என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    முழு ஊரடங்கால் பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதி கிடையாது என்றும், பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு 24.3.2020 முதல் ஊரடங்கு பிறப்பித்து தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நேற்று முதல் ஒருவார காலத்திற்கு தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.02 மணி முதல் நாளை (புதன்கிழமை) மாலை 5.36 வரை மலையை பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

    இதனால் பவுர்ணமி கிரிவலத்துக்கு வரவேண்டாம் என பக்தர்கள், பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா பரவல் கட்டுப்படுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
    கண்ணமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் நேற்று அய்யம்பாளையம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் கேனில் சாராயம் கடத்தி வந்த ஆரணி தாலுகா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் ஞானவேல் (35) என்பவரை கைது செய்தனர்.
    கொரோனா தொற்று பரவலை தடுத்திட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம்கள், செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை, கொரோனா பராமரிப்பு மையம் ஆகிய இடங்களில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, உதவி கலெக்டர் என்.விஜயராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா, செய்யாறு நகராட்சி ஆணையாளர் எம்.எஸ்.பிர்த்தி ஆகியோருடன் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எல்லப்பன் நகர், பைங்கிணர், அண்ணா நகரில் கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக பரிசோதனை மேற்கொண்டதையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 400 படுக்கை வசதியுடன் செயல்பட்டு வரும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தினை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, உணவு, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் குறித்து கேட்டறிந்தார். செய்யாறு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 950 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் சராசரியாக தினமும் 600 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யாறு சுகாதார மாவட்டத்தில் தினமும் 1500 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் 2000 படுக்கை வசதிகளுடன் பல்வேறு பகுதிகளில் கொரோனா பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக 1000 படுக்கை வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. செய்யாறு அரசு மருத்துவமனையில் விரைவில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி அலகு அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செய்யாறு தலைமை அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக 20 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா பராமரிப்பு மையத்தில் விரைவில் சித்த மருத்துவ சிகிச்சை பிரிவு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இம்மையத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 100 படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 232 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    காவல் துறை மூலம் மாவட்ட எல்லையில் 14 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும், அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 1,200 படுக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் 1,200 படுக்கைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனந்தல், சொரகொளத்தூர், நார்த்தாம்பூண்டி ஆகிய கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தலா 500 வீதம் மொத்தம் 1,500 முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கினார்.

    மேலும் அவர் சொரகொளத்தூர் மற்றும் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாயுடுமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

    தொடர்ந்து நார்த்தாம்பூண்டி மற்றும் தேவனாம்பட்டு கிராமங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பூதமங்கலம் ஆதிகேவச பெருமாள் கோவில் திருத்தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் புதிய கான்கீரிட் பந்தல் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் சந்தீப்நந்தூரி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ., சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அஜிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் அரசு அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
    வாணாபுரம் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட மீன் வியாபாரி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள தச்சம்பட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் கிறிஸ்துராஜ் (வயது 40). இவருக்கு ரேகா (35) என்ற மனைவியும், கிறிஸ்டி (5), கிறிஸ்டோபர் (3) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். கிறிஸ்துராஜ் மீன் வியாபாரம் செய்து வந்தார்.

    கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரேகா அவரது சொந்த ஊரான சென்னைக்கு குழந்தைகளுடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கிறிஸ்துராஜ் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை கிறிஸ்துராஜ் அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தச்சம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் அழகுராணி, தச்சம்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    பின்னர் கிறிஸ்துராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிறிஸ்துராஜ் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈருடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது உறவினர் ஊரான தச்சம்பட்டு புதூர் பகுதிக்கு வந்திருந்தார். இந்த சிறுவன் நேற்று முன்தினம் கிறிஸ்துராஜுடன் இருந்துள்ளான்.

    அப்போது கிறிஸ்துராஜ் மது அருந்திவிட்டு சிறுவனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதில் ஆத்திரமடைந்த சிறுவன் காய்கறி வெட்டும் கத்தியால், கிறிஸ்துராஜை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, கிறிஸ்துராஜ் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் 2 மோதிரத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் அந்தப்பகுதியில் மறைந்திருந்த சிறுவனை கைது செய்து பணம் மற்றும் மோதிரத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான்.

    17 வயது சிறுவன், மீன் வியாபாரியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தண்டராம்பட்டு அருகே மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தச்சம்பட்டு புதூரை சேர்ந்த குழந்தைசாமி என்பவரது மகன் திருத்ராஜ் (வயது40) மீன் வியாபாரி. இவர் கோழிப்பண்ணையும் வைத்திருந்தார்.

    திருத்ராஜ் அங்குள்ள ஒருமாடி வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை அவரிடம் மீன் வாங்க வந்த சிலர் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது திருத்ராஜ் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நள்ளிரவில் வீட்டு மாடியில் இருந்த அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். திருத்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ?என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று இரவு திருத்ராஜ் வீட்டிற்கு யாராவது சென்றார்களா? மேலும் முன்விரோதிகள் யாரும் உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மீன் வியாபாரி கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தச்சம்பட்டு புதூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆரணியில் காரணமின்றி சாலைகளில் சுற்றியவர்களை போலீசார் தோப்புக்கரணம் போடவைத்து, உறுதிமொழியும் ஏற்க வைத்தனர்.
    ஆரணி :

    கொரோனா தோற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    ஆரணி நகரில் காலை 10 மணிக்கு பிறகும் சாலைகளில் எப்போதும் போல இரு சக்கர வாகனங்களிலும், கார், வேன்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகி்ன்றனர்.

    இ-பதிவு இல்லாமல் வாகனங்கள் செல்வதை துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ்பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன், ரகு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேலு, தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் குமரவேலு, மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார், உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணித்து இ- பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

    நேற்று கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த எலக்ட்ரிக் கடைகள், பிரின்டிங் பிரஸ் உள்ளிட்ட 15 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பழைய பஸ் நிலையம் அருகே காரணமின்றி வாகனங்களில் சுற்றி வந்த இளைஞர்களை போலீசார் நிறுத்தி அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து, உறுதிமொழியும் எடுக்க செய்தனர்.
    சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டு உள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப்பாதையில் அரசு கலைக்கல்லூரி அருகில் ஊரக வளர்ச்சித்துறையின் சுற்றுலா மாளிகையில் கொரோனா பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு 100 படுக்கைகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மையம் நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதைத் தொடர்ந்து அவர் திருவண்ணாமலை பே கோபுரம் பிரதான தெரு, சட்டநாயகன் தெரு, காஞ்சி சாலை ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.

    மேலும் சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டு உள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினையும் பார்வையிட்டார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்துடன் இணைந்து திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறித்து சின்னக்கடை தெரு, வேங்கிக்கால் இந்திரா நகர், அறிவியல் பூங்கா ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள், ஊரடங்கு நேரம் முடிந்தும் வாகனத்தில் தக்காளி வியாபாரம் செய்தவர், டீக்கடை நடத்தியவர் ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மளிகை மற்றும் காய் கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    ஆரணி:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மளிகை மற்றும் காய் கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்றகடைகள் திறக்க அனுமதி கிடையாது. ஆனால் ஆரணியில் அனுமதிக்கப்படாத சில கடைகளும் விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்தது.

    அதைத்தொடர்ந்து நேற்று ஆரணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியளிக்கப்படாத ஜவுளி, எலக்ட்ரிக்கல், பாத்திர மெக்கானிக் ஷாப், பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகளை வெளிப்பக்கமாக பூட்டிக்கொண்டு வியாபாரம் செய்தது தெரியவந்தது. அதன்பேரில் 42 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத மளிகை கடைகள் பூட்டப்பட்டது.

    மெடிக்கல்ஸ், நாட்டு மருந்து கடை உள்ளிட்ட கடைகளுக்கு முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல், வருவாய் ஆய்வாளர் வேல்மணி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயச்சந்திரன், ஆரணி டவுன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, நந்தகுமார் மற்றும் குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதேபோல் ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சேவூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் அந்தப்பகுதியில் திறந்திருந்த இரண்டு அடகுக் கடைகள், பேன்ஸி ஸ்டோர், மொபைல் ஷோரூம் உள்ளிட்ட 6 கடைகளுக்கு சீல் வைத்தனர். மொத்தம் 48 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் வலம் வந்தவர்களை போலீசார் விசாரித்து முறையான ஆவணங்களுடன் வந்தவர்களைத் தவிர மற்றவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
    திருவண்ணாமலை அருகே ரிமோட் கார் வாங்குவதற்காக சேமித்த பணத்தை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய 6-ம் வகுப்பு மாணவனை கலெக்டர் பாராட்டினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை திருவூடல் தெருவை சேர்ந்தவர் மோகன்குமார், கூலி தொழிலாளி. இவரது மனைவி ஞானசவுந்தரி, ஆசிரியை. இவர்களுக்கு ஞானசம்பந்தன் (வயது 17), மாணிக்கவாசகம் (11) என 2 மகன்கள் உள்ளனர். ஞானசம்பந்தன் 12-ம் வகுப்பும், மாணிக்கவாசகம் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மாணிக்கவாசகம் தான் ரிமோட் கார் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வந்த பணத்தை தமிழக முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்து, பெற்றோரிடம் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மாணவன் மாணிக்கவாசகம், தனது அண்ணன் ஞானசம்பந்தனுடன் நேற்று சைக்கிளில் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று, கலெக்டர் சந்தீப்நந்தூரியை நேரில் சந்தித்து தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் பிறந்த நாளான்று தந்தை வழங்கிய ரூ.200 உள்பட ரூ.1400-ஐ வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் பணத்தை முதல்- அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி விடுவதாக தெரிவித்து, மாணவனை பாராட்டினார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் முககவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
    ஆரணியில் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மரத்தடியில் சிகிச்சையளிப்பதாக புகார் வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் டாக்டர் ஒருவர் ஆரணி பஸ் நிலையம் அருகே மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு மருத்துவமனையில் தனியாக திறந்த வெளியில் தகரத்தால் கொட்டகை அமைத்து, அதில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி உள்ளார்.

    மேலும் மரத்தடியில் வைத்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக புகார்கள் வந்தது. கொட்டகை அமைத்து சிகிச்சை அளிப்பதற்கு பொதுமக்களும், வியாபாரிகளும் பல முறை எதிர்ப்பு தெரிவித்து, அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவண்ணாமலை சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி உத்தரவின் பேரில், ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் கவிமணி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், ஆரணி தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மரத்தடியில் சிகிச்சை அளிக்கக்கூடாது, மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
    வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை துணை சபாநாயகர் பிச்சாண்டி பார்வையிட்டார்.
    வேட்டவலம்:

    வேட்டவலம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி முகாமினை துணை சபாநாயகர் பிச்சாண்டி பார்வையிட்டு, சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் மருந்துகள், தடுப்பூசிகள் போதிய அளவில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மருத்துவமனைக்கு தேவையான பொருட்கள், மருந்துகள் குறித்து தெரிவித்தால் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

    தொடர்ந்து அணுக்குமலை கிராமத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட அவர் ஆவூர், கோணலூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி மற்றும் தேவையான மருத்துவ பொருட்கள் பற்றி கேட்டறிந்தார். அப்போது கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம், வேட்டவலம் நகர செயலாளர் ப.முருகையன், நகர துணைச் செயலாளர் ரமேஷ், இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, பாலமுருகன், அன்சர் உட்பட பலர் உடனிருந்தனர்.
    ×