என் மலர்
திருவள்ளூர்
- சோழவரம் அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், அழிஞ்சி வாக்கம் ஊராட்சி ஜனப்ப சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கால்வாயில் இருந்து வரும் மழைநீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேறும் இடம் ஆகியவற்றை கேட்டறிந்து குளத்தின் கரைப்பகுதிகளை பலப்படுத்தி சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள நூலக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் முருங்கைக்கீரை பயிரிடப்பட்டதை பார்வையிட்டு செழிப்பாக வளர்ந்திருப்பதை பாராட்டினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், அழிஞ்சி வாக்கம் ஊராட்சி ஜனப்ப சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.
அங்கு மாணவ-மாணவிகளுக்கு குடி தண்ணீர், சத்துணவு முட்டைகள் சரியாக வழங்கப்படுகிறதா? முட்டைகள் பள்ளிக்கு தினம் தோறும் வருகிறதா? மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் 3-ம் வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் பாடம் நடத்தினார். தமிழ் பெயர்கள் எழுதவும் கணக்கு பாடத்தில் எண்கள் கூட்டல் குறித்து மாணவர்களிடம் கேட்டார். இதற்கு சில மாணவர்கள் பதில் கூறாமல் திகைத்ததால் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் நன்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்படி தெரிவித்தார்.
இதன் பின்னர் சோழவரம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து எந்திரத்தில் அரைத்து துகள்கள் ஆக்கி அதை சாலை போடுவதற்கு பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
அப்போது திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிழ்த மன்னன், குலசேகரன் ,ஊராட்சித் தலைவர்கள் பஞ்செட்டி சீனிவாசன், அழிஞ்சிவாக்கம் நந்தினி ரமேஷ் சோழவரம் லட்சுமி முனிஸ்வரன் உடன் இருந்தனர்.
- பெரிய குப்பம் மேம்பாலத்தின் கீழ் 5 பேர் கும்பல் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
- தப்பி ஓடிய பெரியகுப்பத்தை சேர்ந்த கோபியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் பெரிய குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய குப்பம் மேம்பாலத்தின் கீழ் 5 பேர் கும்பல் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை கண்டனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த மாதவரம் ரிங் ரோடு பகுதியை சேர்ந்த ஜானகிராமன், சென்னை வெற்றி நகரை சேர்ந்த தமிழ்வாணன், ஸ்ரீதர், பெரிய குப்பத்தை சேர்ந்த முத்து, கோபி ஆகிய 5 பேரும் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானகி ராமன், தமிழ்வாணன், ஸ்ரீதர், முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய பெரியகுப்பத்தை சேர்ந்த கோபியை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
- பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30).
- நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.மேலும்,இவர் ஆரணி தி.மு.க. இளைஞர் அணியில் 9-வது வார்டு செயலாளராக இருந்தார்.
நேற்று இரவு வினோத் குமார் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் மோட்டார் சைக்கிளில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பெரியபாளையம் அருகே வடமதுரை பெரிய காலனி அருகே திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வந்த போது வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சிறிய பாலம் கட்டுவதற்காக தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இதற்காகத் தோண்டப்படும் பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகை வைக்காததே உயிர் இழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் விபத்தில் உயிர் பலி ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது.
- கல்லூரி காவலாளியை கஞ்சா போதை கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி:
திருத்தணியை அடுத்த பொதட்டூர்பேட்டையில் தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது55) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு அவர் வழக்கம் போல் பணியில் இருந்தார். அப்போது வாலிபர்கள் சிலர் கல்லூரி வளாகத்துக்குள் கஞ்சா, மது போதையில் சுற்றி வந்தனர். அவர்களை சுப்பிரமணி கண்டித்தார். இதனால் கஞ்சா போதையில் இருந்த கும்பலுக்கும், சுப்பிரமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆத்திரம் அடந்த போதை கும்பல் சுப்பிரமணியை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவ்வழியே சென்றவர்கள் காவலாளி சுப்பிரமணி இறந்து கிடப்பதை கண்டு பொதட்டூர் பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கொலையாளிகள் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி காவலாளியை கஞ்சா போதை கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
நாகப்பட்டினம் மாவட்டம் ஸ்ரீ காளி கிராமம் வைத்தீஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்ராஜன் (22). இவர் திருவள்ளூர் உழவர் சந்தை அருகே நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த திருவள்ளூர் பத்தியால் பேட்டையை சேர்ந்த தனுஷ் அவரது நண்பர்கள் சதீஷ், சரவணன் ஆகிய 3 பேரும் சதீஷ்ராஜனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் சதீஷ் ராஜனுக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குபதிவு செய்து தனுசை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள்.
- கும்மிடிப்பூண்டி, மேட்டு காலணியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.
- அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி, மேட்டு காலணியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.தொழிலாளி. இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் தனது 3 மகள்களை பள்ளிக்கு அழைத்து சென்றார். அப்போது 3 மர்ம வாலிபர்கள் ஆனந்தனை திடீரென வழிமறித்து அவரது மகள்களின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டினர். இதில் ஏற்பட்ட மோதலில் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் ஆனந்தனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் ஆனந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளை கும்பல் மீதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
- ஆட்டோ டிரைவர் சரவணன் மனைவி கோமளா வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.
- பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பொன்னியம்மன் நகரில் வசித்து வருபவர் சரவணன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோமளா வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், நீச்சல் மற்றும் துறை ரீதியான போட்டிகள் நடைபெற்றன.
- வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவண குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
திருவள்ளூர்:
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை நடை பெற்றது.
இதில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர்.
கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், நீச்சல் மற்றும் துறை ரீதியான போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையிலான திருவள்ளூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவண குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வடமேற்கு மண்டலத்தைச் சார்ந்த தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர்கள் உதவி மாவட்ட அலுவலர்கள், நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- மது பாட்டில்களுடன் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் புகார் தெரிவித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த ஏ. ரெட்டிப்பாளையம் கிராமத்தில் சிலர் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
மேலும் புகார் தெரிவித்தவர்களுக்கு மது பாட்டில் பதுக்கி விற்பவர்கள் மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் போலீசாரும் இதனை கண்டு கொள்ளாமல் புகார் தெரிவித்தவர்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காட்டூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
இதற்கிடையே இன்று காலை மது பாட்டில்களுடன் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
- பள்ளிப்பட்டு கரிம்பேடு நாதாதீஸ்வர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
திருத்தணி:
திருத்தணி தொகுதியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
இன்று காலை அவர் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள எல்லை போராட்ட தியாகி தளபதி.கே.வினாயகம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பள்ளிப்பட்டு கரிம்பேடு நாதாதீஸ்வர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களை சந்திக்கும் 2.0 திட்டத்தை பள்ளிப்பட்டு கரிம்பேட்டில் இருந்து தொடங்கி உள்ளேன். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய உள்ளேன்.
தமிழகத்தை தி.மு.க, அ.தி.மு.க. என மாறி மாறி ஆட்சி செய்தும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வில்லை. பள்ளிப்பட்டு பகுதியில் முக்கிய தொழிலாக நெசவுத்தொழில் உள்ளது. இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும. நெசவு தொழில்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சி செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. தமிழகத்தில் பலம்வாய்ந்த கட்சி. இப்போது அ.தி.மு.க.வில் நடைபெறும் உட்கட்சி பிரச்சினையை அவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ம.க. மாநில துணைத் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் மாநில துணை செயலாளர் பாலா என்கிற பாலயோகி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் வெங்கடேசன், அரக்கோணம் சரவணன், செல்வம், கார்த்திக், வினாயகம், விஜயன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம்.
- டி.ஜி.பி சைலேந்திரபாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர்:
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடற் பயிற்சிக்காக சைக்கிளில் பயணம் செய்வது வழக்கம்.
இன்று காலை அவர் தனது குழுவினருடன் சென்னையில் இருந்து திருவள்ளூர் பகுதிகளுக்கு சைக்கிளில் பயணம் சென்றார்.
அப்போது செல்லும் வழியில் டி.ஜி.பி சைலேந்திர பாபு வெங்கல் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அங்கிருந்த கோப்புகளையும் பார்வையிட்டு பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் ஊத்துக்கோட்டையை அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்குகள் காப்பகத்தை பார்வையிட்டார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்குச் சென்றார்.
- தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.
- திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
பூந்தமல்லி:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினருக்கான பதவி காலியாக இருந்ததால் அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் திமுக, அதிமுக, சுயேட்சை என மூன்று பேர் தேர்தலில் போட்டியிட்டனர் மொத்தம் 346 வாக்காளர்கள் உள்ள இந்த வார்டில் காலை முதல் விறு, விறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலையில் வாக்குப்பதிவு முடிந்தபோது பூத் ஏஜெண்டுகள் அ.தி.மு.க., சுயேட்சை வேட்பாளர்கள் 289 வாக்குகள் பதிவானதாக தெரிவித்தனர்.
ஆனால் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 329 வாக்குகள் பதிவானதாக கூறினர். இதனால் 40 வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக அ.தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பதிவானது என தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வாக்குகள் பதிவான எந்திரங்களை எடுத்து செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி களைந்து போகச்செய்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும்போது, ' புகார் அளித்தால் மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டது.






