என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பரம்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் நடந்துசென்ற தொழிலாளி பலி
    X

    செம்பரம்பாக்கத்தில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் நடந்துசென்ற தொழிலாளி பலி

    • செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார்.
    • செம்பரம்பாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மின்சார வயர்கள் பழுதடைந்தும், தாழ்வாகவும் காணப்படுகிறது.

    பூந்தமல்லி:

    செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது33). கூலித் தொழிலாளி.

    இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள காலி மைதானத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்த உயர் அழுத்த மின்சார வயர் திடீரென அறுந்து வசந்தகுமார் மீது விழுந்தது.

    இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    மின்வாரிய ஊழியர்களின் அலட்சிய போக்கால் உயிர் பலி ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி வசந்தகுமாரின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    நசரத்பேட்டை போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    செம்பரம்பாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மின்சார வயர்கள் பழுதடைந்தும், தாழ்வாகவும் காணப்படுகிறது. நேற்று இரவு வீசிய பலத்த காற்றால் பல இடங்களில் மின்சார வயர் அறுந்து தொங்கியவாறு இருந்துள்ளது.

    இந்த நிலையில் வசந்த குமார் அந்த வழியாக சென்ற போது அவர் மீது மின்வயர் அறுந்து விழுந்ததில் பலியாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, செம்பரம்பாக்கத்தில் பல இடங்களில் மின்வாரிய வயர்கள் பழுதடைந்து உள்ளன. சில இடங்களில் மிகவும் தாழ்வாகவும் மின்வயர்கள் செல்கின்றன. 2 மீட்டர் வயரில் 4 இடத்தில் ஒட்டுப் போட்டு இணைத்துள்ளனர்.

    இது குறித்து மின்வாரியத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மீண்டும் ஒரு விபத்து ஏற்படுவதற்கு முன் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×