என் மலர்
திருவண்ணாமலை
- 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டனர்
- போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்
செங்கம்:
செங்கம் அடுத்த புதுப்பேட்டை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 நாள் வேலை தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக ஊராட்சி நிர்வாகம் அறிவித்து அதன்மூலம் பயனாளிகள் தேர்வு செய்து 100 நாள் வேலை வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்த பயனாளிகளை 10 வருடங்களுக்கு முன்பு உள்ள கணக்கீடு பட்டியல் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்படுத்தி தற்போது புதியதாக கணக்கீடு செய்து அதன்மூலம் பயனாளிகளை தேர்வு செய்திட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துறைச்சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதியில் உள்ள பெண்கள் பலமுறை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்கள் 100 நாள் வேலை அட்டையை சாலையில் போட்டு ஒப்பாரி வைத்து நூதனமுறையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினர். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
- மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை
- என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்திற்கான விவசாயிகள் குறை தீர்வுகூட்டம் கீழ் புதுப்பாக்கம் கிராமத்தில் சமுதாயக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் ஆர். அனாமிகா தலைமை தாங்கினார்.
தாசில்தார்கள் முரளி, ராஜலட்சுமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் வேளாண் பயிர்க் காப்பீட்டில் தனியார் நிறுவனத்தை சேர்க்க கூடாது என்றும், மாட்டு கொட்டகைக்கு வேண்டி மனு கொடுத்தும் பலன் இல்லை எனவும், கூட்டத்தை செய்யாறு தாசில்தார் அலுவலகத்தில் நடத்த வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அப்போது விவசாயிகள் கழுத்தில் என்எல்சி என்ற விளம்பர பதாகை தொங்கவிட்டபடி நெல் பயிர்களை அழித்துவிட்டு என்னதான் நீங்கள் சாப்பிட போகிறீர்கள் என கேள்வி கேட்கும் விதமாக விவசாயிகள் மாடுகள் போல வேடமிட்டு அரிசி, தவிடு கலந்துள்ள தண்ணீரை மாடுகள் போல மண்டியிட்டு குடித்தும், அகத்திக்கீரை தழை சாப்பிட்டும், என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாளிகைப்பட்டு ராஜ், பெருங்களத்தூர் ரகுபதி, சிருங்கட்டூர் முருகன், ஏனாதவாடி கஜேந்திரன், பில்லாந்தி தட்சிணாமூர்த்தி, திருபூண்டி ரகுபதி, அகத்தேரிபட்டு கிருஷ்ணன் ,கீழ் புதுப்பாக்கம் முனிரத்தினம் ஆகிய உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
- பாம்பு கடிக்கு காப்பீடு திட்டத்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வலியுறுத்தல்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, தாலுகாவில் நரசிங்கபுரம், கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஎஷ், இவரது மகன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது. இவரை விஷ பாம்பு கடித்தது.
உடனே ரமேஷ் அவரது மகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர் இல்லாததால். சேத்துப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சிகிச்சைக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை காண்பித்துள்ளார்.
அப்போது மருத்துவமனை தரப்பினர் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டையில் பாம்பு கடிக்கு, மருந்து மற்றும் சிகிச்சை, அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ் சேத்துப்பட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடி, மற்றும் சிகிச்சைக்கு, மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். விவசாய நிலத்தில் விஷ ஜந்துக்கள் அதிகமாக உள்ளது.
விவசாயிகள் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனையில் எங்களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகையால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடிக்கு, சிகிச்சைக்கு, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 2 ரப்பர் பாம்புகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
- 2-மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா, கரிக்கலாம்பாடி ஊராட்சியை அடுத்த ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 45), மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (54) விவசாயிகள்.
இவர்கள் இருவரும் இன்று (2-ந்தேதி) அதிகாலை 4 மணி அளவில், தங்களது நிலங்களில் விளைந்த மணிலா மற்றும் நெல் உள்ளிட்ட பொருட்களை, மாதப்பூண்டியை சார்ந்த பிரசாந்த் (26) என்பவருக்கு சொந்தமான மினி வேனில் ஏற்றிக்கொண்டு, கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
கருங்காலிகுப்பம் அருகே வரும்போது எதிர்பாராத நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் குமார், பழனி மற்றும் டிரைவர் பிரசாந்த் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் பிரசாந்த் மற்றும் குமார் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். பழனிக்கு தலை, கை மற்றும் காலில் படுகாயம் அடைந்து வாகனத்தில் சிக்கி கொண்டார்.
கீழ்பென்னாத்தூர் தீயணைப்பு துறையினர் 2-மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பழனியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 5 பேர் கைது
- சாமி தீபாராதனை காட்டுவதில் தகராறு
செய்யாறு:
செய்யாறு அடுத்த பெரும்பள்ளம் பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பத்மநாபன் (வயது 60). அதே பகுதியில் பச்சையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் திருவிழா நடப்பதால் சாமி வீதி உலா வருகிறது. இந்த நிலையில் பத்மநாபன் சாமி வீதி உலா வரும்போது வீடு வீடாக தீபாராதனை காட்டலாம் என கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவர் பத்மநாபனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமா ரியாக தாக்கினர். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை தடுக்க வந்த பத்மநாபன் மகன் ஜெயபிர காஷையும் தாக்கினார்.
மேலும் கணேசனின் ஆதர வாளர்கள் விஜய், கருணாக ரன், ஆறுமுகம், ரமேஷ்,
ஏகாம்பரம், பசுபதி, அருள் ஆகிய 7 பேரும் தந்தை, மகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
படு காயமடைந்த தந்தை, மகனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதேபோல் பத்ம நாபன் ஆதரவாளர்களான ஜெயபிரகாஷ், ஜெயசிம்மன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய 5 பேரும் கணேஷ் மற்றும் அவரது உறவினர் விஜயை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் வேலூர் அரசு மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து பத்மநா பன் தரப்பில் அவரது மகன் ஜெயபிரகாஷூம், கணேசன் தரப்பில் அவ ரது சகோதரர் ஆறுமுகமும் செய்யாறு போலீசில் தனிதனியாக புகார் செய்தனர்.
புகாரின்பேரில் கணேச னின் உறவினர்களான கருணாகரன், ஆறுமுகம், ரமேஷ், ஏகாம்பரம், பசு பதி ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீஸ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்லங்குப்பம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
- போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் 300 குடும்பத்தினர் பொதுப்பிரிவினரும் 200 குடும்பத்தினர் பட்டியல் இனத்தவரும் வாழ்ந்து வருகின்றனர்.
ஊருக்குள் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இதில் பொது பிரிவினர் மட்டும் சாமி கும்பிட்டு வந்தனர். 50 வருடங்களுக்கு மேலாக பட்டியலினத்தவர்களை அனுமதிப்பது இல்லை.
பல ஆண்டுகளாக கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முகநூல் மூலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் செல்லங்குப்பம் கிராமத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தாங்களும் இந்த கோவிலுக்குள் வருவோம் என்று பட்டியலின மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி இன்று காலை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
மேலும் அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தலைமையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
- பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது.
வேங்கிக்கால்:
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் அக்னி தலமாக விளங்கி வருகிறது.
இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி ஆடி மாத பவுர்ணமி நேற்று அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 1 மணிக்கு நிறைவடைந்தது.
நேற்று முன்தினம் இரவு முதல் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதை அமைந்து உள்ள 14 கிலோமீட்டர் தொலைவுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதிகாலை தொடங்கி இரவு 11 மணி வரை இடைவேளை இல்லாமல் பக்தர்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராஜ கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடிந்ததும் திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்தனர்.
தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
கடந்த சில மாதங்களாக கிரிவல பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு பவுர்ணமியிலும் அதிகபட்சமாக 10 லட்சம் பக்தர்கள் வரை கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.
பவுர்ணமி நாட்கள் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. பவுர்ணமி கிரிவலத்திற்கு கூடுதல் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்களின் தேவை அதிகரித்திருக்கிறது.
பக்தர்கள் சொந்த ஊர் செல்ல திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ரெயில்களில் இடம் கிடைக்காமல் தவித்தனர். பவுர்ணமி நாட்களில் சென்னை, விழுப்புரத்திற்கு சிறப்பு ரெயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும்.
அதோடு, போக்குவரத்து மாற்றம், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
- குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
- போலீசார் 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
வந்தவாசி:
விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்தார்.
வந்தவாசி தாலுகா அலத்துரை கிராமத்தை சேர்ந்த காண்டீபன் (வயது 40), திருவண்ணாமலை தாலுகா நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (50) ஆகியோர் தங்களிடம் இரிடியம் கண்டுபிடிககும் ரைஸ் புல்லிங் எந்திரம் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களிடம் சங்கர் கணேஷ் ரூ.20 ஆயிரம் கொடுத்துள்ளார்.
பின்னர் அவர்கள் காட்டிய ரைஸ் புல்லிங் எந்திரத்தை பார்த்தபோது அதில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சங்கர்கணேஷ் கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து வந்தவாசி போலீசார் ஆரியாத்தூர் கிராமத்திற்கு சென்று காண்டீபனை கைது செய்து ரைஸ் புல்லிங் எந்திரம் மற்றும் உபகரணங்களை கைப்பற்றினர்.
மேலும் போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய குணசேகரனை விரட்டி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
காண்டீபன் செங்கல்பட்டு மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் போலி டாக்டராக மருத்துவம் பார்த்தபோது ஒரத்தி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. குணசேகரன் மீது திருவண்ணாமலை போலீசாரால் தொடரப்பட்ட சிலை கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும் இவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு, தஞ்சாவூர், சென்னை புரசைவாக்கம், தர்மபுரி, அரியலூர், புதுச்சேரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரைஸ் புல்லிங் எந்திரம் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து போலி ரைஸ் புல்லிங் எந்திரம், ரூ.20 ஆயிரம், ஒரு மோட்டார்சைக்கிள், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
சதுரங்க வேட்டை படத்தில் கலசத்தை வைத்து ஏமாற்றும் காட்சி போல் சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- வேலிகள் அமைக்க வேண்டும்
- பொதுமக்கள் கோரிக்கை
செங்கம்:
செங்கம் பேரூராட்சி சார்பில் போளூர் நெடுஞ்சாலையில் மில்லத் நகர் முதல் நீதிமன்றம் செல்லும் ரோடு வரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை இந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு அது பராமரிப்பின்றி காய்ந்து போனது.
இந்நிலையில் மீண்டும் தற்போது மில்லத்நகர் முதல் நீதிமன்றம் ரோடு வரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
இதில் பாதி தூரத்திற்கு மரக்கன்றுகளை பாதுகாப்பதற்காக மரக்குச்சிகளால் வேலிகள் அமைக்கப்பட்டு மீதமுள்ள மரக்கன்றுகள் அப்படியே விடப்பட்டுள்ளது.
மேலும் இதில் சில இடங்களில் மரக்கன்றுகள் காய்ந்து வீணாகி போனதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பேரூராட்சி சார்பில் நடப்படும் மரக்கன்றுகளை பேரூராட்சி முறையாக பராமரிக்காததால் ஏற்கனவே அங்கு நடப்பட்ட மரக்கன்றுகள் வீணாகி போனது. தற்போது மீண்டும் செலவு செய்து அந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
முழுவதும் வேலிகள் அமைத்து அவ்வப்போது அதற்கு தண்ணீர் ஊற்றி முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், ஏரியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு வருவதால் பேரூராட்சி சார்பில் நடப்பட்டு வேலிகள் அமைக்கப்படாமல் உள்ள மரக்கன்றுகளை மேய்ந்து விடுகிறது.
எனவே நடப்பட்டுள்ள அனைத்து மரக்கன்றுகளுக்கும் உடனடியாக வேலிகள் அமைக்க வேண்டும் தண்ணீர் பாய்த்து மரக்கன்றுகளை வளர்க்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தற்காலிக பணிநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தல்
- வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடத்தது
ஆரணி:
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்குருநாத்பிரபுவை தற்காலிக பணிநீக்கம் செய்ததை கண்டித்து ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இணை செயலாளர் இல.பாஸ்கரன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தற்காலிக பணிநீக்கத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
- பஸ் நிலையம் முழுவதும் ஆந்திர மாநில பஸ்கள்
- போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதம் நடைபெறும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கிரிவலம் செல்கின்றனர்.
இதில் சமீப காலமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார் மற்றும் ஆந்திர மாநில பஸ்களில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு இரவு ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட அந்த மாநில அரசு பஸ்களில் இருந்து பக்தர்கள் குவிந்ததனர்.
பவுர்ணமிக்கு முந்திய நாளே வந்த ஈசானிய லிங்கம் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் ஆந்திரா மாநில பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் ஆந்திர மாநில பஸ்கள் இருப்பதை பார்த்த போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர்.
இதன் பிறகு உடனடியாக அந்த பஸ்களை வெளியேறுமாறு டிரைவர்களை வலியுறுத்தி பஸ்களை வெளியேற்றினர்.
- கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
- கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பா தையில் பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஆடி மாத பவுர்ணமி அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகின்றது. இதனால் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்கள் எவ்வித இடையூறுகளும் இன்றி சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யபட்டன.
போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்தனர். 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப் பாதையை 14 மண்டலங்களாக பிரித்து அங்கு குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடத்தில் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது மாவட்ட எஸ்.பி. டாக்டர் கார்த்திகேயன், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், சினம் பெருமாள், ஆர்டிஒ மந்தாகினி, டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, குணசேகரன், ஆய்வாளர் சுபா, வட்டாட்சியர் சரளா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.






