என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரியபாளையம் அருகே பாலத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு விழுந்து வாலிபர் பலி
- பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30).
- நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள ஆரணி ஜி.என்.செட்டி தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.மேலும்,இவர் ஆரணி தி.மு.க. இளைஞர் அணியில் 9-வது வார்டு செயலாளராக இருந்தார்.
நேற்று இரவு வினோத் குமார் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் மோட்டார் சைக்கிளில் ஆரணி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பெரியபாளையம் அருகே வடமதுரை பெரிய காலனி அருகே திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலையில் வந்த போது வினோத்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கு சிறிய பாலம் கட்டுவதற்காக தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பலத்த காயம் அடைந்த வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பெரியபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அப்பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இதற்காகத் தோண்டப்படும் பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகை வைக்காததே உயிர் இழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேலும் விபத்தில் உயிர் பலி ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.






