என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சோழவரம் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய கலெக்டர்
- சோழவரம் அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், அழிஞ்சி வாக்கம் ஊராட்சி ஜனப்ப சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.
பொன்னேரி:
சோழவரம் அடுத்த பஞ்செட்டி ஊராட்சியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கால்வாயில் இருந்து வரும் மழைநீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேறும் இடம் ஆகியவற்றை கேட்டறிந்து குளத்தின் கரைப்பகுதிகளை பலப்படுத்தி சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அப்பகுதியில் உள்ள நூலக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சிக்குட்பட்ட அரசு நிலத்தில் முருங்கைக்கீரை பயிரிடப்பட்டதை பார்வையிட்டு செழிப்பாக வளர்ந்திருப்பதை பாராட்டினார்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ், அழிஞ்சி வாக்கம் ஊராட்சி ஜனப்ப சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்தார்.
அங்கு மாணவ-மாணவிகளுக்கு குடி தண்ணீர், சத்துணவு முட்டைகள் சரியாக வழங்கப்படுகிறதா? முட்டைகள் பள்ளிக்கு தினம் தோறும் வருகிறதா? மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.
பின்னர் 3-ம் வகுப்புக்கு சென்று அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் பாடம் நடத்தினார். தமிழ் பெயர்கள் எழுதவும் கணக்கு பாடத்தில் எண்கள் கூட்டல் குறித்து மாணவர்களிடம் கேட்டார். இதற்கு சில மாணவர்கள் பதில் கூறாமல் திகைத்ததால் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் நன்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்படி தெரிவித்தார்.
இதன் பின்னர் சோழவரம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து எந்திரத்தில் அரைத்து துகள்கள் ஆக்கி அதை சாலை போடுவதற்கு பயன்படுத்தப்படுவதை ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
அப்போது திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிழ்த மன்னன், குலசேகரன் ,ஊராட்சித் தலைவர்கள் பஞ்செட்டி சீனிவாசன், அழிஞ்சிவாக்கம் நந்தினி ரமேஷ் சோழவரம் லட்சுமி முனிஸ்வரன் உடன் இருந்தனர்.






