search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதையும், அதில் செல்பவர்களையும் படத்தில் காணலாம்.
    X
    விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதையும், அதில் செல்பவர்களையும் படத்தில் காணலாம்.

    விருதுநகரில் திடீர் மழை - வெயிலின் தாக்கத்தை தவிர்க்க உதவியது

    விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் கொரோனா பாதிப்பு தாக்கத்தால் மனவேதனை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் கொரோனா பாதிப்பு தாக்கத்தால் மனவேதனை அடைந்துள்ள நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் கடும் வெயிலால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு விட்ட நிலையில் குடிநீர் பிரச்சினையும் கடுமையாகி விட்டது. மாவட்டத்தில் அனைத்து நகர் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒருபுறமிருந்தாலும், குடிநீர்தேவைக்கு நிலத்தடி நீரையே பிரதானமாக நம்பியிருக்கும் நிலை உள்ளது.

    ஆனால் மழை பொய்த்து விட்ட நிலையிலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையிலும் குடிநீர் கிடைக்காமல் தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் குடிநீர் பிரச்சினை மேலும் கடுமையாகி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று மதியம் எதிர்பாராத வகையில் 1 மணி நேரம் விருதுநகரில் மழை கொட்டித்தீர்த்தது. பஸ்நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் முறையாக அமைக்கப்படாததால் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெள்ளமெனபெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் பொதுமக்களும், வாகனங்களும், பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

    ஏற்கனவே விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தந்த போதிலும் முறையாக இந்த வடிகால் அமைக்கப்படாததால் தொடர்ந்து மழை நீர் வடிவதற்கு வாய்ப்பில்லாத நிலை உள்ளது. ஆனாலும் சமீப காலமாக மழை பெய்யாத நிலையில் பொது மக்களுக்கு இந்த சிரமம் தெரியவில்லை. நேற்று திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் பெருக்கெடுத்த மழைநீரில் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

    நகராட்சி நிர்வாகம் நகரில் பஸ் நிலையத்தை சுற்றிலும், மற்ற சாலைகளிலும் மழை நீர் வடிவதற்கு முறையான வடிகால் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மாவட்டத்தில் பல நீர்நிலைகள், கண்மாய்கள் வறண்டு கிடக்கும் நிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தொடர் மழை பெய்தால் தான் நீர்நிலைகளில் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது. இல்லையேல் இம்மாவட்டத்தில் குடிநீர் வினியோகமும், பாசன வசதியும் பெருமளவில் பாதிக்கப்படும். எனவே மாவட்ட நிர்வாகம் மழை பெய்யும் காலங்களிலாவது நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கிநிற்க நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் நேற்று பெய்த மழை பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க உதவியது.

    அதேபோல அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோவிலாங்குளம், காந்திநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
    Next Story
    ×