என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும்.
    • 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி (வயது45). இவர் கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடை பெறும் திருமதி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் அவர் கலந்து கொள்ளஉள்ளார்.

    ஏசியா பசிபிக் என்ற பட்டத்தை வென்ற பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருமதி உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் இளநிலை பட்டமாக லைப் சயின்ஸ், முதுநிலை பட்டமாக எம்.பி.ஏ. மார்க்கெட்டிங் அண்ட் எச்.ஆர், எம்.எஸ்.சி சைக்காலஜி, எம்.ஏ. ஆங்கில இலக்கியம் உள்ளிட்ட படிப்புகள் படித்து உள்ளார்.

    இதுதொடர்பாக பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருவொற்றியூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமதி உலக அழகி போட்டி என்பது திருமணமான பெண்களின் சாதனைகளை உலகம் முழுவதும் எடுத்துச் சொல்லும் போட்டியாகும். இதில் 70-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து பல சாதனைகளைச் செய்த பெண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

    உடற்தகுதிச் சுற்று, தனிநபர் நேர்காணல் சுற்று, ஈவினிங் கவுன் சுற்று என்று மூன்று விதமாக நடைபெறும். உடற் தகுதிச் சுற்று, உடல் பராமரிப்பு, தன்னம்பிக்கை, மனதிடம் ஆகிய சுற்றுகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். இதற்கு 25 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக தனிநபர் நேர்காணல் சுற்று நடக்கும். இதில் 5 நடுவர்கள் இருப்பர். 5 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 5 நிமிடங்களுக்குள் நாம் பதில் சொல்ல வேண்டும்.

    இதற்கு 50 சதவீத மதிப்பெண்கள் உண்டு. அடுத்ததாக ஈவினிங் கவுன் சுற்று எனப்படும் ஆடை அலங்காரச் சுற்று. இதில் பெண்கள் தங்களுடைய கணவருடன் பங்கேற்க வேண்டும். இது ஒரு கணவன் பெண்களுக்கு எப்படி ஆதரவாக இருக்கிறார் என்பதை காட்டும் சுற்று ஆகும்.

    மேற்படி சுற்றுக்களில் இருந்து 16 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் 16 பேரும் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்தச் சமூக பிரச்சினைகள் பற்றியும், அதை மாற்றுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றியும் நாம் 30 நொடிகள் பேச வேண்டும்.

    பிறகு அவர்கள் அதில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். அந்தக் கேள்விகளுக்கு 30 நொடிகளில் நாம் பதில் சொல்ல வேண்டும். நான் குழந்தைகளின் கல்வி மற்றும் கல்வி உரிமை ஆகிய சமூக பிரச்சினைகளை தேர்ந்தெடுத்து பேச உள்ளேன். இந்த சுற்றின் இறுதியில் 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு இறுதி போட்டிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
    • சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சரவணனை திருவள்ளூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமத்தில் திருவேற்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரத்து 400 கொள்ளை போனது.

    இதுகுறித்து பெரியபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் டீக்கடையில் கொள்ளையில் ஈடுபட்டது, சென்னை, அயனாவரத்தை சேர்ந்த சரவணன் (வயது18) மற்றும் இவனது நண்பரான 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சரவணனை திருவள்ளூர் கிளை சிறையிலும் போலீசார் அடைத்தனர்.

    • குண்டும் குழியுமான சாலையால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • கிராமமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த அத்திப்பேடு பகுதியில் இருந்து இருளிப்பட்டு வரை உள்ள 2 கிலோ மீட்டர் சாலை கடந்த 20 ஆண்டுகளாக சீரமைக்கப் படாமல் உள்ளது.

    இதனால் அந்த சாலை குண்டு குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து செல்லும் நிலை நீடித்து வருகிறது.

    குண்டும் குழியுமான சாலையால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மழைகாலங்களில் நிலைமை படுமோசமாகி விடுகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சாலை அமைக்க கோரி இன்று காலை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அத்திப்பேடு சர்வீஸ் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., ஆவடி உதவி கமிஷனர் குமரேசன்,சோழவரம் இன்ஸ்பெக்டர், ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், முரளி ஆகியோர் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    எனினும் கிராமமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடித்து வருகிறது

    • அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • எதற்காக இங்கே நிறுத்தப் பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டோல் கேட், ஆய்வேலி அகரம் உள்ளிட்ட பகுதியில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரங்களில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த 45 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் யார்? எதற்காக இங்கே நிறுத்தப் பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வீட்டில் உள்ள அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.
    • நள்ளிரவில் பிரியதர்ஷினிக்கு திடீர் என்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சென்னாங்காரனை கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி ரேணு காதேவி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது 8), மகன் தக்ஷி (5). பிரிய தர்ஷினி அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேணுகாதேவி வீட்டில் சாம்பார் சாதம் தயார் செய்தார். பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் சாம்பார் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கினர்.

    நள்ளிரவில் பிரியதர்ஷினிக்கு திடீர் என்று வாந்தி ஏற்பட்டது. மேலும் உடல் நிலை மோசமானது. இதையடுத்து பிரியதர்ஷினியை ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரியதர்ஷினிக்கு நேற்று அதிகாலை மீண்டும் வாந்தி ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் சாப்பிட்ட சாம்பார் சாதம் உயிரை பறித்து இருப்பது தெரியவந்தது.

    வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உணவு எப்படி சிறுமியின் உயிரை பறித்தது என்பது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவது வழக்கம்.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் 4-ம் தேதி பூண்டி ஏரிக்கு வந்த டைந்தது. தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவது வழக்கம். அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீர் அதிகமாக பயன்படுத்தும் போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைவதும், தண்ணீர் பயன்பாடு குறைத்துக் கொண்டால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாவதும் வழக்கம்.

    இன்று காலை பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 480 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மே 4-ம் தேதி முதல் இன்று காலை வரை 2 மாதத்தில் சுமார் 1,477 டி எம். சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3,231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.82 அடியாக உள்ளது. 1,698 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது.
    • மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் வசித்து வருபவர் நஜீபுத்தீன். இவரது மனைவி இம்ரான்பேகம். இவர்களுக்கு 11 மாதத்தில் அப்ரின் என்று பெண் குழந்தை இருந்தது.

    இவர்களது சொந்த ஊர் அசாம் மாநிலம் ஆகும். நஜீபுத்தீன் தேர்வாய் கண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் குழந்தை அப்ரினுக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறைய வில்லை.

    இதையடுத்து குழந்தை அப்ரினை ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    மர்ம காய்ச்சல் பாதிப்பால் குழந்தை இறந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுகாதார அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

    • முன்விரோதம் காரணமாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • நேற்று காலை முதல் ரஞ்சித் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சுற்றி வந்து உள்ளார்.

    திருவொற்றியூர்:

    எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 35).மீனவர். இவர் மனைவி, மகன்களை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்தநிலையில் இன்று காலை நெட்டுக்குப்பம் கடற்கரையில் ரஞ்சித் பிணமாக கிடந்தார். அவர் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து ரஞ்சித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன என்று உடனடியாக தெரிய வில்லை. முன்விரோதம் காரணமாக ரஞ்சித் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று காலை முதல் ரஞ்சித் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சுற்றி வந்து உள்ளார். இது தொடர்பாக அந்த நபரை பிடித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

    • விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர்.
    • அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

    திருத்தணி:

    திருத்தணி நரசிம்மசுவாமி கோவில் தெருவில் வசிப்பவர் விநாயகம் (42). இவருக்கும் கிரிஜா (34) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேவா என்கிற மகன் உள்ளார். இவர் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் கடந்த 14 வருடங்களாக பெங்களூரில் கூலி வேலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருத்தணியில் வந்து நரசிம்ம சுவாமி கோவில் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விநாயகம் கூலி வேலைக்கும், மனைவி கிரிஜா வீட்டு வேலைக்கும் சென்று வந்தனர். அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது. நேற்று இரவு வழக்கம் போல் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை விநாயகம் நள்ளிரவில் கத்தியை எடுத்து தலை, கை, கால், மார்பு என பல பகுதிகளில் சரமாரியாக வெட்டி உள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் விநாயகம் வீட்டில் உள்பக்கமாக பூட்டு போட்ட காரணத்தால் யாரும் உள்ளே சென்று காப்பாற்ற முடியவில்லை.

    இதற்கிடையே வெட்டப்பட்ட கிரிஜா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். திருத்தணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விநாயகத்தை கைது செய்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். இறந்து போன கிரிஜாவின் உடலை கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1- ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்துவது வழக்கம். அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை அதிகமாக பயன்படுத்தும்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைவதும், தண்ணீர் பயன்பாடு குறைத்துக்கொண்டால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாவதுமாக உள்ளது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மே 4-ம் தேதி முதல் இன்று காலை வரை 1.467 டி எம் சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கதாகும். பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம் நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.68 அடி ஆக பதிவானது. 1.666 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 500 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ், திருச்செந்தூரை சேர்ந்த லிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    அம்பத்தூர் ஓ.டி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சோதனை செய்தபோது ஒரு வீட்டில் விபசாரம் நடப்பது உறுதியானது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த 17 வயது சிறுமி மற்றும் இளம்பெண் ஒருவரை மீட்டனர். மேலும் திருநெல்வேலியை சேர்ந்த ரமேஷ், திருச்செந்தூரை சேர்ந்த லிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்கள் இருவரும் மயிலாப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • கல்லூரி மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் சுந்தரையா தெருவை சேர்ந்தவர் நிவேதா (22). இவர் பொன்னேரியில் உள்ள அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×