என் மலர்
வேலூர்
- அமைச்சர் துரைமுருகன் பேச்சு
- வேலூரில் 7 இடங்களில் தடுப்பணை
வேலூர்:
காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனை மலர் வெளியிட்டார். அவர் பேசியதாவது:-
அரசால் தரப்படுகின்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டியது மாவட்டத்தின் கடமை. குறிப்பாக கலெக்டரின் கடமை. ஒரு ஆட்சி சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கு உதவுவது கடமை. .வாழ்வில் நலிந்த பிரிவினருக்கு உதவி பெறும் நிலையில் இருப்பவர்களுக்கு அரசே முன் நின்று விலையில்லா பொருட்களை தந்து அவர்களை வாழ வைக்கிறது.
வாழ்வாதாரம் இருப்பவர்களுக்கு தொழில் முனைவோராக நிதியை அரசு கொடுக்கிறது. கொடுக்கும் நிதியை பல்வேறு பிரிவு அதிகாரிகள் அந்தந்த துறையை செம்மைப்படுத்த வேண்டும். அப்போது தான் அரசு போட்ட திட்டங்கள் மக்களுக்கு போய் சேரும்.
இப்போது ரூ.3 கோடியே 61 லட்சத்து 88,ஆயிரத்து33 அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இது போதாது. இது ரூ.30 கோடியாக இருந்தால் அனைவரையும் பாராட்டியிருப்பேன். சில இடங்களில சில துறைகளை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் துறையில் தையல் எந்திரம் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. உதவித்தொகை 4 பேருக்கும், சலவை பெட்டி 5பேருக்கும், புதிய தொழில் முனைவராக ஒருவருக்கும், வீல் சேர் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது.
அரசு கொடுக்கிறது. அதிகாரிகள் இறங்கி வேலை செய்ய வேண்டும். கலெக்டர் சுறுசுறுப்பானவர் தான். ஆனால் அவர் இலாக்காவை முடுக்கிவிட வேண்டும்.அடுத்த முறை வரும்போது ரூ.30 கோடி அளவில் நலத்திட்டம் இருந்தால் அனைவரையும் வாழ்த்துவேன்.
விஷ சாராயம் குடித்து பல பேர் இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டவுடன் முதல்-அமைச்சர் சாப்பிடாமல் கூட விழுப்பு ரத்திற்கு சென்று விட்டார். அங்கு சிகிச்சை பெறுபவ ர்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு வரும் வழியில் தான் அவர் சாப்பிட்டார்.
கொரோ னா காலத்தில் தன்னுடைய உயிரை பணயம் வைத்து கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்த்து அவர்கள் தேவையான உதவிகளை செய்ய சொல்லி உத்தரவிட்டார். அடிதட்டு மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என எங்கள் தலைவர் கருணாநிதி சொல்லியுள்ளார்.
அதனை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம், தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு இல்லம் அமைத்து இப்போது கிராமப் பகுதிகளில் தொழு நோயாளிகளே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.
வேலூர் சேண்பாக்கத்தில் 5 அடி அளவில் ஒரு தடுப்பணை கட்டப்படுகிறது. இது நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.
காவிரியில் மாயனூர் என்ற இடத்தில் நான் அப்போது தடுப்பணை கட்டினேன். அந்த இடங்கள் முள் காடுகளாக இருந்தது மாறி வாழைத்தோட்டங்க ளாக மாறி நிலங்களே அதிக விலைக்கு விற்கிறது.
வேலூர் மாவட்டத்தில் இறைவன்ங்காடு, கவசம்பட்டு உள்பட 7 இடங்களில் தடுப்பணை கட்டப்படுகிறது.
இந்த ஆண்டு சிப்காட் தொழிற்சாலை காட்பாடியில் கொண்டுவரப்பட உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூரில் நடைபெறும் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் குமார் , காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
காட்பாடி பிள்ளையார் கோவில் ஏரிமுனையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34), லாரிக்கு பாடி கட்டும் தொழில் செய்து வந்தார்.
இவரது மனைவி இளவரசி (31). தம்பதிக்கு தனுஷ் (11), சிவகார்த்திக் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் கடந்த 14-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளவரசி மன வேதனை அடைந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.
நேற்று இரவு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது இளவரசியை காணாததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இளவரசியின் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் இளவரசி பிணமாக மிதந்தார்.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இளவரசியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இளவரசி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- வனத்துறையினர் மலையடிவாரத்திற்கு அருகில் விடுவதாக புகார்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. நிலத்தில் வெங்கடேசன் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது நிலத்தில் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. உடனே ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மலை பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், வனச்சரக அலுவலர்கள் மீட்கப்பட்ட மலை பாம்பை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு போய் விட்டனர்.
குடியிருப்பு பகுதியில் இருந்தும் விவசாய நிலங்களில் இருந்தும் மீட்கப்படும் மலைப்பாம்புகளை வனத்துறையினர் எடுத்துச் சென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் விடாமல் மலையடிவாரத்திற்கு அருகில் விடுகின்றனர்.
இதனால் இறை தேடி மலைபாம்புகள் மீண்டும் குடியிருப்பு பகுதியை தேடி படையெடுத்து வருவதாக வனத்துறை மீது குற்றம் சாற்றுகின்றன.
வனத்துறையினர் பிடிப்படும் மலை பாம்புகளை அடர்ந்த காப்பு காட்டுக்குள் பத்திரமாக விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது.
- காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பாபா சிந்து மண்டல் (வயது 41). இவர் திருப்பூரில் கட்டிட வேலை செய்வதற்காக ஹவுரா ரெயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தார்.
அங்கிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் திருப்பூருக்கு பயணம் செய்தார். ரெயில் வாலாஜா ரெயில் நிலையத்தில் நின்ற போது பாபா சிந்து மண்டல் கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்றவாறு சிறுநீர் கழித்தார்.
அப்போது கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரெயில் பாபா சிந்து மண்டல் மீது மோதியது. இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகரெட் தீ படுக்கையில் பற்றி எரிந்தது
- புகை மூச்சு திணறி இறந்தார்
வேலூர், மே.16-
வேலூர், தோட்டப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.
மேலும் லாட்ஜை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். விக்னேஷ் நேற்று மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார்.
அப்போது சிகரெட் பிடித்தபடி தூங்கியதாக கூறப்படுகிறது. தூக்க கலக்கத்தில் விக்னேஷ் சிகரெட்டை படுக்கையில் போட்டுள்ளார்.
அப்போது சிகரெட் மெத்தையில் பட்டு தீப்பிடித்து புகை வந்து அறை முழுவதும் பரவியது. மது போதையில் இருந்ததால் விக்னேஷ்விற்கு புகை சூழ்ந்தது தெரியவில்லை.
அறைக்கு வெளியேயும் புகை வந்ததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார்.
அறை முழுவதும் புகைப்பரவி விக்னேஷ் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷுக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர்.
- வேலூரில் குடிநீர் கேட்டு கோஷம்
- 5 ஆண்டுகளாக அவதி
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 5 ஆண்டுகளாக 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பில் வசிக்கும் குடும்பத்தினருக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை.
இதனால் சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் இடத்தில் இருந்து குடிநீரை பிடித்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீர் வசதி ஏற்படுத்தி தர கோரி பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபடும் போதெல்லாம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன் கண்டு கொள்வதில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை குடிநீர் வசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து குடியிருப்பு வாசிகள் மொட்டை மாடியில் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் விரைந்து வந்தனர்.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தி விட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 தமிழக அரசு வழங்க வேண்டும்
- அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் தனசேகர் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் சம்பத் வரவேற்பு உரையாற்றினார்.இந்து ஆட்டோ முன்னணி மாநில பொதுச் செயலாளர் மகேஷ் கண்டன உரையாற்றினார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் பெட்ரோல் டீசல் கியாஸ் வரியை மத்திய, மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு அரசு வீடு திட்டத்தில் முன்னுரிமை தந்து ஒதுக்க வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ளது போல் ஆட்டோக்களுக்கு எப்சி புதுப்பிக்க ரூ.10,000 வழங்குவது போல் தமிழக அரசும் வழங்க வேண்டும் தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் ஆன்லைன் பதிவு மிகவும் சிரமப்பட்டு பதிய வேண்டியிருக்கிறது.
எனவே ஆன்லைன் பதிவினை எளிதாக பதிய ஆவணம் செய்ய வேண்டும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் போக்குவரத்து விதி மீறல் செய்தால் ஆட்டோவை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்து ஆட்டோ டிரைவர் கையெழுத்துடன் அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாநில செயலாளர் இந்து வழக்கறிஞர் முன்னணி ரத்தின குமார், இந்து ஆட்டோ முன்னணி மாநில பொருளாளர் மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 988 பாட்டில்கள், ரூ.76 ஆயிரம் பறிமுதல்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் நகர பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.
குடியாத்தத்தில் சில இடங்களில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் நேற்று காலையில் குடியாத்தம் சுண்ணாம்பேட்டை ஆற்று ஓரம் உள்ள டாஸ்மாக் கடையை ஒட்டியபடி உள்ள பாரில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 520 மது பாட்டில்களும், மது விற்ற ரூ.73 ஆயிரத்து 660 இருந்தது.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் வெண்ணையூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 38) செவ்வாய்பேட்டை சேர்ந்த ராஜேஷ் (33) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மேலும் தனிப்படை போலீசார் குடியாத்தம் காந்திநகர் சிவமதி கார்டன் ஆர்டிஓ அலுவலகம் ரோடு பகுதியில் வசித்து வரும் கிரிபிரசாத் (34) என்பவர் வீட்டின் பின்புறம் போலீசார் திடீரென சோதனை செய்தனர்.
அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 468 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அவரிடம் இருந்து ரூ.2750-ஐ பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் கிரிபிரசாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
- குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50) டிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பெருமாள் நேற்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாள் பிணத்தை மிட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
- 2 பேர் தப்பி ஓட்டம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள நாகநதி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது.
பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கையை செலுத்தி வந்தனர். அந்த பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் இன்று அதிகாலை காளியம்மன் கோவிலுக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் கோவில் உண்டியலை உடைத்தனர்.
பக்கத்து வீட்டை சேர்ந்தவர் உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 3 பேர் உண்டியலை உடைப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.
இவரது சத்தம் கேட்ட கிராம மக்கள் திரண்டு ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட 3 பேரும் அங்கிருந்து பக்கத்தில் உள்ள தோட்டத்திற்குள் தப்பி ஓடினர்.
விடாமல் துரத்திச் சென்ற பொதுமக்கள் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். 2 பேர் சிக்காமல் தப்பி சென்றனர். பிடிப்பட்ட கொள்ளையனை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
பின்னர் வேலூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் வேலூர் அடுத்த சித்தேரியை சேர்ந்த ஹரிஷ் குமார் (வயது 19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
- சிறுவர், சிறுமி உட்பட 5 பேர் படுகாயம்
- பட்டாசுகள் வெடிக்கும் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் மீது வெடித்த பட்டாசுகள் விழுந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவின்போது சிரசு திருவிழாவின் இரவு நிகழ்ச்சியாக கண் கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் இதில் பல வண்ணங்களில் பல விதங்களில் பட்டாசுகள் வெடிக்கப்படும்.
இதைக் காண குடியாத்தம் நகரை மட்டுமில்லாமல் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கவுண்டன்யா மகாநதி ஆற்றின் இரு பக்க கரைகளிலும் மணி கணக்கில் காத்திருந்து வானவேடிக்கையை கண்டு ரசித்துச் செல்வார்கள் வழக்கம் போல் நேற்று இரவு சிரசு கோவிலில் இருந்து புறப்பட்டதும் வான வேடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது பட்டாசுகள் வெடிக்கும் பகுதிக்கு அருகே இருந்த பொதுமக்கள் மீது வெடித்த பட்டாசுகள் விழுந்து உள்ளது.
இதில் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவா (வயது 26), ரித்தீஷ் (17), பிரவீன் (18), கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் (13), தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த பூர்ணிமா (13) உள்ளிட்ட 5 பேர் பட்டாசு விபத்தில் காயமடைந்தனர்.
உடனடியாக 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் துணிகரம்
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நேற்று கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
சிரசு ஊர்வலம் கோவிலில் அம்மனை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர்.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெண் பக்தர்களிடம் நகை பறித்துள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி ரேவதி, ஜெயந்தி, சீதா என்ற 3 பெண்களிடம் 15 சவரன் நகைகளை பறித்து சென்று விட்டனர்.
இந்த திருவிழாவில் மேலும் பெண்களிடம் நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து போலீஸ் நிலையத்திற்கு உரிய புகார்கள் வரவில்லை என கூறப்படுகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தொடர்ந்து நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அணிந்து வரக்கூடாது என்று அறிவுறுத்தி வந்தனர்.
தங்கள் நகைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இருப்பினும் நகைப் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






