என் மலர்
திருவள்ளூர்
- திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- திருத்தணி கோவிலில் பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா வருகிற 21-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை 5 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் திருத்தணி கோவிலில் செய்யப்பட்டு உள்ள ஆடிக்கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
அவர் கோவில் வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருத்தணி கோவிலில் ஆடிக்கிருத்திகை விழாவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்களும் கோவில் நடைசாத்தப்படாமல் முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து இருக்கும்.
பக்தர்களுக்கு 5 நாட்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்கப்படும். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இதேபோல் 60 இடங்களில் கழிவறை மற்றும் குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. கூடுதலாக 452 தூய்மை பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபடுவார்கள். குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். கோவில் உள்ளேயும் 15 இடங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
5 தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். பக்தர்களின் வசதிக்காக இலவச 'டோல் பிரி' எண் விரைவில் அறிவிக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 4 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பாதுகாப்புக்காக 127 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். கூடுதலாக 4 ரெயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கோவில் துணை ஆணையர் விஜயா உடன் இருந்தனர்.
- கொரட்டூர், பாடி பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்.
- தீபா என்பவரது தொலைந்து போன ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.79 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டது.
அம்பத்தூர்:
கொரட்டூர், பாடி பஜனை கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த 10-ந் தேதி பாடி யாதவாள் தெருவில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தில் பணம் எடுத்துவிட்டு கார்டை அங்கேயே மறந்து விட்டு சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் அங்கு சென்று பார்த்தபோது ஏ.டி.எம் கார்டு இல்லை. இந்த நிலையில் அந்த ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கியதை தொடர்ந்து வங்கி கணக்கில் இருந்து பணம் சென்றது.
இதேபோல் திருமுல்லைவாயல் ஜெயலட்சுமி நகரை சேர்ந்த தீபா என்பவரது தொலைந்து போன ஏ.டி.எம்.கார்டு மூலம் ரூ.79 ஆயிரம் ரொக்கம் எடுக்கப்பட்டது. மேலும் மருந்து கடை, செல்போன் கடை, மதுபான கடைகளில் பயன்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மண்ணூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(31) என்பவரை கைது செய்தனர். அவர் ஏ.டி.எம்.களில் வாடிக்கையாளர்கள் மறந்து விட்டு செல்லும் வை-பை ஏ.டி.எம்.கார்டுகளை திருடி நூதன முறையில் கடைகளில் பொருட்கள் வாங்கி உல்லாசமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடத்துக் குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
- போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடத்துக் குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு இடைநிலை ஆசிரியராக ரவிச்சந்திரன் (58) உள்ளார். இவர் பட்டயத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று 29.02.2008-ல் ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரி பார்த்தபோது ரவிச்சந்திரனின் பட்டயப் படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை மாற்றம் செய்து போலியான சான்றிதழை சமர்ப்பித்து இருப்பது தெரிந்தது.
அவர் போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி எல்லப்பன் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலிசான்றிதழ் கொடுத்து 14 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்து வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் வேறு யாரேனும் ஆசிரியர் பணியில் சேர்ந்து உள்ளனரா? என்று அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார்.
- திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர், ஜே,என் சாலையில் உள்ள ஒரு வீட்டுக்குள் மர்ம வாலிபர் ஒருவர் குடிபோதையில் புகுந்தார். அவரை அப்பகுதி மக்கள் மடிக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பதும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
- வாகனங்களில் செல்லும் போது மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
- திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.
பூந்தமல்லி:
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏராளமானோர் மாடுகள் வளர்த்து வருகின்றனர். இதில் மாடுகளை பாதுகாப்பாக அதற்குரிய இடத்தில் கட்டிப் போட்டு வளர்ப்பதில்லை. இதனால் பெரும்பாலான மாடுகள் சாலைகள் மற்றும் தெருக்களில் குறுக்கே படுத்துக் கொண்டும், சுற்றி திரிந்தும் வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. வாகனங்களில் செல்லும் போது மாடுகள் திடீரென குறுக்கே செல்வதால் அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இது குறித்து திருவேற்காடு நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்த நிலையில் மாடு வளர்ப்பவர்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாடுகள் சாலைகளில் படுத்துக் கொண்டும், சுற்றி திரிந்து கொண்டும் உள்ளன. இதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளை விக்கின்றன.
மாடு வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை சாலைகளில் திரியாமல், தங்களது கட்டுப்பாட்டில் வளர்க்க வேண்டும். இதனை மீறி பொது இடங்களில், சாலைகளில், தெருக்களில் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு தொந்தரவோ, சிரமமோ ஏற்பட்டால் நகராட்சி சார்பில் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்ப டைக்கப்படும். மேலும் அபராதமும் விதிக்கப்பட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது.
- பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் முழுவதுமாக நிரம்பி விட்டதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு கடிதம் எழுதினர்.
அதன்படி கடந்த 1-ந் தேதியில் இருந்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்படுகிறது. பூண்டி ஏரி அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது.
இந்த நீரியல் ஆய்வு கூடத்துக்கு ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் கிணறு மதகு சேதமடைந்துள்ளது.
இந்த மதகு கிணற்றை அகற்றிவிட்டு புதிதாக 3 மதகு கிணறுகளை ரூ.10 கோடி செலவில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சேதமடைந்த கிருஷ்ணா நீர் கால்வாய் சீரமைப்பு பணிகளும் தொடங்கப்பட உள்ளன.
இவற்றைக் கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு முழுதுமாக நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.94 அடியாக பதிவாகியது. 1.725 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 400 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 13 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.
- ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆலந்தூர்:
செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக சென்னை மாநகர் முழுவதும் விளம்பர பதாகைகள், முக்கிய பிரதான சாலைகளில் ராட்சத பலூன்கள் வைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க பலவித பாதுகாப்பு உட்பட பல்வேறு வசதிக்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் வீரர்களை கவனிப்பதற்கு என்று தனியாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு என்று தனியாக இமிகிரேஷன் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய பாஸ்போர்ட், விசா ஆகியவற்றை விரைவாக சோதனை செய்யப்பட்டு வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கியது முதல், விமான நிலையம் வெளியே செல்லும் வரைக்கும் அழைத்து செல்ல தனியாக ஆட்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அது மட்டுமின்றி அவர்களுக்கென்று தனி வழியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
- போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.
- காப்பர் கம்பிகளை பிரித்து எடுக்க தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.
பொன்னேரி:
மீஞ்சூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சைமன் துரை மற்றும் போலீசார் இரவு காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் அருகே ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்குள்ள முட்புதரில் கரும்புகையுடன் தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அருகில் சென்றனர்.
போலீசாரை கண்டதும் அங்கு பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அத்திப்பட்டை சேர்ந்த ரவிக்குமார், நெட்டுகுப்பத்தைச் சேர்ந்த ராம்குமார், அண்ணாமலை சேரியை சேர்ந்த திவாகர், எர்ணாவூரைச் சேர்ந்த பரத் என்பதும், காமராஜர் துறைமுகம் அருகே மூடி கிடந்த தனியார் கம்பெனியில் காப்பர் வயர்களை திருடியதும் தெரிந்தது. காப்பர் கம்பிகளை பிரித்து எடுக்க தீவைத்து எரித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 கிலோ காப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.
- திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.
- கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
அவர்கள் மலைக்கோவிலில் உள்ள மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணத்தை மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோவில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் கடந்த 2 நாட்களாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 59 லட்சத்து 17 ஆயிரத்து 284, தங்கம் 1055 கிராமும், வெள்ளி 12 ஆயிரத்து 425 கிராமும் காணிக்கையாக கிடைத்து இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
- காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் கால் கழுவுவதற்காக சென்றார்.
- நீச்சல் தெரியாத சதாசிவம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூரை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 75). இவர் காக்களூர் பாதாள விநாயகர் கோவில் அருகே உள்ள ஏரியில் கால் கழுவுவதற்காக சென்றார்.
அப்போது கால் தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாத சதாசிவம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.
- 2052 பேருக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டது
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட த்தில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகம் மற்றும் பொது இடங்களில் பெரும் பாலானோர் முக கவசம் அணியாமல் செல்கின்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி நகராட்சி ஆணையர் ராஜ லட்சுமி தலைமையில் சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ், சுகாதார ஆய்வாளர் சுதர்சன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்குட்பட்ட ரெயில் நிலையம் முதல் டோல்கேட் வரை கடைகளில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார். மேலும் இலவசமாக முக கவசங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்த விழிப்புணர்வின் போது 2052 பேருக்கு இலவசமாக முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
- வாலிபர் திடீரென மேற்கூரையின் மற்றொரு பக்கத்துக்கு ஓடி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை, சர்வீஸ் சாலையில் தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. நேற்றுமாலை தொழிற்சாலைக்குள் திடீரென சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் புகுந்தார். திடீரென அவர் தொழிற்சாலையின் மேற்கூரை பகுதிக்கு விறு விறுவென ஏறிச்சென்றார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அவரை கீழே இறங்குமாறு கூறினர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் வட மாநில வாலிபர் சட்டையை கழற்றி கையில் வைத்தபடி கிழே குதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வடமாநில வாலிபரிடம் பேச்சு கொடுத்து கீழே இறங்குமாறு தெரிவித்தனர்.
ஆனால் அந்த வாலிபரிடம் இந்தியில் பேசியதாலும், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தமிழில் பேசியதாலும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் வாலிபர் கீழே குதித்தால் காப்பாற்றுவதற்காக அங்கு பெரிய வலையை தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைத்து இருந்தனர்.
ஆனால் அந்த வாலிபர் திடீரென மேற்கூரையின் மற்றொரு பக்கத்துக்கு ஓடி சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தார்.
இதில் தலை, கை, காலில் பலத்த காயம்அடைந்த அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த வாலிபர் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்தார்? என்பது தெரியவில்லை. அவரது புகைப்படத்தை வைத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






