என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • தென்காசி மாவட்டம் கக்கஞ்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி.
    • திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    திருவள்ளூர்:

    தென்காசி மாவட்டம் கக்கஞ்சி மேற்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (32). இவர் திருவள்ளூரில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    புகழேந்தி திருவள்ளூரில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கிருந்த திருவள்ளூர் காந்திபுரம் ஜே.என். ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் (32) ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு புகழேந்தியை தகாத வார்த்தைகள் பேசி அவரை வாய் மீது இரும்பு கம்பியால் குத்தினார்.

    இதில் பலத்த காயமடைந்த அவருக்கு 3 பல் உடைந்தது. இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி வழக்கு பதிவு செய்து தினேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
    • திருவாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தார்.

    பூந்தமல்லி:

    குன்றத்தூர் நத்தம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகவும் சிதலமடைந்து காணப்பட்ட இந்த கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கோவிலை ஆய்வு செய்தனர்.

    பின்னர் கோவிலை சீரமைப்பது குறித்தும் கோவிலுக்கு உரிய இடங்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்தும் பல்வேறு பணிகள் குறித்து அதிகாரியுடன் ஆலோசனை செய்தனர்.

    • தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவஅதிசயம் தலைமை தாங்கினார்.
    • 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்த்திட பேரணி நடை பெற்றது.

    இந்த பேரணிக்கு தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் தேவஅதிசயம் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் நாகராஜன், இளையராஜா மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் திவ்யா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் சுந்தரம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளாக சத்துணவு துறையில் பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்குவோம். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு மேலும் ஒட்டுமொத்த தொகை ரூபாய் 5 லட்சம், காலி பணியிடங்களை நிரப்புவோம் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    முடிவில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் உதயகுமார் நன்றி கூறினார்.

    • லோகேஸ்வரி பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
    • அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவர் தெருவிளக்கை உடைத்து சேதப்படுத்தினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுவரை அடுத்த பழைய திருப்பாச்சூரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் லோகேஸ்வரி பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

    லோகேஸ்வரி வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விஜி என்பவர் தெருவிளக்கை உடைத்து சேதப்படுத்தினார். மேலும் லோகேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி அவர் மீதும் கல் வீசினார்.

    இதனை கண்ட லோகேஸ்வரியின் தாயார் கற்பகம், உறவினர்கள் ரம்யா, துரை, சுந்தரி, ராஜேந்திரன் ஆகியோர் விஜியை கண்டித்தனர். இதில் ஏற்பட்ட மோதலில் விஜி அவரது தந்தை சண்முகம், சகோதரர் வேலு ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவி லோகேஸ்வரி உள்பட 6 பேரையும் தாக்கினர். காயம் அடைந்த அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து லோகேஸ்வரி திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
    • 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் திருவள்ளூர் மசூதி தெரு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒத்தவாடை தெருவை சேர்ந்த அசாருதீன், ஹனிபா பாய் ஆகிய 2 பேரும் தடை செய்யப்பட்ட காட்டன் என்னும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.
    • ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள திம்மபூபாலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவுபூட்டு உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதேபோல் அதே கிராமத்தை சேர்ந்த ராஜன் என்பவரது வீட்டில் பணம் மற்றும் செல்போன் கொள்ளை போனது. அருகில் உள்ள சேகர் என்பவரது வீட்டில் ரூ. 10 ஆயிரம் ரொக்கம், அரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

    இந்த 3 கொள்ளை சம்பவங்கள் குறித்து பென்னலூர் பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    • கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு 42 வீடுகளுக்கு மட்டும் முதல்கட்டமாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    • ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த சைனாவரம் கிராமத்தில் பழமை வாய்ந்த காளத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள வீடுகள், மற்றும் கட்டிடங்கைள அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

    இதையடுத்து நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை எனக்கூறி சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சைனாவரம் காளத்தீஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் அதிகாரிகள் சைனாவரத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்போடு சீல் வைக்க வந்தனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு 42 வீடுகளுக்கு மட்டும் முதல்கட்டமாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்கள் திடீரென அங்குள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க செய்தனர்.

    • ஞாயிறு காரனோடை சாலை கண்ணியம் பாளையத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போராட்டம் காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பொன்னேரி:

    சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் அட்டப்பள்ளம், புது குப்பம் ஜெயராமபுரம், ஞாயிறு, பசுவன் பாளையம், கண்ணியம் பாளையம் தாண்டவராயன் பாளையம் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன.

    இதில் பசுவன் பாளையம், கன்னியம் பாளையம், தாண்டவராயன் பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 நாள் கார்டு உள்ள பெண்களுக்கு கடந்த 4 மாதமாக 100 நாள் வேலை இல்லாததால் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் ஞாயிறு காரனோடை சாலை கண்ணியம் பாளையத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது, 57 ஞாயிறு பிராட்வே மாநகரப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிறு கிராமத்திற்குள் செல்லாமல் சிறை பிடித்தனர்.

    தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்த மன்னன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளான 100 நாள் வேலை அடிப்படை வசதிகளான சாலை சீரமைப்பு, ரேஷன் கடை, தெருவிளக்கு, குடிநீர் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஞாயிறு ஊராட்சி துணைத்தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • முதுநிலை பட்டதாரியான ராதிகா திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
    • ஆசிரியை தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராதிகா (வயது26). முதுநிலை பட்டதாரியான இவர் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த ராதிகா திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் ஆடி மாத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் பவானியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப் பெருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 14 வாரங்கள் விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    நேர்த்தி கடன் செலுத்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.

    பக்தர்களின் வசதிக்காக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி, கோவிலை சுற்றியும் பலத்த போலீஸ் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பிட வசதி, இருப்பிட வசதி உட்பட பல்வேறு வசதிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

    இதில் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், ஊத்துக் கோட்டை துணை கண்காணிப்பாளர் சாரதி கலந்து கொண்டனர்.

    • ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும்.
    • திருத்தணி பகுதியில் நடைபெற்று வரும் பொதுப்பணித்துறை பணிகள், கூட்டு குடிநீர் திட்டபணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை திருவிழா வருகிற 21-ந்தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து, ஆர்.டி.ஓ. ஹசத்பேகம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஆர்.டி.ஒ. ஹசத்பேகம் கூறும்போது, ஆடிக்கிருத்திகை திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மலைக்கோவில், திருக்குளம், நல்லான் குளம், படி பாதை ஆகிய இடங்களில் கூடுதலாக தற்காலிக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்படும். கூடுதலாக சிறப்பு பஸ்கள், பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுவார்கள். மேலும் திருத்தணி பகுதியில் நடைப்பெற்று வரும் பொதுப்பணித்துறை பணிகள் மற்றும் கூட்டு குடிநீர் திட்டபணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றார்.

    இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணித், தாசில்தார் வெண்ணிலா, நகராட்சி ஆணையர் ராமஜெயம் கலந்துகொண்டனர்.

    • பல இடங்களில் பழுதான மின்கம்பிகள் உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.
    • சீரான மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, மெதூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், சின்னக்காவனம், மெதூர், மீஞ்சூர், அரியன் வாயல், அனுப்பம்பட்டு, பழவேற்காடு, தாங்கல் பெரும்புலம், ஆண்டார் மடம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான காற்று மற்றும் மழை பெய்ய தொடங்கிய உடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விடுகிறது.

    பல இடங்களில் பழுதான மின்கம்பிகள் உள்ளதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சீரான மின்சாரம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    இதுகுறித்து மின்சார துறை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் ஆகியும் 30 ஆண்டுகளுக்கு மேலாக மின்வயர்கள் மிகவும் பழையதாகவும் உள்ளது.

    இதனால் லேசான காற்றில் அறுந்து விழுந்து விடுகிறது. இதேபோல் துணை மின் நிலையங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மரில் மின்சாதன பொருட்கள் பழையது என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபடுகிறது. இதனை மாற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.

    ×