என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கிருஷ்ணா நீர் வரத்தை கருத்தில்கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு மே 10-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கிருஷ்ணா நீர் வருகையால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. அதேபோல் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் முழுவதுமாக நிரம்பின.

    இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 22-ந்தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இதே போல் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. எனினும் ஆந்திராவில் பெய்த பலத்த மழை காரணமாக கிருஷ்ணா கால்வாயில் வினாடிக்கு 140 கன அடி தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு நேற்று மாலை முதல் தண்ணீர் திறக்கபட்டது. வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 30.10 அடியாக பதிவானது. 1. 763 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 140 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    ஷேர் ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் ஒருடன் ரேசன் அரிசி கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது.

    திருவள்ளூர்:

    ஆர்.கே.பேட்டைய வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அம்மையார் குப்பத்தில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரம்பாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா, மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் சோதனை செய்தபோது அதில் ஒருடன் ரேசன் அரிசி கடத்தி வந்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்த முயன்றதாக காட்பாடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஷேர் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மது அருந்த தின்பண்டம் வாங்குவது தொடர்பாக திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
    • ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை அருகே உள்ள தொட்டிகலை, அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வேலு (வயது30). இவர் மீது வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை, 2 கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளன.

    அவர், நண்பர்களுடன் சிறுகடல் மதுபானக்கடை அருகே உள்ள வேப்பமரத்து அடியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது மது அருந்த தின்பண்டம் வாங்குவது தொடர்பாக அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள், வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயம் அடைந்த வேலு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்ததும் பூந்தமல்லி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி, செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகளை பிடிக்க துணை கமிஷனர் மகேஷ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் சிக்கினால் தான் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

    • செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.
    • செம்பரம்பாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மின்சார வயர்கள் பழுதடைந்தும், தாழ்வாகவும் காணப்படுகிறது.

    பூந்தமல்லி:

    செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது33). கூலித் தொழிலாளி.

    இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து வசந்தகுமார் மீது விழுந்தது.

    இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய போக்கால் உயிர் பலி ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி வசந்தகுமாரின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    நசரத்பேட்டை போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    செம்பரம்பாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மின்சார வயர்கள் பழுதடைந்தும், தாழ்வாகவும் காணப்படுகிறது. நேற்று இரவு வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மின்சார வயர் அறுந்து தொங்கியவாறு இருந்துள்ளது.

    இந்த நிலையில் வசந்த குமார் அந்த வழியாக சென்ற போது அவர் மீது மின்வயர் அறுந்து விழுந்ததில் பலியாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, செம்பரம்பாக்கத்தில் பல இடங்களில் மின்வாரிய வயர்கள் பழுதடைந்து உள்ளன. சில இடங்களில் மிகவும் தாழ்வாகவும் மின்வயர்கள் செல்கின்றன. 2 மீட்டர் வயரில் 4 இடத்தில் ஒட்டுப் போட்டு இணைத்துள்ளனர்.

    இது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மீண்டும் ஒரு விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    மணலி புதுநகர் அடுத்த இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்.

    பொன்னேரி:

    மணலி புதுநகர் அடுத்த இடையஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது46). தனியார் இன்சூரன்சு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி மோட்டார் சைககிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டிராக்டர் மோதியதில் சீனிவாசன் பலியானார்.

    • பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது.
    • புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

    திருவள்ளூர்:

    அம்மனுக்கு உகந்த ஆடிமாதம் இன்று தொடங்கி உள்ளது. இதையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இதனால் அம்மன் கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து 14 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை ஆடித்திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    இன்று ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரிய பாளையம் வந்தனர். இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.

    பக்தர்களின் வசதிக்காக ரல்லபாடி, வடமதுரை கூட்டுச்சாலை, ஆத்துப்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.

    ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். விரதம் இருந்து கோவிலில் நீராடி அம்மனை வணங்கினர்.

    சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான கர்ப்பிணி பெண்கள் கோவில் வளாகத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    இதேபோல் திருவேற்காடு, மாங்காட்டில் உள்ள அம்மன் கோவில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • நேற்று மதியம் பழவேற்காடு ஏரியில் இறால் மீன் பிடித்தார்.
    • ஏரியில் உள்ள சேற்றில் இறங்கியபோது அசோகன் சிக்கி கொண்டார்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த சாத்தான் குப்பத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது47). மீனவர். இவர் நேற்று மதியம் பழவேற்காடு ஏரியில் இறால் மீன் பிடித்தார்.

    அப்போது ஏரியில் உள்ள சேற்றில் இறங்கியபோது அதில் சிக்கி கொண்டார். நீண்ட நேரம் போராடியும் அசோகனால் வெளியே வர முடியவில்லை. பின்னர் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான அசோகனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பலியான அசோகனுக்கு சுகுணா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    • பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மேம்பாலம் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
    • கிராமமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏரியை கடந்துதான் சென்று வருகிறன்றனர்.

    பொன்னேரி:

    பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட பசியாவரம் எடமணி, எடமணி காலனி, ரகமத்நகர், தாங்கள் பெரும்புலம் ஊராட்சிக்குட்பட்ட சாட்டாங்குப்பம், ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பெரும்பாலானோர் இறால் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களை சுற்றி பழவேற்காடு உப்பங்கழி ஏரி காணப்படுவதால் தனித்தீவாக காணப்படுகின்றன. அவர்கள் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளுக்கு செல்வதற்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தண்ணீரில் நடந்து ஏரியை கடந்து சென்று வருகின்றனர்.

    அங்குள்ள தரை பாலத்தை கடந்து செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். மழைக்காலங்களில் அதிக வெள்ளப்பெருக்கு காணப்படும்போது தரைப் பாலத்தில் கடந்து செல்ல முடியாமல் படகில் பயணம் செய்யும் நிலை நீடித்து வருகிறது.

    இதையடுத்து பசியாவரம், பழவேற்காடு ஏரி பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து ரூ.18 கோடியே 20 லட்சம் மதிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கு மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆனால் பணி மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மேம்பாலம் கட்டி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கிராமமக்கள், மாணவர்கள் என அனைவரும் ஏரியை கடந்துதான் சென்று வருகிறன்றனர். மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் இரண்டு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து செல்லும் நிலை உள்ளது. சாலையும் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.

    மழைக்காலங்களில் ஏரியில் தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் படகில் செல்லும் நிலை உள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மேம்பால கட்டிடப் பணிகளை விரைந்து முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருவள்ளூரை அடுத்த சென்னாவரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 62 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.
    • ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்து பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த சென்னாவரம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 62 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது.

    இந்த ஏரியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயிர் செய்து பயன்படுத்தி வருவதாக மாவட்ட கலெக்டருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ் உத்தரவின் படி, திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் மற்றும் பொதுப்பணித்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சென்னாவரம் ஏரியில் 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நெற்பயிர் செய்திருப்பது தெரிந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்து பயிரிடப்பட்ட நெற்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் முழுவதுமாக அதிகாரிகள் அகற்றி மீட்டனர்.

    மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 94 லட்சம் ஆகும். வரும் காலங்களில் இது போன்று நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்வது கண்டறியப்பட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் எச்சரித்து உள்ளார்.

    • சேலம் மாவட்டம் வெள்ளைக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குமார்.
    • ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    திருவள்ளூர்:

    சேலம் மாவட்டம் வெள்ளைக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குமார் (20).

    இவர் கடந்த சில வருடங்களாக திருவள்ளூரை அடுத்த கீழச்சேரி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    தற்போது தனக்கு வேலை பிடிக்கவில்லை என்று தன்னுடன் பணிபுரியும் நண்பர்களிடம் கூறி வேலையை விட்டு நின்றார். மீண்டும் ஊருக்கு சென்று விடுவதாக கூறி வந்தார்.

    இதை அறிந்த அவரது பெற்றோர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலையை விட்டு நிற்க வேண்டாம் என்றும், அங்கேயே வேலை செய்யுமாறும் போன் மூலம் அறிவுரை கூறினர்.

    இதனால் வேலை பிடிக்காத விரக்தியில் இருந்த குமார் கடந்த 14-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்து போனார்.

    • பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்.
    • அதிகாரி ஒருவர் அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் முன்கூட்டியே விவசாயிகள் அங்கு கூடினர். 12 மணி ஆகியும் அதிகாரிகள் ஒருவர் கூட கூட்டத்திற்கு வராததால் விரத்தி அடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு ஆத்திரத்துடன் வெளியேறி அலுவலக நுழைவு வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு வந்த அதிகாரி ஒருவர் அவர்களை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த அதிகாரியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் சம்பந்தப்பட்ட அதிகாரி திணறினார்.

    பின்னர் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் ஒருவர் கூட கலந்து கொள்ளாத நிலையில் வேளாண், பொதுப்பணி, மின்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் அதிகாரிகள் மட்டும் பங்கேற்று கூட்டத்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

    • புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
    • தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பிஞ்சிவாக்கம் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (52). கொத்தனார். அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வீட்டில் இருந்தார்.

    அப்போது புதரில் இருந்து வந்த சுமார் 5 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது. இதனால் அலறியடித்தபடி வீட்டில் இருந்த அனைவரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பேரம்பாக்கத்தில் உள்ள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் புகுந்த பாம்பை தேடினார்கள்.

    அப்போது பாம்பு வீட்டின் ஒரு மூலையில் பாத்திரத்திற்கு இடையே ஒளிந்து கொண்டிருந்தது. அதை லாவமாக பிடித்த தீயணைப்புத் துறையினர் பத்திரமாக பூண்டி காப்பு காட்டில் விட்டனர்.

    ×