என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே உள்ள அரியபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் விவசாயி.இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 41).இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன், உள்ளனர்.

    விஜயலட்சுமி அரியபாடி கிராமத்தில் உள்ள இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.அப்போது கிணற்றின் அருகே மாடு மேய்த்துக் கொண்டு இருந்தது.

    அப்போது அதனை விரட்டுவதற்காக கிணற்றின் அருகே விஜயலட்சுமி சென்றார். எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரணமல்லூர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து இறந்த விஜயலட்சுமியின் உடலை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்டி
    • கழுத்தில் கோரிக்கை பதாகைகளை தொங்கவிட்டு நூதன முறையில் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சியைப் பிடிப்பதற்கும், ஆட்சியை தக்க வைப்பதற்கும் அரசியல்வாதிகள் தேவையற்ற இலவசங்களை போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தால் இலங்கை போன்ற நிலை தான் தமிழகத்துக்கு ஏற்படும்.

    தமிழ்நாட்டில் உணவிற்கும், மதுவிற்கும், போதை பொருட்களுக்கும் வேறுபாடு தெரிவதில்லை. அதன் விளைவாக தான் கள் தடை செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் என்பது வேறு, மது என்பது வேறு, கள் என்பது வேறு கள் என்பது உலக அளவில் உணவு பட்டியலில் உள்ளது. தமிழகத்தில் கள் மீதான தடையை நீக்க வேண்டும்.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் கள்ளை உணவு பட்டியலில் வைத்துள்ளது. இது ஏன் அரசுக்கும், அரசியல் கட்சியினருக்கும் தெரியவில்லை. 33 ஆண்டுகளாக கள்ளுக்கு ஏன் தடை நீக்கப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. யூரியா கிடைப்பது குதிரை கொம்பாக உள்ளது. பல உரங்களின் விலை 100 சதவீதத்திற்கு மேலாக விலை உயர்ந்துள்ளது.

    2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.800-க்கு விற்கப்பட்ட உரங்கள் தற்போது ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. யூரியா மற்றும் உர பதுக்களுக்கு அரசு அதிகாரிகள் வியாபாரிகளுக்கு துணை நிற்கின்றனர்.

    திருவண்ணாமலையில் மரங்களை வெட்டாமல் கிரிவலப் பாதையை அகலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கழுத்தில் கோரிக்கை பதாகைகளை தொங்கவிட்டு நூதன முறையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓட்டலில் சாப்பிட்ட நபர் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஓட்டலுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆரணி :

    ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே அமைந்துள்ள ஒரு அசைவ ஓட்டலில் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் மூர்த்தி மகன் விநாயகம் (வயது 35) என்பவர் அசைவ உணவு சாப்பிட சென்றார். அவர் காடை வறுவல் ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது சர்வர் கொண்டு வந்த காடைவறுவலை சாப்பிட எடுத்தபோது உள்பகுதியில் புழுக்கள் நெளிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது சம்பந்தமாக ஊழியர்களிடமும், உரிமையாளரிடமும் வாய் தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓட்டலில் சாப்பிட்ட விநாயகம், காடைவறுவலில் புழுக்கள் நெளிந்ததை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு அதற்குண்டான பில்லையும் செலுத்தி விட்டு சென்றுள்ளார்.

    பின்னர் அவர் செல்போனில் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் கைலாஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலக டாக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அசைவு ஓட்டலுக்கு சென்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். வாடிக்கையாளர் சாப்பிட்டு வைத்திருந்த காடை வறுவலையும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தனியார் கம்பெனி பஸ் மோதியது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள வெள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவகன். இவரது மகன் ராகுல் (வயது 21). அதே ஊரைச் சார்ந்த முனியன் மகன் அசோக்குமார் (22).

    2 ேபரும் செய்யாறில் தனியார் கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று மாலை 5.45 மணி அளவில் ராகுலும் அசோக்குமாரும் பைக்கில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வடபூண்டிபட்டு கூட்ரோட்டில் எதிரே வந்த சிப்காட் கம்பெனி பஸ் பைக் மீது மோதியது.

    இதில் இருவரும் காயமடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    சிகிச்சை பலனின்றி ராகுல் பரிதாபமாக இறந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    • வாடிக்கையாளர் குற்றச்சாட்டு
    • உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரில் ஓட்டல் ஒன்று உள்ளது.

    நேற்று முன்னதினம் மதியம் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது அசைவ உணவில் காடை கரியில் புழு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து ஒட்டல் ஊழியர்களிடம் கேட்டதற்கு இருதரப்பினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனையடுத்து சம்பவம் குறித்து அவர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு போன் மூலம் புகார் அளித்தார். இந்த சம்பவம் சமூக வலைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் கூறியிருப்பதாவது:-

    போன் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த புகாரில் சம்மந்தபட்ட அசைவ ஓட்டலில் ஆய்வ மேற்கொண்டு காடை கறி மாதிரிகளை ஆய்வு அனுப்பியுள்ளதாகவும் ஆய்வறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்கும் என தெரிவித்தனர்.

    • 48 நாட்கள் தொடர்ந்து விரதம்
    • ஏராளமானோர் தரிசனம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சந்தியம்மன் திருக்கோவில் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆடி மாதமும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்தி வருவது வழக்கம்.

    இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர்ச்சியாக பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை ஒட்டி நேற்று சின்ன கோலாப்பாடி, செ. அகரம், பண்டிதப்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் கோவில் அருகே ஒன்று திரண்டு பொங்கல் வைத்து கிடாவெட்டி நேர்த்திக் கடனை செலுத்தி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் சின்ன கோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க சந்தி அம்மாள் என்ற பெண்மணி கடந்த 48 நாட்களாக தொடர்ந்து விரதம் இருந்து வந்தார்.

    அவர் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடை எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிப்பட்டனர்.

    • மாணவர்கள் அரசினர் விடுதியில் தங்க ஏற்பாடு
    • கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது

    திருவண்ணாமலை:

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் என 7 பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    12 வயது முதல் 25 வயதுக்குள் இருப்பவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஆண், பெண் இருபாலரும் பயிற்சி பெறலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய பிரிவுகளுக்கு சேர்க்கை பெற குறைந்த பட்சம் 7 ஆம் வகுப்பு நேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் நாதஸ்வரம், தவீல், தேவாரம் ஆகிய பாடங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் மட்டும் போதுமானது ஆண்டுக்கு ரூ.350 பயிற்சிக்கட்டணம் செலுத்த வேண்டும்.

    மாதா மாதம் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை ரூ.400 வீதம் வழங்கப்படும் அரசு பஸ்களில் பள்ளி வேலை நாட்களுக்கு இலவச பயணச் சலுகை பெறலாம். 3 ஆண்டு கால சான்றிதழ் படிப்பாகும். தினசரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்.

    வெளியூர் மாணவர்களுக்கு அரசினர் விடுதியில் தங்கிப் பயிலல் வழிவகை செய்து கொடுக்கப்படும்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    • ஆடி மாதம் பொங்கல் வைப்பது வழக்கம்

    போளூர்:

    போளூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராம தேவதையான துன்ப நாச்சியம்மனுக்கு ஆண்டு தோறும் போளூர் மக்கள் ஆடி மாதம் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

    போளூரிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று பொங்கலிட்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி, என் கே.பாபு, பார்த்திபன், பழனி பன்னீர்செல்வம் போன்றவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நேர்த்தி கடன் செலுத்தினர்
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த இந்திரவனம், வனப்பகுதியில் உள்ள மன்னர் சுவாமி பச்சையம்மன், கோவிலில் ஆடி மாத தீமிதி திருவிழா, கடந்த 12ஆம் தேதி பச்சையம்மனுக்கு, காப்பு கட்டி தொடங்கியது.

    தொடர்ந்து 13-ஆம் தேதி பெருமாள் உற்சவம், 14ஆம் தேதி, மாரியம்மனுக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி, 15 ஆம் தேதி 108 பால்குட ஊர்வலம் நடந்தது.முக்கிய திருவிழாவான நேற்று பச்சையம்மனுக்கு, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்கள் அலங்காரம் செய்து வைத்தனர்.

    பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள வாமுனி, செம்முனி, ஜடாமுனி, வேதமுனி, கரி முனி, உள்ளிட்ட ஏழு முணிகளுக்கு மாலை அணிவித்து பம்பை, உடுக்கை, அடித்து குறி கேட்டு நேர்த்தி கடனாக ஆடு, கோழி, ஆகியவை பலி கொடுத்தனர்.

    பின்னர் கோவில் வளாகத்தில் தீ குண்டம் அமைத்தனர்.

    இதில் விரதம் இருந்த பக்தர்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி காப்பு கட்டி குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

    இதில் ஆரணி, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், காஞ்சிபுரம், சென்னை, ஆரணி, செஞ்சி, விழுப்புரம், போளூர், வந்தவாசி, உள்ளிட்ட சுற்றுப்புற நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை தாரர்கள், ஊர் பெரியவர்கள், விழா குழுவினர், இளைஞர்கள், ஆகியோர் செய்திருந்தனர். இரவு தெய்வீக நாடகம் நடந்தது.

    • இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
    • பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருவண்ணாமலை அருகே உள்ள செ.அகரம் கிராமத்தில் சந்தியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் விரதம் இருந்த பெண் பக்தர் ஒருவர் கொதிக்கும் நெய் சட்டியில் இருந்து வடைகளை எடுத்து அம்மனுக்கு படையலிடும் நிகழ்ச்சி நடந்தது. மேலும் ஆட்டின் வயிற்றை அறுத்து குட்டிகளை வெளியே எடுத்து அம்மனுக்கு படையலிட்டனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பலர் பொங்கலிட்டும் அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • வாலிபர் கொலை வழக்கில் நடவடிக்கை
    • ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் விஜய் (வயது 21). இவர் தங்களுக்கு சொந்தமான மளிகைக் கடையை கவனித்து வந்தார்.

    இவருக்கும் வந்தவாசியை அடுத்த ராமசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மொய்தீன்(35) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

    மேலும் நல்லூரைச் சேர்ந்த நாராயணசாமி(32), இவரது உறவினர் வரதன்(41) ஆகியோர் விஜய்யின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதாக அளித்த தகவலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்ததால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடந்த ஜூன்12-ஆம் தேதி இரவு விஜய்யை வரவழைத்து அவரைக் கொலை செய்து உடலை தீ வைத்து எரித்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிந்த தெள்ளார் போலீசார் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் மொய்தீன், நாராயணசாமி, வரதன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவண்ணாமலை கலெக்டருக்கு போலீஸ சூப்பிரண்டு கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.

    இதன்பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் பா.முருகேஷ் உத்திரவிட்டார்.

    இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள 3 பேரிடமும் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    • சுதந்திர தினத்தில் விடுமுறை அளிக்காததால் நடவடிக்கை
    • 115 நிறுவனங்களில் ஆய்வு

    திருவண்ணாமலை:

    சுதந்திர தினத்தையொட்டி நேற்று கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார்போக் குவரத்து நிறுவனங்களில் தேசிய விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இதுபோன்ற நாட்களில் பல நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை விடுமு றைகள்) சட்டம் 1958, உணவு நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகள் 1958, மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961 மற்றும் விதிகள் கீழ் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமல் மற்றும் மாற்று விடுமுறை அளிக் காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றன.

    இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் துணை ஆய்வாளர்கள் மனோகரன், சாந்தி, உதவி ஆய்வாளர்கள் சாந்தி, ஆத்திப்பழம், சுபாஷ்சந் தர், மாலா, வெங்கடேஷ் ஆகியோர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் மொத்தம் 115 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 36 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 34 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 4 நிறுவனங்களிலும் என மொத்தம் 74 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    அதனை தொடர்ந்து மேற்கண்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ×