என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாதிப்பு எண்ணிக்கை 102 ஆக இருந்தது. ஆனால் தற்போது இங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் போன்று கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்துகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, பாதிப்பின் தீவிரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை குறைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதைத்தவிர தினமும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 2 லட்சம் பேருக்கு முதல் டோஸ் மற்றும் 60 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது. அரசின் விழிப்புணர்வு காரணமாக தற்போது அதிகளவு இளைஞர்கள், இளம்பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
வேலூர் மாவட்டத்துக்கு கடந்த 11-ந் தேதி 4 ஆயிரம் கோவேக்சின் மருந்தும், 14-ந் தேதி 3 ஆயிரம் கோவிஷீல்டு மருந்தும் வந்தன. அவை சுகாதாரத்துறை சார்பில் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன. அவற்றில் குறைந்தளவு தடுப்பூசி மருந்துகளே நேற்று முன்தினம் கையிருப்பு இருந்தன.
இந்த நிலையில் நேற்று சிறப்பு முகாம்களில் மதிய வேளையில் தடுப்பூசி தீர்ந்து விட்டன. அதையடுத்து முகாம் ரத்து செய்யப்பட்டது. தடுப்பூசி வந்தவுடன் மீண்டும் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனால் வேலூர் ஜெயராம் செட்டி தெருவில் நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போட காத்திருந்த ஏராளமான பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிறப்பு முகாமிற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று முகாம் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதேபோன்று ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்ற பொது மக்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் 2-வது டோஸ் போட சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
வேலூர் மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) தடுப்பூசிகள் வர உள்ளது. அவை வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சாமியார்மலை, எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் சிவகுமார் (வயது 38). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்களுடன் குடியாத்தத்தை அடுத்த கன்னித்தோப்பு பின்புறமுள்ள ஒரு தோப்பில் சீட்டு விளையாடி உள்ளார். அப்போது அந்த வழியாக ஒரு வாகனம் வந்துள்ளது.
உடனே போலீசார் வருவதாக நினைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் பயந்து அங்கிருந்து வேகமாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த தரை கிணற்றில் சிவகுமார் தவறி விழுந்துள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி விட்டார். மற்றவர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.
இரவு வெகுநேரமாகியும் சிவகுமார் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர் உடனடியாக சிவகுமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலையில் மீண்டும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் சிவகுமாரை தேடினர்.
அப்போது சிவகுமாரின் செருப்புகள் கிணற்றில் உள்ள தண்ணீரில் மிதந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் சென்று அந்த கிணற்றில் இறங்கி சிவகுமாரை தேடினர். சுமார் ஒரு மணி நேரத்திற்குபிறகு சேற்றில் சிக்கியிருந்த சிவகுமாரின் உடலை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் கே.பிச்சாண்டி, ஏட்டு கல்பனா உள்ளிட்டோர் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள முக்கிய சாலைகளில் வேலூர்-ஆற்காடு சாலையும் ஒன்று. இந்த சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற பிறமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான நபர்கள் வருகிறார்கள். அதன்காரணமாக ஆற்சாடு சாலையில் மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் வரும் ஆம்புலன்ஸ், ஆட்டோ, கார் என்று வாகன போக்குவரத்தால் பரபரப்பாக காணப்படும்.
எனவே அந்த பகுதியில் உள்ள சிக்னலில் இருந்து மருத்துவமனையின் நுழைவு வாயில் வரை இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் அந்த பகுதியில் இங்கு வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மாதம் 10-ந் தேதி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருந்து கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன. பஸ், ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. மருத்துவ தேவைகளுக்காக இ-பதிவு செய்து பயணிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
இத்தகைய பல்வேறு கட்டுளப்பாடு காரணமாக வேலூர்-ஆற்காடு சாலை வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பிறமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து காரில் வந்தவர்கள் அவற்றை சாலையோரம் நிறுத்தி சென்றனர். இதனை போக்குவரத்து போலீசார் பெரிதாக பொருட்படுத்தவில்லை. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு காரணமாக வழக்கம்போல் இருசக்கர வாகனங்கள் மற்றும் இ-பதிவுடன் ஆட்டோ, கார்கள், வேன் உள்ளிட்டவை இயங்குகின்றன. சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. அதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முழுஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்டதை போன்று தற்போதும் ஆற்காடு ரோட்டில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக வரிசையாக கார்கள் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக வெளிமாநில கார்கள் அதிகம் காணப்படுகிறது. தனியார் மருத்துவமனையின் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதற்காக சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கார்களை நிறுத்தி செல்கிறார்கள். அதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.
வாணியம்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தன் பணியை தொடங்கி உள்ளார் என்பதை உணர்த்தக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருகைதந்து அல்லது தொடர்பு கொண்டோ பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சரை மீண்டும் கட்சியில் சேர்க்க தலைமை தான் முடிவு செய்யும்.
சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பே இல்லை
அ.தி.மு.க. தொண்டர்களுடன் பேசுவதாக சசிகலாவின் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது,

அது முழுவதும் பொய்யான செய்தி, எந்த நிலையிலும் உண்மையான செய்தி அல்ல.
எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியுள்ளார். சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என கட்சி தலைமையே முடிவு செய்துவிட்டது.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கட்சியில் எந்த சலசலப்புக்கும் இடமில்லை. எப்போதும் இது அ.தி.மு.க.வின் கோட்டையாக தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் மாவட்டம் நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் நேற்று முன்தினம் சாராய வேட்டைக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் சாராய வியாபாரிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அங்கிருந்த சாராய அடுப்பு, சாராய ஊறல்களை அழித்த போலீசார் பின்னர் நச்சுமேடு மலைக்கிராமத்தில் உள்ள சாராய வியாபாரிகள் வீடுகளில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.
பூட்டியிருந்த சில வீடுகளின் பூட்டு மற்றும் பீரோக்களை உடைத்து பார்த்தனர். அப்போது 2 வீடுகளில் இருந்து ரூ.8½ லட்சம் பணம் மற்றும் 15 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர்.
இதனை அறிந்த மலைக்கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு, ஆள் இல்லாத வீடுகளின் பூட்டை உடைப்பது தவறு, அத்துடன் பீரோக்களை உடைத்து எடுக்கப்பட்ட பணம், நகையை ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த வீடுகளில் இருந்து எடுக்கப்பட்ட பணம், நகை திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் நச்சுமேடு மலைக்கிராம மக்கள் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், சாராய வேட்டைக்காக மலைப்பகுதிக்கு வந்து வீடுகளின் பூட்டு, பீரோக்களை உடைத்து நகை, பணத்தை எடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதுதொடர்பாக வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் யுவராஜ், இளையராஜா மற்றும் ஊர்க்காவல் படை வீரரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
அதன் அடிப்படையில் சாராய வேட்டைக்கு சென்ற இடத்தில் பூட்டிய வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடி வந்ததாக சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் மீது அரியூர் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், போலீசார் இளையராஜா, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்கள்.
வேலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொற்று பாதித்து குணமடைந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்களை மியூகோர்மைகாசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது. ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் பாதித்தவர்கள் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற மாவட்டம், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிகளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பாதிப்பு எண்ணிக்கை 79 ஆக இருந்தது. ஆனால் தற்போது இங்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் போன்று கருப்பு பூஞ்சை நோயும் மக்களை அச்சுறுத்துகிறது. இந்த நோய் பாதித்தவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, பாதிப்பின் தீவிரம் குறித்து கண்காணிக்கப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்.
குடியாத்தம்:
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கொரோனோ பாதிப்பு குறித்து நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனோ பாதிப்பு குறைய முழு ஊரடங்கு நல்ல பலன் அளித்துள்ளது. தற்போது 200-க்கு கீழ் கொரோனோ பாதிப்பு குறைந்து வருகிறது.
கொரோனோ தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள வேலூர் மாவட்டம் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. கொரோனோ தொற்றின் 3-வது அலை செப்டம்பர் மாதத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனோ 3-வது அலை 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பாதிக்கும் என கூறப்படுகிறது.
இதனை தடுக்க வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் பிரிவு துறைத்தலைவர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள், வேலூர் தனியார் மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தினர் உடன் ஓரிரு நாளில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
மேலும் வெளியூரில் உள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்களுடன் ஆன்லைன் மீட்டிங் மூலம் ஆலோசனை நடத்தப்படும்.
14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கண்டிப்பாக கொரோனோ தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். 14 வயதுக்கு கீழ்உள்ளோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் போது அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது பெற்றோர்களே அப்போது பெற்றோர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு ஏற்படக்கூடாது. ஆகவே பெற்றோர்கள் கண்டிப்பாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனோ தடுப்பூசி 21 சதவீதம் பேர் போட்டுக்கொண்டுள்ளனர். தமிழக அளவில் வேலூர் மாவட்டம் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 4-வது இடமும், மாநகராட்சியில் வேலூர் மாநகராட்சி 3-வது இடம் வகிக்கிறது.
கொரோனோ தடுப்பூசி வந்தவுடன் உடனுக்குடன் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. தொற்று குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்கக்கூடாது முழுவதும் குறைந்தாலே பாதுகாப்பானது, கொரோனோ தொற்று பாதிப்பு தலைக்கு மேல் இருக்கும் கத்தி போன்றது பொதுமக்கள் கொரோனோ தொற்று குறைந்தாலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி மருந்துகள் இல்லை. கடந்த வாரம் வேலூர் மாவட்டத்திற்கு 7 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் தீர்ந்துவிட்டன. தடுப்பூசிகள் இல்லாததால் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று முகாம் நடைபெற்ற இடத்தில் முன்பகுதியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதனை அறியாமல் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதே போன்று ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி போட சென்ற பொது மக்களும் ஏமாற்றத்துக்கு உள்ளாகினர். தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் 2-வது டோஸ் போட சென்ற பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்
வேலூர் மாவட்டத்திற்கு ஓரிரு நாட்களில் 20,000 தடுப்பூசிகள் வர உள்ளது. அவை வந்தவுடன் சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் குறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் வள்ளலார் பகுதியை சேர்ந்தவர் ஆரூண் சுந்தர்ராஜ். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது51). வேலூர் பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் நர்சாக பணியாற்றி வந்தார்.
கடந்த 14-ந்தேதி சாந்தகுமாரிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார்.
சாந்தகுமாரியின் சொந்த ஊர் திருத்தணி ஆகும். இறந்த நர்சு சாந்தகுமாரிக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நர்சுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே குடியாத்தம், அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய 2 நர்சுகள் இறந்தனர். 3-வதாக சாந்தகுமாரி பலியாகி உள்ளார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கல்லூர் ரவி, கே. எஸ்.குபேந்திரன், வக்கீல் டி.ஜி. பிரபாகரன், பி.மோகன், துளசிராமுடு பக்தவச்சலம், கோவிந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன் கொரோனோ தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள திரண்டுவந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேம்பள்ளி ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.
அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி மற்றும் சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் விற்ற 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வேலூருக்கு கடத்தி வரப்பட்ட 831 மதுபாட்டிகள் உள்பட 851 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1,400 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டன. 225 லிட்டர் சாராயம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் உள்பட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.






