என் மலர்
செய்திகள்

திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு குறித்து கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு குறித்து கலெக்டர் ஆய்வு
சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டு உள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப்பாதையில் அரசு கலைக்கல்லூரி அருகில் ஊரக வளர்ச்சித்துறையின் சுற்றுலா மாளிகையில் கொரோனா பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களுக்கு 100 படுக்கைகள், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த மையம் நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து அவர் திருவண்ணாமலை பே கோபுரம் பிரதான தெரு, சட்டநாயகன் தெரு, காஞ்சி சாலை ஆகிய இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வரும் காய்ச்சல் மற்றும் கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்.
மேலும் சட்டநாயகன் தெருவில் மருந்துகள் வைக்கப்பட்டு உள்ள மொத்த விற்பனை சேமிப்பு கிடங்கினையும் பார்வையிட்டார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்துடன் இணைந்து திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறித்து சின்னக்கடை தெரு, வேங்கிக்கால் இந்திரா நகர், அறிவியல் பூங்கா ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கொரோனா ஊரடங்கு கடைப்பிடிக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள், ஊரடங்கு நேரம் முடிந்தும் வாகனத்தில் தக்காளி வியாபாரம் செய்தவர், டீக்கடை நடத்தியவர் ஆகியோருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story






