என் மலர்
வேலூர்
- அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும்
- பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பா.ஜ.க சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.
மண்டல செயலாளர் குமார் பொருளாளர் பாபு மண்டல துணைத்தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் கார்த்தி அண்ணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சின்ன அல்லாபுரம் அரசு தொடக்கப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் கூடுதல் வகுப்பறைகளை கட்ட வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவியை நிரப்ப வேண்டும்.
அனைத்து தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும். ஆறுகள் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். டாஸ்மாக் கடையை மூட வேண்டும்.இந்து கோவில்களை எடுக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இளைஞர் அணி மண்டல தலைவர் மோகன் மற்றும் திரளான பாஜகவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- போக்சோவில் கைது
- ஜெயிலில் அடைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த அரிமலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் ( வயது 20).
இவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மைனர் பெண்ணை சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றதாக மாணவியின் பெற்றோர் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர்.
2 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அவர்களை கண்டுபிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
பின்னர் மைனர் பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வெங்கடேசன், மைனர் பெண்ணை பாலியில் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மைனர் பெண்ணை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- 2 நாட்களாக பைப்லைன் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது
- அதிகாரிகள் பேச்சு வார்த்தை
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
குடிநீர் கொண்டு வரப்படும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் வேலூர் மாநகராட்சிக்கு தண்ணீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டது.
கடந்த 2 நாட்களாக பைப் லைனில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை பிடிசி ரோடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி மூலம் குடிநீர் வழங்குவதாகவும் மறியலை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகளின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.
- வயது 18-லிருந்து 40 ஆக இருத்தல் வேண்டும்
- கட்டணம் ஏதும் கிடையாது
வேலூர்:
வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் தாமரை மணாளன் அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
இதில் பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18-லிருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்றவை ப்பவர், மின்சாரபயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர், உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இந்த பயிற்சி தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு வழங்கப்படும். பயிற்சியானது தையூரில் தமிழ்நாடு கட்டுமான கழகம் அமையுள்ள இடத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும், பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும்.
தினமும் ரூ.800
மேலும் 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.
தமிழ்நாடு கட்டுமான கழகம், எல்&டி திறன் பயிற்சி நிலையம் இணைத்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.இப்பயிற்சிகள் 2023 ஆகஸ்டு 15-ந் தேதி முதல் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேலூர் மாநகராட்சியில் வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறை
- வாகனங்களும் தனியாருக்கு வாடகைக்கு விட முடிவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.
அந்தந்த மண்டலங்களில் உள்ள குப்பை கிடங்குகளில் வைத்து பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை சிமென்ட் தொழிற்சாலைக்கும் அனுப்பி வைத்தனர்.
இதற்காக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 200 பேர், ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி முழுவதும் ஒட்டுமொத்த குப்பைகளையும் அகற்றும் பணி மாநகராட்சி வசம் இருந்தது.
இந்நிலையில் மாநகராட்சியில் குப்பைகள் அனைத்தையும், வீடு, வீடாக சென்று சேகரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் சம்பளம் முதற்கொண்டு டெண்டர் எடுக்கும் நிறுவனங்களே வழங்கிவிடும்.
மாநகராட்சி நிரந்த பணியாளர்கள் மூலம் கால் வாய் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் குப்பைகள் அள்ள பயன்படுத்திய வாகனங்களும் தனியாருக்கு வாடகைக்கு விடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தால், தனியாரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான ஆலோச னைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
- மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தகவல்
- அணைக்கட்டில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
ஆணையாளர் சுதாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, அலுவலக மேலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக் குழு துணைத் தலைவர் சித்ரா குமார பாண்டியன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு பேசியதாவது:-
அணைக்கட்டு தொகுதியில் பொது மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையாக முத்துக் குமரன் மலை அடிவாரத்தில்இருந்து பீஞ்ச மந்தை வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.5.50 கோடியில் தார் சாலை பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.
நாளை மறுநாள் நீர்ப் பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைத்து, அந்த வழித்தடத்தில் ஒடுகத்தூரில் இருந்து பீஞ்சமந்தை வரை அரசு மினி டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
மேலும் ஆயிரக்க ணக்கான ஏழை எளிய மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
தொகுப்பூதியம்
இதனையடுத்து பேசிய கவுன்சிலர் சின்னப்பள்ளி குப்பத்தில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை.
இரவு நேரங்களில் ஒரு மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
கவுன்சிலர் சுதாகர் பேசும்போது ஊராட்சி களில் மேற்கொள்ளப்படும் பணியினை ஒன்றிய பொறியாளர்கள் பார்வையிடுவதில்லை என்றார்.
அப்போது ஒரு கவுன்சிலர் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு மாததொகுப்பு ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த விதமான தொகுப்பூதியமும் வழங்குவதாக அறிவிக்க வில்லை. ஆகவே கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய கவுன்சிலர், ஒன்றியக் குழு தலைவர்களுக்கும் மாத ஊதியம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த ஒன்றிய ஆணையாளர் சுதாகரன் நாங்கள் இதுகுறித்து அரசுக்கு கடிதம் அனுப்புகிறோம். என்று கூறினார்.
முடிவில் அலுவலக உதவியாளர் நன்றி கூறினார்.
- கிராம மக்கள் வரவேற்பு
- நேபாளத்தில் தடகள போட்டி நடந்தது
வேலூர்:
வேலூர் அடுத்த சோழவரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி- சாவித்திரி தம்பதியினரின் மகள் கோமதி.
இவர் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டை கடந்த மே மாதம் நிறைவு செய்தார்.
தஞ்சாவூரில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஈட்டி எறிதலில் மாநில போட்டியில் கலந்து கொண்ட கோமதி, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். ஜம்முவில் நடந்த போட்டியிலும் 3-ம் இடம் பிடித்தார்.
இதை தொடர்ந்து இந்தோ- நேபால் தடகள போட்டி நேபாளம் நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் நடந்தது.
இதில் இந்தியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஈட்டி எறிதல் போட்டி கடந்த 13-ந் தேதி தொடங்கி 17-ந் தேதி வரை நடந்தது.
இதில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் வேலூரை சேர்ந்த கோமதி கலந்து கொண்டு 48.83 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்று சொந்த ஊர் திரும்பிய வீராங்கனை கோமதிக்கு, கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க தடப்புடலாக ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவி படித்த சோழவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பிரதிநிதி பவுலின், வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க தலைவர் விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சோழவரம் பள்ளி தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் வரவேற்றார்.
இதில் மாணவிக்கு மலர் மற்றும் சந்தன மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
- ஆயுதங்கள் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகிக்கும் வகையில் சிலர் தங்கி இருப்பதாக விருதம்பட்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி மேற்பார்வையிலான தனிப்படை போலீசார் தங்கும் விடுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மன்சூர் (38), அவரது தம்பி கவுஸ்பாஷா (31), வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா (36), மோகன்குமார் (31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் காட்பாடி பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மன்சூர், கவுஸ்பாஷா ஆகியோர் ரவுடி ஜானியின் கூட்டாளிகள் என்பதும், சதீஷ்குமார் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடி ராஜா மீது காஞ்சிபுரத்தில் 4 கொலை உள்ளிட்ட 17 வழக்குகள், ரவுடி மோகன்குமார் மீது 2 கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, போலீசார் கூட்டுக்கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியதாக 5 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
- பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி
- சேண்பாக்கம் பாலாற்றில் பணிகள் நிறைவடைந்தது
வேலூர்:
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள வேலூர் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
பொதுப்பணி துறையின் மூலம் வேலூர் அடுத்த சேண்பாக்கம் அருகில் பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
இதில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதனால் கடந்த 8-ந் தேதி முதல் காவிரி குடிநீர் சப்ளை நிறுத்த பட்டது.
வேலூர் மாநகராட்சி, மேல்விஷாரம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, அரக்கோணம், ஆரணி ஆகிய நகராட்சி பகுதிகள் வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, கனியம்பாடி, வாலாஜா, ஆற்காடு ஒன்றிய பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் உள்ள பிரதான குழாய்கள் சீரமைக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகள் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களின் மூலம் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படாததால் வேலூர் மாநகராட்சி பொதுமக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்தனர். பல இடங்களில் பொதுமக்கள் லாரி டிராக்டர்களில் வழங்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் சேண்பாக்கம் பாலாற்றில் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்துள்ளன. இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இதனால் மாநகராட்சியில் குடிநீர் சப்ளை இயல்புநிலைக்கு திரும்பி உள்ளதாக குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 1 கிலோ தக்காளி ரூ.50-க்கு விற்பனை
- மகிழ்ச்சியில் பொதுமக்கள்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகிறது . தக்காளி ஒரு கிலோ ரூ. 130 வரை விற்கப்பட்டு உச்சத்தை தொட்டது.
சமையலுக்கு அத்தியாவசிய பொருளான தக்காளி வாங்கி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது விலை சற்று குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
குடியாத்தம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேனில் கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது
இதனிடையே நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று இரவு குடியாத்தம் பகுதியில் வேனில் எடுத்துவரப்பட்ட தக்காளி இரண்டு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இதை அறிந்த பொதுமக்கள் தக்காளி வேனை சூழ்ந்து அதிகளவில் வாங்கிச் சென்றனர்
சந்தையிலும் கடைகளிலும் ஒரு கிலோ தக்காளி 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் சாலையோரம் வாகனத்தில் 50 ரூபாய்க்கு தக்காளி விற்கப்பட்டதால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர்.
வரிசையில் நின்று மகிழ்ச்சியுடன் தக்காளி வாங்கி சென்றனர்.
- வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிவிட்டு தூக்கில் தொங்கினார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் கட்ட மஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இவரது மகள் ஷாஜ லதா (வயது 36). இவர் சித்தூர் மாநகராட்சியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷாஜ லதாவின் தாய் உடல் நல குறைவால் இறந்து விட்டார். தாய் இறந்தது முதல் ஷாஜலதா யாரிடமும் பேசாமல் விரட்டியில் இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு சற்று லேசான மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஷாஜலதா அடிக்கடி வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அரியூருக்கு வந்த ஷாஜ லதா அங்குள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். நேற்று இரவு தனது சகோதரர் லட்சுமி காந்திற்கு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினார்.
வாட்ஸ் அப்பில் தகவலை பார்த்த அவரது சகோதரர் அலறியடித்துக் கொண்டு வேலூருக்கு விரைந்து வந்தார். ஷாஜலதா தங்கி இருந்த லாட்ஜ் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷாஜலதா பிணத்தை மீட்டு பிரத பரிசோ தனைக்காக வேலூர் அடுக்கம்பா றை அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜ லதா தற்கொ லைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செய்தனர்
வேலூர்:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.
ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணுதுர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் கோவில் வளாகத்தில் கோபாலபுரம் இளம் நட்சத்திரங்கள் மற்றும் ஆடி பவுர்ணமி விழா குழுவின் சார்பில் சந்தனத்தால் உருவாக்கப்பட்ட பாலாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முககவசம் அணிந்து வந்தவர்களூக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
படவேடு ரேணுகாம்பாள் கோவில் திருவண்ணாமலை பச்சையம்மன் கோவில் மற்றும் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று பெண்கள் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.






