என் மலர்tooltip icon

    வேலூர்

    டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் அவர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை குடியாத்தத்தை அடுத்த மீனூர் கவுண்டன்யா மகாநதி ஆற்றுப்பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு டிராக்டரில் மணல் கடத்தி வந்தவரை நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். ஆனால் அவர், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றார்.

    அதில் இருந்து தப்பிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார், டிராக்டரை மடக்கி அதை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    அவர், குடியாத்தத்தை அடுத்த மீனூர் நடுக்கட்டை பகுதியைச் சேர்ந்த தரணி (வயது 34) எனத் தெரிய வந்தது. அவர் மீது குடியாத்தம் தாலுகா போலீசார், மணல் கடத்தல் மற்றும் டிராக்டரை ஏற்றி போலீசாரை கொல்ல முயன்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக தரணி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. தரணி மீது ஏற்கனவே மணல் கடத்திய வழக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது.
    வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம், சமூக நலத்துறை, புள்ளியியல் துறை மற்றும் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கள அளவில் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அப்பணி நடந்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பார்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் கொரோனா தொற்றினால் பெற்றோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் சமூக, பொருளாதார மற்றும் குடும்ப விவரங்களை சேகரிக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம், சமூக நலத்துறை, புள்ளியியல் துறை மற்றும் வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் கள அளவில் புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, தற்போது அப்பணி நடந்து வருகிறது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 660 பேரின் விவரங்களும் மற்றும் கொரோனா தொற்றால் பெற்றோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் விவரங்களும் தொலைபேசி வாயிலாகவும், தேவைப்படும் பட்சத்தில் வீட்டுக்கே சென்றும் அவர்களது விவரங்களை அரசு அலுவலர்களால் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் தங்களது விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தொலைபேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ கேட்கும் பட்சத்தில் அவற்றை வழங்க வேண்டும். அதிகாரிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வெங்கடேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், பொன்னை கிராம நிர்வாக அலுவலராக கவிதா (வயது 32) என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் பொன்னை பஜார் தெருவை சேர்ந்த விவசாயி வெங்கடேசன் (50) என்பவர் தன்னுடைய நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கவிதா ரூ.10,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

    லஞ்சம் தர விரும்பாத வெங்கடேசன் இதுகுறித்து வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் வெங்கடேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவரிடம் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதன்படி நேற்று பொன்னையில் கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிடம், வெங்கடேசன் கொடுத்துள்ளார்.

    அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கவிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து லஞ்ச பணம் ரூ.10 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.
    திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் பகுதியில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    வேலூர்:

    கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு இடையே இ-பதிவு பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் 57 இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட எல்லையான மாதனூர் பகுதியில் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்ட போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் வாலிபர்கள் 6 பேர் இருந்தனர். அவர்களிடம் இ-பதிவு பாஸ் கேட்டனர்.

    ஆனால் காரில் இருந்த 6 பேரும் மதுபோதையில் இருந்தனர். அவர்களில் ஒருவர் யாரை கேட்டு செக் போஸ்ட் போட்டு இருக்கீங்க, உங்களை சும்மா விட மாட்டேன் என ஆவேசமாக பேசினார்.

    மேலும் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாரை அவதூறாக பேசினர். போலீசாரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் தகவலறிந்து வந்த இளைஞர்களின் பெற்றோர் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டு மதுபோதையில் இருந்த 6 பேரையும் அழைத்து சென்றனர்.

    விசாரணையில் குடித்துவிட்டு ஒரே காரில் வந்த 6 பேரும் மாதனூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் அப்பகுதியில் வீணாக சுற்றி வருவதாகவும் தெரிவித்தனர். 

    வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரத்து 187 படுக்கைகள் உள்ளன. மேலும் 383 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,500 க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 42,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2 ஆயிரத்து 999 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 751 பேர் பலியாகியுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 304 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று 326 பேர் பாதிக்கப்பட்டனர். இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

    ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 150 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மேலும் படுக்கைகள் காலியாகி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரத்து 187 படுக்கைகள் உள்ளன. மேலும் 383 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,500 க்கும் அதிகமான படுக்கைகள் காலியாக உள்ளன.

    ஆனால் இறப்பு விகிதம் குறையவில்லை நேற்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதேபோல தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தற்போது ஆக்சிஜன் படுக்கை காலியாக உள்ளன.

    பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஆக்சிஜன் அளவு 90க்கு மேல் உள்ளவர்கள் காட்பாடி விஐடி மற்றும் வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை முகாமில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். முழு ஊரடங்கின் பலனாக பாதிப்பு குறைந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொரப்பாடி ஆண்கள் சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் உள்ள கைதிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் நளினி மற்றும் அவரது கணவர் முருகனுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 107 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள் வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் பீரங்கி மண்ணில் புதைந்த நிலையில் தென்பட்டதை பார்த்தனர். இந்த தகவலை அவர்கள் மலையில் இருந்து இறங்கியதும் ஊரில் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதை தொடர்ந்து சிலர் அங்கு சென்று அந்த பீரங்கியை சுற்றி இருந்த மண்ணை அகற்றினர்.

    இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பீரங்கி கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் வந்தது. ஆனால் நேரில் பார்க்கவில்லை. எனவே, அதனை நேரில் சென்றுபார்வையிட்டு, அதை கீழே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள் வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜலகண்டேஸ்வரர் கோவிலின் இடதுபுறம் உள்ள கோசாலையில் பீரங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளதால் அவர்களுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    வேலூர் :

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள நளினியின் தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை உடனிருந்து கவனிக்கவும், முருகனின் தந்தை கடந்த ஆண்டு இறந்ததால் இறுதி சடங்குகள் செய்யவும் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு மனு அளித்துள்ளனர். இருவரின் மனுக்களும் பரிசீலனையில் இருப்பதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே இருவரும் காட்பாடி பிரம்மபுரத்தில் தங்க உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளதால், அந்த இடத்தின் பாதுகாப்பு மற்றும் வசதி குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிறைத்துறை, மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    அதன்படி காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, தற்போது கொரோனா பரவல் அதிகம் உள்ளது. மேலும் அனைத்து போலீசாரும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முருகன், நளினி இருவருக்கும் உயர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதால் அதற்கான போலீசார் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் சார்பில் சிறைத்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இருவருக்கும் பரோல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மருத்துவமனை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவில் உள்ள அண்ணாநகர் கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 57). பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இந்தநிலையில் பிச்சாண்டியின் மனைவி செல்விக்கு (46) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிச்சாண்டி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக பிச்சாண்டி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த செல்வியும், கணவர் பிச்சாண்டி இறந்த சில மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன்- மனைவி இருவரும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்த பிச்சாண்டி- செல்வி தம்பதிக்கு அகிலா (23) என்ற மகளும், வசந்தகுமார் (22), விமல் (20) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
    வேலூரில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தக்காளி, வெங்காயம் உட்பட சுமார் 150 டன் காய்கறிகள் நனைந்துள்ளன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று பகல் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. நேற்று மாலை வேலூரில் மேகம் மந்தமாக காணப்பட்டது. இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது.

    வேலூர் மாநகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வேலூர் பழைய பஸ் நிலையம், கிரீன்சர்க்கிள் பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியது.

    வேலூர் மாங்காய் மண்டி அருகே தற்காலிக மொத்த விற்பனை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் மழையால் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

    மேலும் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தக்காளி, வெங்காயம் உட்பட சுமார் 150 டன் காய்கறிகள் நனைந்துள்ளன. இதனால் பெரும் சேதம் மற்றும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் அந்த பகுதியில் சேறும் சகதியுமாக இருந்ததால் காய்கறி வாங்க வருபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.

    தற்காலிகமாக காய்கறி கடை வைப்பதற்கு இந்த இடம் உகந்ததாக இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்ட பொதுமக்கள் திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் வாணியம்பாடி நேற்று இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது அதிகபட்சமாக ஆம்பூரில் 31 மீட்டர் மழை பதிவானது. பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை பகுதிகளில் லேசான மழை பெய்தது. கோடை மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் விவசாயிகள் இந்த மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து கொள்ள வேண்டும் என வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாயும், மகனும் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, டவுன் திரு.வி.க. நகரைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி, ஓய்வு பெற்ற கல்வித்துறை அதிகாரி. இவரது மனைவி கிருபாவதி (வயது 66). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. கடந்த 23-ந் தேதி இவர்களது மகன் வைரம் என்ற வைரமுத்துவுக்கு (38) கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு அவருடைய தாயாரான ஓய்வு பெற்ற தலைமையாசிரியை கிருபாவதிக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து கிருபாவதியும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கிருபாவதி மற்றும் மகன் உடல்நிலை ஆபத்தான கட்டத்தை எட்டியது. நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி கிருபாவதி இறந்தார். அதே மருத்துவமனையில் மகன் வைரமுத்துவும் நேற்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாயும், மகனும் அடுத்தடுத்து இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சுற்றி வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தினமும் 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி, பெண்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேலூர் பெண்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் அடிக்கடி வெளியே வந்து டீ, காபி சாப்பிடுவது, டிபன் வாங்கி செல்வது மாலை வேளைகளில் ஆஸ்பத்திரிக்கு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டு உள்ளனர்.

    கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே சுற்றி வருவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் அங்கு பழக்கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

    ஆஸ்பத்திரி நிர்வாகம் கொரோனா பாதித்த நோயாளிகளை ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வராதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொரோனா தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் தொற்று பாதித்த நோயாளிகள் ஆஸ்பத்திரிக்கு வெளியே சுற்றி வரும் சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×