என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ஐ.டி.ஐ. மாணவர் வீட்டில் நேற்று மாலை மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
    • விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    செய்யாறு:

    செய்யாற்று வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் செய்யாறு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் வயர்மேன் எலக்ட்ரீசியன் படித்து வந்தார்.

    நேற்று மாலை இவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக விக்னேஷ் சுவிட்ச் போர்டில் கை வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட உறவினர்கள் விக்னேசை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை
    • திருவண்ணாமலை போக்சோ கோர்ட் தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கடந்த 2018 ஆம் ஆண்டு அவரது 12 வயது உட்பட்ட மகளை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் அச்சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதை அடுத்த அச்சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அங்கு வந்த அவரது தந்தை சிறுமியிடம் மீண்டும் தகாத முறையில் நடக்க முயன்று உள்ளார் அதற்கு அவர் மறுத்ததால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். மேலும் 12 வயதுக்குட்பட்ட உறவுக்கார சிறுமி ஒருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கூலி தொழிலாளியை கைது செய்தனர்.

    மேலும் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜராகினார்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார் அதில் பெற்ற மகள் மற்றும் உறவுக்கார சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித் தொழிலாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் ரூ.3000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தரப்பில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி பரிந்துரை செய்தனர்.

    • பொறுப்பாளர்களை நியமிக்க வலியுறுத்தல்
    • போலீசார் பேச்சு வார்த்தையால் போராட்டம் முடிவு

    ஆரணி:

    ஆரணி அடுத்த தச்சூர் ஊராட்சிக்குபட்ட சமத்துவபுரம் குடியிருப்பு பகுதியில் அரசின் சார்பாக குடியிருப்போர் அமைப்பின் தலைவர் துணை தலைவர் செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்ய மேற்கு ஆரணி ஊராட்சி ஓன்றிய அலுவலருக்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளன.

    வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி சம்மந்தபட்ட பகுதியில் உள்ளவர்களிடம் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவுறத்தினார்.

    ஆனால் இதுவரையில் எந்த ஓரு முடிவும் ஏற்படவில்லை தி.மு.க. சார்பில் ஒருவரும் விடுதலைசிறுத்தை கட்சி சார்பில் ஒருவரும் ஓரே பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டுமென கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    ஆனால் ஆளுங்கட்சிக்கு அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக கூறி ஆரணி ஊராட்சி மேற்கு ஓன்றிய அலுவலகத்தில் நுழைவாயில் முன்ப திடிரென தரையில் அமர்ந்து விடுதலைசிறுத்தை கட்சியை சேர்ந்த ஓன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து மேற்கு ஆரணி ஊராட்சி ஓன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி மேற்கு ஆரணி சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன்மற்றும் ஆரணி டவுன் போலீசார் ஆகியோர் சம்மந்தபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    இதில் வருகின்ற 29-ந்தேதி சமத்துவபுரத்தில் பெருபான்மை நிரூபித்து பொறுப்பாளர்கள் நியமிக்கபடுவார்கள் என முடிவு செய்யபட்டதால் தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • சாத்தனூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது
    • விவசாயிகள் மகிழ்ச்சி

    செங்கம்:

    கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணகிரி கே.பி.ஆர். அணையின் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

    அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 119 அடியில் தற்போது 105.2 அடியாக உயர்ந்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது தென்பெண்னையாற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் சாத்தனூர் அணை விரைவாக அதன் முழு கொள்ளளவான 119 அடியை எட்டும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

    தென்பெண்ணை ஆற்றில் பாய்ந்தோடி வரும்வெள்ளம் நீப்பந்துறை கோவிலுக்குள் புகுந்துள்ளது.

    • விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் மற்றும் விழிப்புணர்வு வாகனத்தை துணை சபாநாயகர் பிச்சாண்டி அண்ணா நுழைவாயில் அருகில் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் சரவணன், கிரி, திமுக நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் விசாரணை
    • மனைவி, 3 மகன், 1 மகள் உள்ளனர்

    ஆரணி:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பகுதியை சேர்ந்த பழனி (வயது 58). இவருக்கு மனைவி 3மகன் 1 மகள் உள்ளனர். பழனி ஆரணி நகராட்சியில் சுமார் 20 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.

    பழனி தற்போது பணிக்கு சரிவர செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகரின் பின்புறத்தில் உள்ள விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது

    திருவண்ணாமலை:

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற்றது.

    அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோவில், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களில் மாலை 6 மணி நிலவரப்படி 75 ஆயிரத்து 801 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர்.

    இதில் சுமார் 65 ஆயிரம் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்.

    • டிரைவர் தப்பி ஓட்டம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, மற்றும் போலீசார் சேத்துப்பட்டு அருகே உள்ள ஊத்தூர், தேவிகாபுரம், ஆகிய பகுதிகளில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஊத்தூர் அருகே அதிவேகமாக வந்த டிராக்டரை மறித்தனர். அப்போது போலீசாரை கண்டவுடன் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் டிராக்டரை சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தியது தெரிய வந்தது.

    இதையடுத்து மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து. மேலும் தப்பியோடு டிரைவரை சேத்துப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

    • வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றது
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் திருவண்ணாமலை நகரமும் ஒன்றாகும். திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகின்றனர்.

    மேலும் திருவண்ணா மலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள பல்வேறு ஆசிரமங்களுக்கு வந்து செல்வதற்காக தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவற்றினாலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திருவண்ணாமலை நகரில் வாகன போக்குவரத்தின் நடமாட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

    நேற்று மதியம் திருவண்ணாமலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

    மதியத்தில் போக்கு வரத்து சிக்னல் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையம் அருகில் உள்ள ரவுண்டனா பகுதியில் பஸ் நிலையம் அருகில் இருந்து வந்த வாகனங்கள், சின்னக்கடை தெருவில் இருந்து வந்த வாகனங்கள், மத்தலாங்குளத்தெருவில் இருந்த வந்த வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்றபோது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்தனர். எனவே இது குறித்து போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    • உணவு பாதுகாப்பு துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ளது
    • உணவு குறைபாடு குறித்து தகவல் தெரிவிக்க வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    ஆரணி பகுதியில் சில ஓட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் குறைபாடுகளை உணவுப் பொருட்கள் பாதுகாப்புத்துறையினர் கண்டறிப்பட்டதால், தற்போது கண்ணமங்கலம் பகுதியில் செயல்படும் ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.

    அதில்ஓட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் உரிய முறையில் பாதுகாப்புடனும், பரிமாறும் செய்பவர்கள் உரிய ஆரோக்கியமான முறையில் இருக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டுள்ளது.

    மேலும் பரிமாறும் உணவு வகைகளில் குறைபாடுகளை வாட்ஸ் அப், குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க செல்போன் எண் (9443042322) இடம் பெற்றுள்ளது. இதனை ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு படித்து செல்கின்றனர்.

    • பஸ் ஏறும் போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (வயது 53). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை சென்னைக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறும் போது டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார். இதில் கீழே தவறி விழுந்து அதே பஸ் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது சம்பந்தமாக அவரது மனைவி காமாட்சி செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பக்தர்கள் வலியுறுத்தல்
    • கருவறை கோபுரத்தின்மேலே செடிகள் வளர்ந்து வருகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. ஊரின் நடுவே உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தக்கோயில் கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளதால் கோவில் கருவறை கோபுரத்தின்மேலே ஆலமரச்செடிகள் வளர்ந்து வருகிறது. இதையாரும் கண்டுகொள்ளவில்லை.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொண்டனர்.

    அப்போது பாலாலயம் பூஜைக்காக தோண்டப்பட்ட பள்ளம் தற்போது மூடப்படாமல் புற்கள் முளைத்த நிலையில் உள்ளது. பழமையான இக்கோவிலில் மூலவராக நரசிம்மர் தனது வலது தொடையில் லட்சுமிஅம்மனை அமரவைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தும் யாரும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யாமல் உள்ளது மிகவும் வேதனையானது பக்தர்கள் சிலர் தெரிவித்தனர். எனவே இக்கோவிலை உடனடியாக புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் உள்ளூர் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவிலினுள் ஆஞ்சநேயர், ஐயப்பன், துர்காதேவி, நவக்கிரக சன்னதிகள் தனித்தனியே உள்ளது.

    ராகு காலமான வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பெண்கள் சிலர் விளக்கு பூஜை செய்து வருகின்றனர். ஊரின் நடுவே இக்கோயில் உள்ளதால் உரிய முறையில் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×