என் மலர்tooltip icon

    வேலூர்

    • அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும்
    • கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஊசூர்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பள்ளியில் இருந்த பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    மற்ற அரசு பள்ளிகளில் இருப்பது போல் இந்த அரசு பள்ளிக்கும் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிட வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதற்கு பதிலளித்த கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதனை தொடர்ந்து தெள்ளூர் ஊராட்சி, வீராரெட்டிபாளையத்தில் ரூ.3.52 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது தாசில்தார் வேண்டா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, சரவணன், ஊசூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரிகண்ணன், தெள்ளூர் ஊராட்சி தலைவர் தேவிசுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர்
    • ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து உதவி கலெக்டருக்கு பரிந்துரை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல்மலை, நச்சிமேடு மற்றும் பள்ளக்கொல்லை ஆகிய 4 மலை கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பொது மக்களுக்கு பெரும்பாலும் ஜாதி சான்றிதழ் இல்லை.

    மலைவாழ் மக்களுக்கு எளிதில் ஜாதி சான்றிதழ் கிடைக்கும் வகையில், முதல்முறையாக இலவசமாக ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முகாம் நேற்று நடந்தது. குருமலை மலை அடிவாரத்தில் நடந்த இந்த முகாம்க்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தாசில்தார் வேண்டா கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    இதில் ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் 75 பேர் மனு அளித்தனர்.

    படிப்பறிவற்ற ஏழை எளிய மக்கள் ஜாதி சான்றிதழை கேட்டு இணையத்தில் எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் தவித்தனர்.

    இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் தனது சொந்த செலவில், 2 கம்ப்யூட்டர்களை வரவழைத்து அந்த இடத்திலேயே ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார்.

    இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் ஆன்லைன் வழியாக சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஆவணங்களை ஆய்வு செய்து சப்-கலெக்டர்க்கு பரிந்துரை செய்தனர்.

    • ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷாஜ லதா (வயது 36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாஜ லதாவின் தாய் உடல்நல குறைவால் இறந்துவிட்டார். தாய் இறந்தது முதல் ஷாஜலதா யாரிடமும் பேசாமல் விரட்டியில் இருந்து வந்தார்.

    இதனால் அவருக்கு சற்று லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் அரியூருக்கு வந்த ஷாஜ லதா அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று இரவு தனது சகோதரர் லட்சுமி காந்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.

    வாட்ஸ் அப்பில் தகவலை பார்த்த அவரது சகோதரர் அலறியடித்துக் கொண்டு வேலூருக்கு விரைந்து வந்தார். ஷாஜலதா தங்கி இருந்த லாட்ஜ் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜலதா பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்
    • நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், பகுதி செயலாளர் நாராயணன், ஜெயக்குமார், குப்புசாமி, நிர்வாகிகள் ராகேஷ் தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய வேலைவாய்ப்பு கட்டுப்படுத்த திமுக அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் தங்களது கழுத்தில் காய்கறிகளை மாலையாக அணிந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கோஷமிட்டனர்.

    • நாளை தொடங்கி வருகிற ஆகஸ்டு 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது
    • ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர், கோட்டையில் உள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு ஆடி வெள்ளி திருவிழா நாளை தொடங்கி வருகிற ஆகஸ்ட் 25-ந் தேதி வரை 6 வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

    முதலாவது வெள்ளி மஞ்சள் காப்பு அலங்காரமும்,2-வது வெள்ளி குங்குமப்பூ அலங்காரமும்,3-வது வெள்ளி புஷ்ப பாவாடை அலங்காரமும், 4-வது வெள்ளி சந்தன காப்பு அலங்காரமும்,5-வது வெள்ளி மீனாட்சி அலங்காரமும் 6-வது வெள்ளி சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

    மேலும் ஆகஸ்ட் மாதம் 3-ந் தேதி கங்கா பாலா ஈஸ்வரர் 23-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மழைவளம் பெருகி நீர்வளம் பெருகவும், தண்ணீர் பஞ்சம் நீங்கவும் கூட்டு பஞ்சபூத மகா யாகம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் தர்ம ஸ்தாபன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 3 முறை தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    வேலுார்:

    சேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் முன்னாள் ராணுவ வீரர்.

    இவரது மனைவி சொர்ணலதா. தம்பதியினருக்கு லோகேஷ் (21) உட்பட 3 மகன்கள் உள்ளனர்.

    லோகேஷ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்தார்.

    இதற்கிடையில் அவரது தம்பி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் ராணுவத்துக்கு தேர்வு பெற்றார்.

    ஆனால் லோகேஷ் 3 முறை ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டும் தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

    இதனால் விரக்தியடைந்த லோகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் நேரிலோ அல்லது போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் ரேசன் கடை பணியாளர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று விநியோகம் செய்கின்றனர்.

    இதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

    பொதுமக்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் உரிமை தொகை பெறுவது சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது.

    பொதுமக்கள் நேரிலோ அல்லது போன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். உரிமை தொகை விண்ணப்பங்கள், டோக்கன்கள் கிடைக்கவில்லை என்றாலும் அல்லது இந்த திட்டம் குறித்த சந்தேகங்கள் குறித்தும் பொதுமக்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதில் அதிகாரிகள் மூலம் உரிய விளக்கம் அளிக்கப்படும்.

    கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 0416-2258016 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது
    • பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    வேலூர்:

    குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதையடுத்து இன்று முதல் ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 4,58,473 விண்ணப்ப படிவங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 699 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைகள் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வழங்கும் பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல் திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் இன்று வீடு வீடாக டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கினர்.

    • முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
    • சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம்-சித்தூர் சாலையில் பாக்கம் ஊராட்சி பாக்கம் ஏரிக்கரையில் காளியம்மன் கோவில் உள்ளது.

    அதன் அருகிலேயே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் சார்பில் முனீஸ்வரன் கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த முனீஸ்வரன் கோவிலில் சுமார் 3 அடி உயரத்திற்கு கற்சிலையால் ஆன கருப்பசாமி சிலையை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை நேற்று இரவு மர்ம நபர்கள் உடைத்தனர். மேலும் கோவிலில் இருந்த கருப்பசாமி சிலையை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவிலில் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    சிலைகள் உடைக்கப்பட்ட முனீஸ்வரன் கோவிலில் பாக்கம், வெங்கடாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.

    இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    சுற்றுப்பகுதியில் உள்ள ஏரி மற்றும் கிணற்றில் கருப்பசாமி சிலையை வீசி சென்றுள்ளனரா என ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது.
    • அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே 100-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து மலை கிராம மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    டோலி கட்டி தூக்கி செல்லும்போது உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    அல்லேரிமலை கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற 1½ வயது குழந்தையை கடந்த 2 மாதத்திற்கு முன்பு பாம்பு கடித்தது. சாலை வசதி இல்லாததால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    பிரேத பரிசோதனை முடிந்த பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    10 கிலோமீட்டர் தூரம் வரை தாய், குழந்தையின் உடலை சுமந்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் சாலை அமைக்க பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அல்லேரி மலை பகுதியில் மேலும் ஒரு தொழிலாளி பாம்பு கடித்து பலியாகி உள்ளார்.

    அல்லேரி அடுத்த ஆட்டுக்கொந்தரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38), கூலித்தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    நேற்று இரவு சங்கர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் படுத்து தூங்கினார். இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு சங்கரின் கையை கட்டுவது போல் பிண்ணி கொண்டது.

    பாம்பின் பிடியிலிருந்து கையை எடுக்க முயன்ற போது சங்கரின் கையில் 2 முறை கடித்தது. வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டார். சங்கரின் அலறல் சத்தம் கேட்டு, மனைவி மற்றும் மகள்கள் எழுந்து கட்டுவிரியன் பாம்பை அடித்துக் கொன்றனர்.

    இது குறித்து அந்த கிராமத்தினர் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ குழுவினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர்.

    ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவினர் அல்லேரியில் வந்து தயார் நிலையில் காத்திருந்தனர்.

    ஆட்டு கொந்தரை மலை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்லேரிக்கு பாம்பு கடித்த சங்கரை அந்த கிராமத்தினர் டோலி கட்டி தூக்கி வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஆம்புலன்சுடன் காத்திருந்த மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் இறந்துபோன சங்கரின் உடலை தங்கள் கிராமத்திற்கு மீண்டும் திருப்பி எடுத்துச் சென்றனர்.

    சாலை வசதி இருந்திருந்தால் நாங்கள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றிருப்போம். 3 கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்ததால் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் காலதாமதம் ஏற்பட்டது. எனவே அல்லேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டுமென மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலை கிராமத்தில் பாம்பு கடித்து அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வேலை வாங்கி தருவதாக மோசடி
    • வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. கோடீஸ்வரன் ஆகியோர் பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் மனு அளிக்க வந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து கையை அறுத்துக் கொள்ள முயன்றார்.

    அருகில் இருந்த போலீசார் இளம் பெண்ணிடம் இருந்த பிளேடை பறித்தனர். பின்னர் இளம் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் பேரணாம்பட்டு சேர்ந்த ஒருவருடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனக்கு ஒரு மகன் உள்ளார்.

    திருமணம் நடந்த 3 ஆண்டுகளில் கணவர் என்னை விட்டு பிரிந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

    2-வது மனைவியின் வீட்டார் எனது மகனை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக இளம் பெண் தெரிவித்தார்.

    பேரணாம்பட்டை சேர்ந்த 2 இளம் பெண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு இளம் பெண் ஏன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாய். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவரது தோழியை மாடியில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க 2 இளம் பெண்களின் வீட்டாரும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    திமிரி அடுத்த தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 24). மாற்றுத்தி றனாளி. பி எஸ் சி பி எட் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

    இவர் அளித்த மனுவில் கூறியதாவது:-

    நான் கடந்த 2022-ம் ஆண்டு பத்தாம் மாதம் மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி அலுவலகத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக செய்தித்தாளில் விளம்பரம் வந்தது. விளம்பரத்தை கண்ட மகாலட்சுமி வேலைக்காக விண்ணப்பித்தேன்.

    இந்த நிலையில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2.25 லட்சம் வாங்கினார். மாவட்ட திறன் மேம்பாடு பயிற்சி மையத்தில் கேட்டபோது அந்த வேலை வேறு ஒருவருக்கு வழங்கி விட்டதாக தெரிவித்தனர்.

    வேலை வாங்கித் தருவதாக பணத்தை பெற்றவர் வேலையை வாங்கி தரவில்லை பணத்தையும் திரும்ப தரவில்லை.

    தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் எனவே பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:-

    தினம்தோறும் வரும் புகார்கள் குறித்து அன்றே விசாரணை நடத்தி தீர்வு காணப்படுகிறது. இதனால் தற்போது குறைவு தீர்வு கூட்டத்தில் 25 முதல் 30 மனுக்கள் மட்டுமே வருகின்றன.

    அடிதடி சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    இல்லையென்றால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம்

    வேலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வேலூருக்கு வந்தது. இந்த விண்ணப்பங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 699 ரேசன் கடைகள் உள்ளது. இந்தகடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 ரேசன் அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய் யப்பட உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அந்தந்த ரேசன்கடைகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடக்கிறது. கடைகளுக்கு விண்ணப்பங்கள் சென்றவுடன் பொதுமக்களுக்கு வீடு வீடாக வினியோகிக்கப்படும்.

    பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×