என் மலர்
திருவண்ணாமலை
- கணொளி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- சத்துணவை சாப்பிட்டு பார்த்து கலெக்டர் ஆய்வு
செங்கம்:
செங்கம் ஊராட்சி ஒன்றியம் மேல்பென்னாத்தூர் ஊராட்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம், குழந்தை நேயர் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் அலுவலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இதனை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சில் கலெக்டர் பா.முருகேஷ் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜயராணிகுமார், செங்கம் தாசில்தார் முனுசாமி உட்பட அரசு துறை அலுவலர்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மேல்பென்னாத்தூர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.
மேலும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சமைத்து வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி,பிப்.2-
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த கீழ்நெடுங்கள் கிராமத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தனியார் பஸ் மூலம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தனர்.
பஸ்சை டிரைவர் தினேஷ் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் பிருதூர் கிராமம் அருகே பஸ் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வந்தவாசி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்த பக்தர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக 4 பேரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விபத்தில் நடந்து குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் ஆரணி, வேலூர், புறவழி சாலையில், சாலை போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி விபத்து நடப்பதால் பொதுமக்கள் சாலை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.* * *பஸ் கவிழ்ந்து கிடந்த காட்சி.
- கூடுதல் கலெக்டர் நேரில் ஆய்வு
- பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் தச்சம்பாடி, ஓதலவாடி, மன்சூராபாத், ஆகிய கிராமங்களில் கூடுதல் கலெக்டர் வீர பிரதாப் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அனைவருக்கும் வீடு வழங்க கணக்கெடுப்பு பணிகள், அண்ணா கிராமமறுமலர்ச்சி திட்டத்தில் சிமெண்ட் சாலை, அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தனிநபர் வீடு, உறிஞ்சு குழாய், பள்ளி சுற்றுச்சூவர், மாட்டு கொட்டகை, அமைக்கும் பணி, முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கின்னஸ் சாதனை படைக்க கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணறுகளை மழைநீர் சேகரிக்கும் மேல் நிரப்பு கட்டமைப்பு கட்டப்படும் பணிகளை கூடுதல் கலெக்டர் வீர் பிரதாப் சிங், நேரில்ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது பயிற்சி கலெக்டர் ரஷ்மிராணி, உதவி செயற்பொறியாளர் கோவிந்தன், ஒன்றிய குழு தலைவர் ராணி அர்ஜுனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், இந்திராணி, ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உட்பட உடன் இருந்தனர்.
- 3 காலயாக பூஜை நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த ஜெகநாதபுரம், கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக புதுப்பிக்கப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை பந்தல் அமைத்து. 108 கலசம் வைத்து, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசங்களை வைத்து, ஆனந்தன், சிவாச்சாரியார் தலைமையில் 3 காலயாக பூஜை செய்தனர்.
பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் புனித நீரை ஊற்றினார்கள்.
பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு. சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார். இன்று இரவு தெய்வீக நாடகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.
- கலெக்டர் முருகேஷ் தகவல்
- தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது
திருவண்ணாமலை:
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டம் மற்றும் இதர தொழில்நுட்ப விவரங்களை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
உழவன் செயலியை ஆண்ட்ராய்டு செல்போனில் 'ப்ளே ஸ்டோர்' வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் விவசாயிகள் தங்களது அடிப்படை தகவல்களான பெயர், முகவரி, செல்போன் எண் மற்றும் இதர விவரங்களை பதிவு செய்து கொண்டு உழவன் செயலியை பயன்படுத்தலாம்.
உழவன் செயலியில் 22 வகை பயன்பாடுகளை விவசாயிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் மொழியில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த உழவன் செயலி மூலம் வேளாண் தொடர்பான விவரங்களை விவசாயிகள் வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த தகவல்களுக்கு Youtube-https://www.youtube.com/agridepttn, Facebook-https://www.facebook.com/tnafwd மற்றும் Twitter- https://twitter.com/agridept-tn ஆகிய சமூக ஊடகங்களுடன் இணைந்து வேளாண் தொடர்பான மானிய திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை அறிந்து பயன் பெறலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
- திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- வேலூர் ஜெயிலில் அடைப்பு
திருவண்ணாமலை:
கீழ்பென்னாத்தூர் தாலுகா வழுதலகுணம் புதுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 31). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் பிஸ்கெட் கொடுத்து ஏமாற்றி, சிறுமி வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று உள்ளார்.
பின்னர் அவர் சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். இதை கண்ட சிறுமியின் தந்தை, மணிகண்டனை பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அவர் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மாமனார் புகார்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி (வயது 25). இவருக்கும் பாப்பாந்தாங்கலை சேர்ந்த கலையரசி (22) என்பவருக்கும் 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்து சில நாட்களிலேயே தீபன் சக்கரவர்த்தி வேலை காரணமாக துபாய் சென்று விட்டார். கடந்த 24-ந் தேதி இரவு 8 மணிக்கு கலையரசி தூங்க சென்றார்.
மறுநாள் காலையில் அவரது மாமனார் பிச்சாண்டி மருமகளை எழுப்ப சென்றபோது அவரை காணவில்லை. தூங்குவது போல துணி தலையணை வைத்துவிட்டு அவர் எங்கேயோ சென்று விட்டார் என தெரிய வந்தது.
இதுகுறித்து கலையரசி மாமனார் பிச்சாண்டி பிரம்மதேசம் போலீசில் மருமகளை காணவில்லை என புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் பாபா வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றார்.
- இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
- சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு சலவை தொழிலாளி. இவரது மனைவி சின்னகுழந்தை. சில நாட்கள் முன்பு நோய் வாய்பட்டு இன்று அதிகாலை சின்னகுழந்தை இறந்தார்.
அவரது உடலை அடக்கம் செய்ய சேவூர் ஊராட்சிக்குபட்ட வேலூர்-ஆரணி சாலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் புறம்போக்கு இடத்தில் பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு சேவூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அங்கு இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.
ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர்.
ஆனால் சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பெரணமல்லூர் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
- கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர், ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை தாங்கினார்.
ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகனசுந்தரம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்ட பணிகள், ஒன்றிய பொது நிதி கணக்குகள், மற்றும் கிராமப்புறங்களில் நடைபெற உள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள், அலுவலக ஊழியர்கள், பிற துறை அலுவலர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- குழந்தை சாலையை கடக்க உதவியபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி.
இவரது மனைவி சின்னகுழந்தை (வயது 63). கணவன் - மனைவி இருவரும் ஆரணி அக்ரா பாளையம் சிறுமூர் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வந்தனர்.
கடந்த 26-ந் தேதி பூ கடைக்கு சென்ற சின்னகுழந்தை சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த அவரை ஆரணி அரசு மருத்து வமனை யில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மகன் பழனி ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
திருவண்ணாமலை:
போளூர் அடுத்த செம்மியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45), கூலி தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி அவரது வீட்டிற்கு டி.வி. பார்க்க வந்த 4 வயதுடைய சிறுமியிடம் ஏழுமலை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.
வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பாட்டி சிறுமியை தேடி சென்றார். அப்போது நடந்த சம்பவம் குறித்து சிறுமி அவரது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார்.
இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் போளூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார்.
அப்போது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஏழுமலைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ஏழுமலையை போலீசார் வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
- போலீசார் விசாரனை
ஆரணி:
ஆரணி அடுத்த சேவூர் பைபாஸ் சாலை அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான லாரி பழுதுபார்க்கும் குடோன் உள்ளன.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பழுது பார்த்துவிட்டு குடோனை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலையில் குடோன் வழியாக சென்ற பொதுமக்கள் பூட்டிய குடோனில் இருந்து தீப்பற்றி எரிவதை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குடோனின் பூட்டை பொதுமக்களின் உதவியுடன் உடைத்து உள்ளே சென்றனர். அப்போது பழுதடைந்த லாரி மளமளவென எரிந்து கொண்டிருந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அனைக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.
பின்னர் இது குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.






