என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காக உணவு தயார் செய்யும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்த காட்சி
    X
    அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காக உணவு தயார் செய்யும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆய்வு செய்த காட்சி

    அருணாசலேஸ்வரர் கோவிலில் உணவு தயார் செய்யும் பணி - துணை சபாநாயகர் ஆய்வு

    அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் உணவு தயார் செய்யும் பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாசலேஸ்வரர் கோவில், டி.பி.எஸ். அறக்கட்டளை, காமாட்சி அம்மன் கோவில், செங்கம் புதூர் மாரியம்மன் கோவில், நீப்பத்துறை வெங்கடாஜலபதி கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் சார்பில் தினசரி 2 ஆயிரத்து 800 பேருக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேட்டவலம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    அதுமட்டுமின்றி படவேடு ரேணுகாம்பாள் கோவில் சார்பில் ஆரணி மருத்துவமனைக்கு தினசரி 500 பேருக்கும், செய்யாறு வேதபுரீசுவரர் கோவில், முனுகப்பட்டு பச்சையம்மன் கோவில் சார்பில் செய்யாறு மருத்துவமனையில் 250 பேருக்கும், எலத்தூர்- மோட்டூர் சுப்பரமணிய சுவாமி மற்றும் பருவத மலை மத்யார்ச்சுனேசுவரர் கோவில் சார்பில் போளூர் அரசு மருத்துவமனையில் 250 பேருக்கும், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் சார்பில் வந்தவாசி மருத்துவமனையில் 250 பேருக்கும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி முதல் நேற்று வரை 85 ஆயிரம் பேருக்கு கோவில்கள் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு வழங்குவதற்காக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உணவு தயார் செய்யும் பணியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் கலெக்டர் சந்தீப்நந்தூரி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

    அப்போது உணவு தயாரிக்கும் முறை, பொட்டலங்கள் கட்டும் பணி ஆகியவற்றை துணை சபாநாயகர் பார்வையிட்டார். மேலும் உணவு கூடங்களை சுத்தமாக வைத்து கொண்டு தரமாக உணவு தயாரிக்க வேண்டும் என்று கோவில் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    முன்னதாக அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு மேற்கொண்டனர். அதில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள், விவசாயிகள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் அவர்கள் பார்வையிட்டனர். இதில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும், பல்வேறு தொழில் சார்ந்தவர்களுக்கும், 2-ம் கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ஆய்வின் போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், வேளாண்மை இணை இயக்குனர் முருகன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிதம்பரம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், அருணாசலேஸ்வரர் கோவில் சூப்பிரண்டு அய்யம்பிள்ளை, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×