என் மலர்
வேலூர்
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- டி.ஐ.ஜி கடும் எச்சரிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் குட்கா செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களில் கள்ளச்சாராயம், மதுவிலக்கு தொடர்பாக மொத்தம் 1430 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவற்றில் 1308 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 13 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சாராய கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 39 இருசக்கர, ஒரு ஆட்டோ மற்றும் 2 நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத மலைப்பகுதி உள்ளிட்ட இடத்தில் பதுக்கி வைக்கப்படும் சாராயம் மற்றும் சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழிக்கின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்கள் யார் என அடையாளம் காணப்பட்டால் அவர்களின் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென டி.ஐ.ஜி முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் வேலூர் சரகத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் சாராய விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 14 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதனால் சாராய வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
- மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய நிலையில் பரிதாபம்
- வருவாய்த் துறையினரும் தீவிர விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி காலனி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சத்யநாராயணன், சங்கர், சவுந்தர் இவர்களுக்கு சொந்தமான ஆடுகளை அருகில் உள்ள நிலம் மற்றும் வனப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு அனுப்புவது வழக்கம்.
நேற்று மாலை சத்யநாராயணா, சங்கர் மற்றும் சவுந்தர் ஆகியோர் அவர்களுடைய ஆடுகளை பட்டியிலிருந்து மேய்ச்சலுக்கு அனுப்பி உள்ளனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்துள்ளன. தண்ணீர் குடித்த பின் சுமார் ½ மணி நேரத்திற்குள் மேச்சலுக்கு சென்ற ஆடுகள் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளது.
ஆடுகள் இறந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்காந்தி, ஜெயபால், வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மனுக்கு காசு மாலை அணிவித்தனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள வேப்பங்குப்பத்தில்கெங்கை யம்மன் கோவிலில் 152-ம் ஆண்டு திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதற்காக நேற்று காலை அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் தேசத்து மாரியம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னர், வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் தாரை தப்பட்டை முழங்க, கோலாட்டம், மயிலாட்டாம், பொய்கால் குதிரை, சிலம்பம் போன்றவைகளின் முன்பாக அம்மன் சிரசு ஊர்வலமாக சென்றது.
அப்போது, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக வழிநெடுக்கிலும் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடந்து, அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு தரிசனம் செய்தனர்.
காலை 6 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 2 வரை தொடந்து நடைபெற்று வந்தது. ஒடுகத்தூர், வேப்பங்குப்பம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
விழாவிற்க்கனா ஏற்ப்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி செய்திருந்தார். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த டாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பேர்ணாம்பட்டு கொத்தப்பள்ளி பகுதியை சேர்ந்த தினகரன் என்பவர் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக கடந்த 10ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வர 3 முதல் 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்து நடந்து வருகின்றனர்.
குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் தினகரன் என்பவர் தனது சொந்த செலவில் ஆட்டோவை வாங்கி உள்ளார்.
பேரணாம்பட்டு கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தினகரன் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு காலை 7 மணிக்கு பள்ளிக்கு வருகிறார்.
பள்ளியில் இருந்து ஆட்டோவை எடுத்துச் சென்று சாமஏரி, கொல்லைமேடு, உள்ளிட்ட பகுதியிலிருந்து பள்ளி மாணவ மாணவியர்களை இலவசமாக ஆட்டோவில் அழைத்து வருகிறார்.
இதனால் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திலும் எந்த ஒரு அவதியும் இன்றி சந்தோஷமாக பள்ளிக்கு வருவதாக ஆசிரியர் தினகரன் தெரிவிக்கிறார். தினந்தோறும் ஆட்டோவில் அழைத்து வந்து பாடம் கற்பிக்கும் இவருடைய சேவையை மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
- இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்
- உடலை டாக்டர்கள் தாயிடம் ஒப்படைத்தனர்
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தையை விட்டு சென்ற தாய் பல மணி நேரம் கழித்து தானாக திரும்பி வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரி பகுதியை சேர்ந்த மணி (வயது 30), நரிக்குறவர். இவரது மனைவி சங்கீதா என்கிற சினேகா(25) கர்பமாக இருந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் சினேகாவை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை பலவீனமாக சோர்ந்து காணப்படுவதால், மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பறிந்துரை செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களாக குழந்தை மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தை அபாய கட்டத்தில் உள்ளதாக டாக்டர்கள் தாய் சினேகா விடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அந்த குழந்தை நேற்று முன்தினம் இரவே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. அப்போது, இந்த தகவலை அந்த குழந்தையின் தாயிடம் டாக்டர்கள் தெரிவிக்க வந்துள்ளனர். ஆனால் சினேகா மருத்துவமனையில் இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கு தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து இறந்த குழந்தையை பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்திருந்தனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் தாலுகா போலீசில் ேநற்று புகார் அளிக்கப்பட்டது. குழந்தையை தாய் விட்டு ச்சென்றதாக மருத்துவ மனையில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சினேகா தனது கணவர் மணி மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு பல மணி நேரம் கழித்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள், குழந்தையை விட்டுவிட்டு எங்கு சென்றீர்கள்? என்று கேட்டனர்.
அப்போது குழந்தை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் கூறிய தகவலை, ரத்தினகிரிக்கு சென்று தனது கணவர் மற்றும் உறவினர்களை அழைத்து வர சென்றதாக கூறினார். குழந்தையின் உடலை டாக்டர்கள் தாய் சினேகா விடம் ஒப்படைத்தனர். இதனால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
- நேர்த்தி கடன் செலுத்தினர்
- நாளை சிரசு திருவிழா நடக்கிறது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் கஸ்பா கவுதமபேட்டை கெங்கை அம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று தேர் திருவிழா நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாலாபிஷேகமும் நடைபெற்றது தொடர்ந்து நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
முன்னதாக தேரோட்டத்தை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊர் நாட்டாமை டாக்டர் ஏ.கென்னடி, துணை நாட்டாமை ஏ.வி.செல்வம், நகரமன்ற உறுப்பினர் எம்.கற்பகம்மூர்த்தி, ஊர் கவுரவத் தலைவர் ஆர்.மூர்த்தி, ஊர் தலைவர் பி.மேகநாதன், ஊர் செயலாளர் எம்.வீராங்கன், ஊர் பொருளாளர் பி.மோகன், நகர்மன்ற உறுப்பினர் எம்.மனோஜ், டாக்டர் நாகராஜ், திமுக பிரமுகர்கள் ஜம்புலிங்கம், நாகேந்திரன், பொன்ராஜேந்திரன், கிருஷ்ணவேணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேவல்களை பலியீட்டும் உப்பு மிளகுகளை தூவி நேர்த்தி கடனை செலுத்தினார்கள் திருவிழா முன்னிட்டு நாளை காலை அம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கஸ்பா மற்றும் காந்திநகர் ஊர் பெரியோர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.
- நாளை நடக்கிறது
- 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாதத்தில் 3-வது வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்திட வேலைவாய்ப்புத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை வேலை அளிக்கும் தனியார் நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள அனைத்து வகை பதிவு தாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படட மாட்டாது. தனியார் துறை பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நாளை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொசு பத்தியால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அசோக் நகரை சேர்ந்தவர் உமா (வயது 60). கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் துளசிராமனுடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அருகில் கொசுவத்தி சுருளை ஏற்றுவிட்டு தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது கொசுவத்தி சுருள் உமா படுத்திருந்த மெத்தையில் பட்டு தீ பற்றிக் கொண்டது.
நல்ல உறக்கத்தில் இருந்த உமாவின் உடையில் தீப்பற்றி இருந்தது. உடலில் தீ பற்றியதால் உமா வலியால் அலறி துடித்தார். அவரது மகன் உமாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முதலீட்டார்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
தமிழ்நாடு அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை-2019-ன் படி குறைந்த பட்சம் 3 தொழில் கூடங்குளுடன் குறைந்த பட்சமாக 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் பொருட்டு திருத்திய அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் உடனடியாக செயலாக்கம் செய்ய ஏதுவாக முதலீட்டார்கள் மற்றும் தொழில் முனைவோர் கலந்தா லோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து நேற்று வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியில் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்க ஏதுவான இடம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், ஆர். திருமலை, தொழிலதிபர் எஸ்.செல்வம் உள்பட கைத்தறி நெசவாளர் சங்கத்தினர், விசைத்தறி நெசவாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென யானைகள் கூட்டத்தின் மீது மோதியது.
- சம்பவத்தால் பலமனோர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்பதி:
சித்தூர் மாவட்டம் பலமனேர் அருகே கவுன்டன்யா வனப்பகுதி உள்ளது.
இங்கு மான், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. தமிழக- ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு, குடியாத்தம், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு யானைகள் கூட்டம் குடியாத்தம்-சித்தூர் செல்லும் பலமனேர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றன.
அப்போது அந்த வழியாக மாங்காய் லோடு ஏற்றி வந்த லாரி திடீரென யானைகள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு 2 பெண் யானைகள், ஒரு ஆண் யானை பரிதாபமாக துடிதுடித்து இறந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் மாவட்ட வன அலுவலர் சைதன்ய குமார் ரெட்டி, பலமனேறு ரேஞ்சர் சிவனா மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
லாரி மோதியதில் இறந்த யானைகளை மீட்டனர். மேலும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பலமனோர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 15 நாட்களாக நீர் பாசனம் செய்ய முடியாவில்லை
- ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஓட்டேரி அடுத்த வானியன்குளம் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாய நிலங்கள் அதிகம் காணப்படும் இந்த பகுதியில் நெல், சேம்பு, கருணை, மஞ்சள், கடலை, கத்தரி மற்றும் வெண்டை உள்ளிட்ட பயிர் வகைகள் விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இறுதி ஊர்வல பூ பல்லக்கு மின் கம்பியின் மீது உரசியது. இதனால் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரின் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள், வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு கிடைக்கும்படி மின் மாற்றியை தற்காலிகமாக சரி செய்துள்ளனர்.
இதனால் விவசாய நீர் பாசன மின் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி கடந்த 15 நாட்களாக அந்த பகுதியில் உள்ள விவசாயிகளில் நீர் பாசனம் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால் பயிர்கள் வாடி வதங்கி கருகிப்போக தொடங்கியுள்ளது.
இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர்.
- டிராக்டர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு
- போலீசார் பேச்சுவார்த்தையடுத்து கலைந்து சென்றனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பொய்கை அடுத்த கந்தனேரியில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு டிராக்டர் மூலம் தினமும் மணல் அள்ளப்படுகிறது.
மணல் குவாரி
மேலும் மணல் அள்ளும் போது குடியாத்தத்திற்கு செல்லும் கூட்டு குடிநீர் பைப் லைனும் உடைக்கப்பட்டது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் உடனடியாக மணல் குவாரியை நிறுத்த வேண்டுமென அந்த பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால் ஆத்திர மடைந்த ஐதர்புரம் கிராம மக்கள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று கந்தனேரி மணல் குவாரிக்கு வந்தனர்.
அங்கு மணல் அள்ளிக் கொண்டு இருந்த டிராக்டர்களை சிறை பிடித்து, மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டக்காரர்கள் பாலாற்றில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் பேசினார். மேலும் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






