என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    களம்பூர் அருகே மினிவேனில் கடத்திச்சென்ற 660 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.அரவிந்த், போளுர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் ஆகியோர் மேற்பார்வையில், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சுரேஷ்பாண்டியன் தலைமையில் களம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷாகீன், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று காலை ஆரணி - போளூர் நெடுஞ்சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 660 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருந்தது.

    அதைத்தொடர்ந்து மது பாட்டில்களுடன் மினி வேனை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை கடத்தி வந்ததாக முக்குறும்பை மேல்காலனி பகுதியை சேர்ந்த மினிவேன் டிரைவர் திலீப்குமார், கர்நாடக மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்த முருகன், பார்த்திபன், முக்குறும்பை கீழ் காலனி பகுதியை சேர்ந்த மகேந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கண்ணமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஊரடங்கு காலத்தில் போலீசார் கடந்த மே மாதம் 10-ந்தேதியில் இருந்து 31-ந்தேதி வரை தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது 503 லிட்டர் சாராயம், 65 லிட்டர் மதுபானம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 19 சாராய வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
    கண்ணமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் குறுக்குத் தெரு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அவரவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக பிள்ளையார் கோவில் தெரு, குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டது.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 15 வார்டுகளிலும் ெகாரோனா தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் பணி கடந்த 6மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது வேட்டவலம் செயல் அலுவலர் சுகந்தி, பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    கண்ணமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பேரூராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு பொதுமக்களை கொரோனா பாதிப்பிலிருந்து மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    போளூர் பேரூராட்சியில் 4 பேருக்கும், சுற்றியுள்ள கிராமங்களில் 11 பேருக்கும் என 15 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.

    இவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் அனுப்பி வைத்தார்.

    செங்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று 21 நபர்களுக்கு தொற்று உறுதியானது. மேலும் செங்கம் மருத்துவ வட்டத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம்கள் மூலம் 406 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வரவேண்டும் எனவும், முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்க வேண்டுமென சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
    முழு ஊரடங்கால் முலாம் பழங்கள் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் விளை நிலங்களிலேயே அழுகிய நிலையில் கிடக்கிறது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரும்பாலும் விவசாயம் நிறைந்த மாவட்டமாகும். இங்கு கோடை காலத்தில் பெரும்பாலும் அதிகளவில் முலாம் பழம் பயிரிடப்படும். அதுவும் திருவண்ணாமலை அருகில் உள்ள வாணாபுரம், தானிப்பாடி, சதாகுப்பம், இளையங்கண்ணி, அகரம்பள்ளிப்பட்டு, சின்னியம்பேட்டை, வேப்பூர், டி.வேலூர், ரெட்டியார்பாளையம், மலையனூர், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் மற்றும் அதன் சுற்றி உள்ள கிராமங்களில் பெரும்பாலும் முலாம்பழம் பயிரிட்டு வருகின்றது.

    இந்த பழம் ஜூஸாகவும், பழமாகவும் விற்பனை செய்வார்கள். இது பயிரிட ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவாகும் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. முலாம்பழம் பயிரிட்டால் மூன்று மடங்கு லாபம் தரும் என்றும் கூறப்படுகிறது.

    விவசாயிகள் முலாம்பழம் பயிரிட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று விற்பனை செய்வார்கள். இந்த ஆண்டு வழக்கம் போல் முலாம் பழம் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா தொற்றின் 2-ம் அலையால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது உள்ள ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் விவசாய நிலங்களில் பல ஏக்கரில் முலாம்பழம் பயிரிட்டு அறுவடை செய்யும் நேரத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

    இதனால் விளை நிலங்களிலேயே முலாம் பழம் அழுகிய நிலையில் கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் உணவு தயார் செய்யும் பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவில், டி.பி.எஸ். அறக்கட்டளை, காமாட்சி அம்மன் கோவில், செங்கம் புதூர் மாரியம்மன் கோவில், நீப்பத்துறை வெங்கடாஜலபதி கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் சார்பில் தினசரி 2 ஆயிரத்து 800 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேட்டவலம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    அதுமட்டுமின்றி படவேடு ரேணுகாம்பாள் கோவில் சார்பில் ஆரணி மருத்துவமனைக்கு தினசரி 500 பேருக்கும், செய்யாறு வேதபுரீசுவரர் கோவில், முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில் சார்பில் செய்யாறு மருத்துவமனையில் 250 பேருக்கும், எலத்தூர்- மோட்டூர் சுப்பரமணிய சுவாமி மற்றும் பருவத மலை மத்யார்ச்சுனேசுவரர் கோவில் சார்பில் போளூர் அரசு மருத்துவமனையில் 250 பேருக்கும், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் சார்பில் வந்தவாசி மருத்துவமனையில் 250 பேருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை 85 ஆயிரம் பேருக்கு கோவில்கள் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உணவு தயார் செய்யும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் சந்தீப்நந்தூரி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது உணவு தயாரிக்கும் முறை, பொட்டலங்கள் கட்டும் பணி ஆகியவற்றை துணை சபாநாயகர் பார்வையிட்டார். மேலும் உணவு கூடங்களை சுத்தமாக வைத்து கொண்டு தரமாக உணவு தயாரிக்க வேண்டும் என்று கோவில் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்டனர். அதில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் அவர்கள் பார்வையிட்டனர். இதில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், பல்வேறு தொழில் சார்ந்தவர்களுக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிதம்பரம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், அருணாசலேஸ்வரர் கோவில் சூப்பிரண்டு அய்யம்பிள்ளை, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள், சத்துணவு உதவியாளர்கள், அனைத்து அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி.மூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆ.பெ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    முகாமை ஆரணி உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் தாசில்தார் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களில் பணிபுரியும் அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. கீழ்பென்னாத்தூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 214 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒன்றிய ஆணையாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) குருமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

    முன்னதாக ஆவூர் கிராமத்தில் நடந்த தடுப்பூசி போடும் முகாமையும் திட்ட இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜபாரி உடனிருந்தார்.

    கண்ணமங்கலம் அருகே உள்ள குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிவளாகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.

    இதில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்தோடு வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    இப்பணிகளை சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார், குப்பம் ஊராட்சி தலைவர் அனிதாமுரளி, கிராம நிர்வாக அலுவலர் ஜோதிமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலையில் உள்ள ரமணா மறுவாழ்வு இல்லத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட மனநலம் குன்றியவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமில் மனநலம் குன்றியவர்கள் உள்பட தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரமேஷ்குமார், மருத்துவ அலுவலர் அனிதா, சுகாதார ஆய்வாளர் சீனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வந்தவாசி அருகே இந்திரா நகரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை தாசில்தார் திருநாவுக்கரசு ஆய்வு செய்து, டாக்டர் ஷோபனாவிடம் சுகாதாரம் மற்றும் போதிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் மயில்வாகனம், உதவி செயற்பொறியாளர் சபாநாயகம், கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், மேற்பார்வையாளர் அன்பு மற்றும் செவிலியர்கள், சாத்துமங்களம் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா மூர்த்தி, துணை தலைவர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில ஜோடிகள் அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணத்திற்கு முன்பதிவு செய்யாததால் ராஜகோபுரத்தின் முன்பு மாலை மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.
    திருவண்ணாமலை :

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொள்ள பல மாதங்களுக்கு முன்பே சில ஜோடிகள் முன்பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே கடந்த 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஏற்கனவே முன்பதிவு செய்து கொண்ட ஜோடிகள் குறிப்பிட்ட சில உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் முன்பதிவு செய்து இருந்த 3 திருமண ஜோடிகள் தங்களது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து திருமணம் செய்து கொண்டனர்.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில ஜோடிகள் அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணத்திற்கு முன்பதிவு செய்யாததால் ராஜகோபுரத்தின் முன்பு மாலை மாற்றி கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

    அதுமட்டுமின்றி அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் இரட்டை பிள்ளையார் கோவில் முன்பு சில ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். மணமக்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர்கள் விளக்கமளித்து உள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்டத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனாபாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்ட போது, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

    இந்த நிலையில் கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளதாக 2 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பரிசோதனை செய்து பார்த்ததில் சைனஸ் பிரச்சினை போன்று தெரிகிறது. கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து அவர்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளது என்றனர்.
    கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆணையர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
    செய்யாறு:

    முன்னதாக செய்யாறு சுற்றுலா மாளிகையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை அலுவலர்களுடன் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், சமுதாய கருத்தாளர்கள் வீடு, வீடாக சென்று கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருப்பவர்களை கண்டறிந்து சுகாதார மையத்திற்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒட்டுமொத்த துப்புரவு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா நோய் தாக்கத்தினால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் விதிகளுக்கு உட்பட்டு வேலை வேண்டி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றார்.

    அதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 400 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, மருந்துகள், உணவு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், ரத்த அணு பரிசோதனை என்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகளை பார்வையிட்டார். அசனமாப்பேட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமையும் அவர் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது கலெக்டர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, செய்யாறு வருவாய் கோட்ட அலுவலர் என்.விஜயராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா உடனிருந்தனர்.

    தொடர்ந்து பாப்பந்தாங்கல் ஊராட்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா முதலுதவி பெட்டியினை வழங்கினார்.
    திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் பொது சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 44 வயதினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ஒன்றியம் வேங்கிக்கால் ஊராட்சியில் நேற்று ஊரக வளர்ச்சித்துறை, பொது சுகாதார துறை சார்பில் 18 வயது முதல் 44 வயதினர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 முதல் 44 வயதினர் 164 பேருக்கும், 45 வயதுக்கும் மேற்பட்ட 62 பேருக்கும் என மொத்தம் 226 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

    இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் முகாமில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைவாணிகலைமணி, ஆணையாளர் ஆ.சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை ஆகியோரும் முகாமை பார்வையிட்டனர்.

    முன்னதாக வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனாவிலிருந்து மீள அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாந்திதமிழ்ச்செல்வன் செய்திருந்தார். முடிவில் வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் நாராயணன் நன்றி கூறினார்.

    போளூர் பேரூராட்சி மற்றும் கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றன. போளூரில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி, களம்பூர், கஸ்தம்பாடியில் இலங்கை அகதிகள் முகாம், சோமந்தபுத்தூர், சந்தவாசல், கேளூர், வாழியூர் ஆகிய 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்களை தாசில்தார் சாப்ஜான் தொடங்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயவேல், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 7.இடங்களில் 382 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதில் சில இடங்களில் ஆரணி உதவி கலெக்டர் நாராயணன், போளூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சோமந்தபுத்தூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்தீப் நந்தூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்தும், முக கவசம் அணிவதன் முக்கியம், சமூக இடைவெளி கடைப்பிடித்தலின் பயன் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    மேலும் நலிந்த 3 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் வழங்கினார். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    செங்கம் பஸ்நிலையம், மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட சி.நம்மியந்தல், ஜப்திகாரியந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சேத்துப்பட்டு தாலுகா சூசை நகரில் மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்ட பிரபு தலைமையில் சேத்துப்பட்டு தாசில்தார் பூங்காவனம், சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா ஆகியோர் முன்னிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் ஒதலவாடி, பத்தியாவரம் ஆகிய கிராமங்களில் 228 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இதேபோல் பெரணமல்லூர் வட்டாரத்தில் விளாநல்லூர், பூங்குணம், பெரணமல்லூர் ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு துணை சுகாதார புச்சியியல் வல்லுனர் துரைராஜ், விளாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் போளூர் தாசில்தார் சாப்ஜான் முன்னிலையில் நடைபெற்றது. சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மற்றும் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்கள் 67 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

    இதில் சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வாலிபால் விளையாடிய மாணவர்களிடம் ரூ.4000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் முழு ஊரடங்கை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் நேற்று மாலை ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

    அப்போது திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாணவர்கள் சிலர் வாலிபால் விளையாடிக் கொண்டிருப்பது ட்ரோன் கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.

    தேவையின்றி வெளியில் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல் மாணவர்கள் விளையாடி கொண்டு இருப்பதை அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்குறிப்பிட்ட பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து மாணவர்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

    அதன்படி 20 மாணவர்களுக்கும் மொத்தம் ரூ.4,000 அபராதம் விதிக்கப்பட்டது. போலீசாரின் அதிரடி நடவடிக்கையை அறிந்த மாணவர்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

    பின்னர் அபராத தொகையை செலுத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தேவையான அளவு கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட போளூர் சாலையில் ராமகிஷ்ணா ஓட்டல் மற்றும் திருக்கோவிலூர் சாலையில் சுபலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் திருக்கோவிலூர் சாலையில் நகராட்சி அலுவலகத்தில் அனுமதி பெற்று தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யப்பட்டதை பார்வையிட்டு வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுரை வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    18 வயதில் இருந்து 44 வயது உடையவர்களுக்கு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் நேற்று மட்டும் 58 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    மாவட்டத்தில் தேவையான அளவுக்கு கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. இந்த முகாம்களுக்காக 35 ஆயிரம் டோஸ் வந்து உள்ளது.

    தகுதி உள்ள அனைவருக்கும் இந்த முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டு உள்ளது.

    மேலும் தற்போது நடைமுறையில் உள்ள 100 சதவீத ஊரடங்கினால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வீட்டின் அருகிலேயே விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 2 ஆயிரம் நடமாடும் வாகனங்கள் மற்றும் தள்ளு வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலையில் ஊரடங்கு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நிரப்பிட முதல்-அமைச்சரிடம் இருந்து வந்த உத்தரவின்படி நேர்முகத் தேர்வின் மூலம் 40 டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மூலம் 20 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 25 லேப் டெக்னீசியன்ஸ், 60 மல்டி பர்போஸ் சுகாதார பணியாளர்கள், 50 செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மற்ற விண்ணப்பங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவ பணியாளர்கள் தேவைப்பட்டால் இந்த விண்ணப்பங்களில் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ஆக்சிஜன் படுக்கை எண்ணிக்கை கூட்டுவதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை மற்றும் ஆயுஸ் மருத்துவமனை வளாகத்தில் பல பயன்கள் கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு அலகு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அது செயல்பாட்டுக்கு வந்தால் கூடுதலாக சிலிண்டர்கள் பொறுத்தப்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்கு சிகிச்சை அங்கேயே செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் வெங்கடேசன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பர்ட், வினோத்கண்ணா, கார்த்திகேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.
    செங்கம் பகுதியில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
    செங்கம்:

    செங்கம் பகுதியில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேபோல செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்தில் 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள ஊரடங்கிற்கு ஒத்துழைத்து வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டாம் எனவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணிந்து கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைக்க வேண்டுமென சுகாதாரத்துறை அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதேபோல போளூர் பேரூராட்சி பகுதியில் 6 பேருக்கும், சுற்றி உள்ள கிராமங்களில் 16 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் 22 பேரையும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை, சேத்துப்பட்டு பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் சுந்தர் அனுப்பி வைத்தார்.
    ×