என் மலர்
நீங்கள் தேடியது "போலி மதிப்பெண் சான்றிதழ்"
- கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடத்துக் குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.
- போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மடத்துக் குப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு இடைநிலை ஆசிரியராக ரவிச்சந்திரன் (58) உள்ளார். இவர் பட்டயத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று 29.02.2008-ல் ஆசிரியராக நியமிக்கப்பட்டு கடந்த 14 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ஆசிரியர்களின் சான்றிதழ்களை அதிகாரிகள் சரி பார்த்தபோது ரவிச்சந்திரனின் பட்டயப் படிப்பிற்கான மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்களை மாற்றம் செய்து போலியான சான்றிதழை சமர்ப்பித்து இருப்பது தெரிந்தது.
அவர் போலி மதிப்பெண் சான்றிதழை கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி எல்லப்பன் கடம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலிசான்றிதழ் கொடுத்து 14 ஆண்டுகள் ஆசிரியர் பணி செய்து வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் வேறு யாரேனும் ஆசிரியர் பணியில் சேர்ந்து உள்ளனரா? என்று அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






