வயது 45). ராஜபாளையம் ஒன்றியம் 15-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வந்தார்.

    நேற்று இவர் தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணாபுரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மூலக்கரை விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    வழியில் அவரை சுற்றி வளைத்த 3 பேர் கொண்ட கும்பல் அண்ணாமலை ஈஸ்வரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் உடல் முழுவதும் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர், சேத்தூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அண்ணாமலை ஈஸ்வரன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவரை கொன்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த குழந்தைவேல்குமார் (22), ஜெகதீஸ்வரன் (22), மதியழகன் ராஜா (26) ஆகிய 3 பேரும் சேத்தூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அண்ணாமலை ஈஸ்வரன் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைக்கனி (20). கபடி வீரரான இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு தாமரைக்கனி வந்தார். கல்லூரி மாணவராக இருந்த போதிலும் இவர் விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சிகளில் டிரம்ஸ் வாசிப்பது வழக்கம்.

    அதேபோல் அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தாமரைக்கனி டிரம்ஸ் வாசிக்க சென்றார். அப்போது அந்த திருமணத்திற்கு வந்த அண்ணாமலை ஈஸ்வரன் மகன்கள் கணேஷ்குமார், செந்தில்குமார், பெரியப்பா மகன் கணபதி சங்கர் ஆகியோர் தாமரைக்கனியை பார்த்து கேலியும், கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தாமரைக்கனி அவர்களை திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. ஏப்ரல் மாதம் 7-ந் தேதி 3 பேரும் சேர்ந்து தாமரைக்கனியை கொலை செய்தனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக அண்ணாமலை ஈஸ்வரன், அவரது மகன்கள் கணேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் உறவினர் கணபதி சங்கர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நவம்பர் மாதம் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    அதன் பிறகு உயிருக்கு பயந்து அண்ணாமலை ஈஸ்வரன் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.

    தேர்தல் அன்று ஓட்டு போடுவதற்காக அவர் சொந்த ஊர் திரும்பினார். நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி ராஜபாளையம் கிருஷ்ணா புரம் விநாயகர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக அவர் சென்றார்.

    கோவிலுக்கு செல்ல அவர் வயல் வெளி பகுதியில் நடந்து சென்றார். இதை அறிந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனியின் நண்பர்கள் குழந்தைவேல் குமார், ஜெகதீஸ்வரன், மதியழகன் ராஜா ஆகியோர் அண்ணாமலை ஈஸ்வரனை பின் தொடர்ந்து சென்று அரிவாளால் வெட்டிக் கொன்றது தெரியவந்தது.

    நண்பர் கொலைக்கு பழிக்கு பழி வாங்க இந்த கொலையில் அவர்கள் ஈடுபட்டதாக போலீசாரிடம் கைதானவர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந்தேதி கல்லூரி மாணவர் தாமரைக்கனி கொலை செய்யப்பட்டார். அதேபோல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அண்ணா மலை ஈஸ்வரனை தாமரைக் கனியின் நண்பர்கள் பழித்தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கைதானவர்களிடம் இருந்து போலீசார் கொலைக்கு பயன் படுத்தப்பட்ட 3 அரிவாள்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழிக்கு பழியாக கவுன்சிலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×