என் மலர்
திருவள்ளூர்
- மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது.
- நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
மாண்டஸ் புயல் மற்றும் அதனை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. தற்போது மழை ஓய்ந்து உள்ளது. கனமழையின் போது தாழ்வான இடங்களில் தேங்கி இருந்த மழைநீர் முழுவதும் வடிய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தற்போது மழை நின்றும் பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்கிறது.
காட்டுப்பாக்கம் அம்மன் நகர், சென்னீர்குப்பம், நசரத்பேட்டை யமுனா நகர், பாரிவாக்கம் மாருதி நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வெளியேறாமல் தேங்கிஉள்ளது. பல நாட்களாக தேங்கி நிற்கும் இந்த தண்ணீர் தற்போது நிறம் மாறி துர்நாற்றம் அடிக்க அடிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு இந்த தண்ணீரிலேயே வெளியே நடந்து செல்லும் நிலை உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது,
இப்பகுதியில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால் மழை வெள்ளம் வீடுகளை சுற்றி தேங்கி உள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தேங்கியிருக்கும் மழை வெள்ளத்தை அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
காட்டுப்பாக்கம், பாரிவாக்கம், நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இருப்பினும் பல இடங்களில் மீண்டும் நீர் சுரப்பதால் நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.
நசரத்பேட்டை யமுனா நகரில் வீடுகள் முன்பு தேங்கி உள்ள மழை நீரை கடந்து செல்ல சிலர் படகு போன்று மிதவையை தாயார் செய்து தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
- ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர்.
- ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பெரியபாளையம்:
மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீரின் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர். எனவே, ஆற்றங்கரையில் வசிக்கும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஆற்றில் யாரும் குளிக்க கூடாது, துணி துவைக்க கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார்(வயது20) என்ற வாலிபர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், நவீன்குமார் செல்பி எடுத்தாராம். அப்போது நவீன்குமார் திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்துள்ளார்.
இதனால் செய்வது அறியாமல் நண்பர்கள் கூக்குரல் இட்டனர். ஆனால் நவீன் குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் மூலம் இன்று காலை முதல் தேடி வருகின்றனர். ஆனால், நவீன்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
+2
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரியிடம் சமர்ப்பித்து சரிபார்த்தனர்.
திருவள்ளூர்:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சங்கங்களில் 198 விற்பனையாளர்கள் பணியிடங்கள் மற்றும் 39 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இதனை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர்.
அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று நேர்முகத் தேர்வு தொடங்கியது. இதற்காக ஏற்கனவே விண்ணப்பத்தவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை திருவள்ளூரில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டுறவு சங்கங்களின் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்கள் குவிந்தனர்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரியிடம் சமர்ப்பித்து சரிபார்த்தனர். அதை தொடர்ந்து அதிகாரிகள் நேர்முகத் தேர்வு நடத்தினார்கள்.
வருகின்ற 29ஆம் தேதி வரை இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சண்முகவள்ளி தெரிவித்தார்.
- ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் இருந்தது.
- பூந்தோட்டங்களில் சென்று பூக்களை பறிப்பவர்கள் பனிமூட்ட இருட்டால் தவித்தனர்.
திருத்தணி:
திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் இன்று கடும் பனிமூட்டம் நிலவியது.
காலை 9 மணி வரை புகைபோல் பனி மூட்டம் சூழ்ந்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை மெதுவாக முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர். இதேபோல் ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர் பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் இருந்தது.
கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். பூந்தோட்டங்களில் சென்று பூக்களை பறிப்பவர்கள் பனிமூட்ட இருட்டால் தவித்தனர். காலை 9 மணிக்கு பின்னர் பனி விலகிய பிறகே சகஜ நிலை திரும்பியது. மாண்டஸ் புயலுக்கு முன்னரும் இதேபோல் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் ஏற்பட்டு வந்தது. பின்னர் பலத்த மழை கொட்டியதால் பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் பனிமூட்டம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. மழை ஓய்ந்தாலும் பனியின் தாக்கம் குறையவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.
- பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 2 ஆயிரம் கனஅடி வெளியேறி வருகிறது.
- பூண்டி ஏரியின் மொத்த உயரம் 34 அடி. இதில் 34.10 அடிக்கு தண்ணீர் உள்ளது.
திருவள்ளூர்:
தொடர்மழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து ஏரியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. பின்னர் பலத்த மழை இல்லாததால் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே இன்று காலை பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு 2 ஆயிரம் கனஅடி வெளியேறி வருகிறது.
பூண்டி ஏரியின் மொத்த உயரம் 34 அடி. இதில் 34.10 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 4,300 கனஅடி தண்ணீர் வருகிறது. ஏரியில் 2,854 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
- அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
- திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஆள் கடத்தல், கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் மக்களுக்கு பாதுகாப்பு இன்மை அதிகரிப்பு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, போதைப்பொருட்கள் புழக்கத்தால் சமூக விரோதிகள் ஊடுருவல் அதிகரிப்பு, குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வு போன்றவற்றை கண்டித்தும், தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி ஆட்சியைப் பிடித்திருக்கும் தி.மு.க அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க.வின் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி. ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கமாண்டோ பாஸ்கர், சிற்றம் சீனிவாசன், இன்பநாதன், ஞானகுமார், கடம்பத்தூர் முதல் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், ஆர்.டி.இ. சந்திரசேகர், போளிவாக்கம் மணி 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
அதேபோல பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது.
- மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.
பூந்தமல்லி:
சென்னையில் கடந்த 2019-ம் ஆண்டு குடிநீர் எரிகளில் தண்ணீர் வற்றியதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
அப்போது குடிநீர் தேவையை சமாளிக்க பூந்தமல்லி அருகே சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிகளில் தேங்கி இருந்த தண்ணீரும் பெரிதும் உதவியது. கல்குவாரி தண்ணீரை சுத்திகரித்து அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து சென்னை நகரில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைளை அரசு தீவிரப்படுத்தியது. ஏரி, குளங்களில் கூடுதல் தண்ணீரை சேமிக்க தூர்வாரி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பூந்தமல்லி, மாங்காடு பகுதியில் தேங்கும் வெள்ள நீரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரியில் தண்ணீரை சேமிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.
பருவமழை காலங்களில் பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், வரதராஜபுரம், மேப்பூர், நசரத்பேட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் பூவிருந்தமல்லி, மலையம்பாக்கம் ஊராட்சி, மாங்காடு நகராட்சியில் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக மாங்காடு நகராட்சியில் பெரும் பாதிப்பை உண்டாகியது.
இதனைத்தொடர்ந்து பூந்தமல்லி, மாங்காடு நகராட்சியில் ஏற்படும் வெள்ள நீரை சிக்கராயபுரம் கல்குவாரியில் சேமிக்கும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்தனர். அமைச்சர்கள் கே.என்.நேரு தா.மோ.அன்பரசன், சா.மு.நாசர் ஆகியோர் ஆய்வு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டனர். தலைமை செயலாளர் இறையன்பு உட்பட அதிகாரிகளும் ஆய்வு செய்து போர்க்கால நடவடிக்கையில் கால்வாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டது.
பூந்தமல்லியில் இருந்து சிக்கராயபுரம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு தனியாக வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் 30 அடி அகலத்தில் கால்வாய்கள் அமைத்தனர். தற்போது பெய்துவரும் பலத்த மழை காரணமாக இந்த கால்வாய் வழியாக சென்ற மழைநீர் கல்குவாரி பள்ளத்தில் சென்று சேர்ந்தது. தொடர் மழை காரணமாக இங்குள்ள 3 கல்குவாரி குட்டைகள் முழுவதும் நிரம்பி உள்ளது.
மாண்டஸ் புயலின்போது கனமழை பெய்தும் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் மழை நீர் வெளியேறி கல்குவாரி குட்டையில் சேர்ந்து வருகிறது.
சிக்கராயபுரம் கல்குவாரியை பொருத்தவரை சுமார் 1 டி.எம்.சி வரை சேமிக்கும் அளவிற்கு ராட்சத பள்ளங்கள் உள்ளது. தற்போது வரை 3 கல்குவாரி குட்டை கள் நிரம்பி உள்ளதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த தண்ணீரை கோடைக்காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சிக்கராயுபுரம் கல்குவாரி குட்டையில் தண்ணீரை தேக்கும் திட்டம் முழுபலனை கொடுத்து இருப்பதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். கல்குவாரி குட்டைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை முறையாக பராமரித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதேபோல் தண்ணீரை சேமிக்கும் புதிய ஏரிகளை அரசு உருவாக்கி வரும் காலங்களில் குடிநீர் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கடலில் சீற்றம் குறைந்து பழைய நிலை திரும்பி உள்ளது.
- மாண்டஸ் புயலுக்கு பிறகு ஒரு வாரத்துக்கு பின்னர் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டது. மணல்அரிப்பு, சாலை சேதம் காரணமாக கடந்த ஒருவாரமாக பழவேற்காடு மீன்வர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கடலில் சீற்றம் குறைந்து பழைய நிலை திரும்பி உள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்னர் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்றதால் மீனவர்களின் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கியது. மத்தி,மடவை, இறால்,நண்டு, வஞ்சிரம், வாலை,உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீன்கள் வரத்து அதிகமானதால் பழவேற்காடு மார்க்கெட்டில் மீன் விற்பனை மீண்டும் களைகட்டியது. மீன் விலையும் வழக்கத்தைவிட ரூ.200-வரை குறைந்து இருந்ததால் பொதுமக்கள், மீன்வியாபாரிகள் கூட்டம் அலை மோதியது.
இறால் அதிக அளவு பிடிபட்டதால் கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது. ரூ.200 ஆக குறைந்தது. இதனால் பொதுமக்கள் போட்டிபோட்டி தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச் சென்றனர்.
பழவேற்காடு மீன்சந்தையில் மீன்விலை (கிலோவில்) விபரம் வருமாறு:-
இறால்-ரூ.200, நண்டு-ரூ.300, வஞ்சிரம்-ரூ.700, மத்தி-ரூ.130, கானகத்தை-ரூ.300, மடவை-ரூ.250, நெத்திலி-ரூ.250.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மாண்டஸ் புயலுக்கு பிறகு ஒரு வாரத்துக்கு பின்னர் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதிக அளவு மீன்கள் சிக்கி உள்ளது. மீன் விலையும் குறைந்து உள்ளதால் சந்தையில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. மீன்விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது என்றனர்.
இதற்கிடையே கோரைகுப்பம் மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அத்திப்பட்டு அன்பாலயா சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.
- பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி கிராம எல்லையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
- ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், நயப்பாக்கம் நம்பாக்கம், வெள்ளத்து கோட்டை, கூனிபாளையம் உட்பட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் மொத்தம் உள்ள 35 அடியில் 34 அடியை தாண்டியது. மேலும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் மற்றும் மழையின் காரணமாக வரத்துக் கால்வாய்கள் மூலமாக பெறப்படும் நீர் மொத்தமாக 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்ததால் பூண்டி எரியில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் திறக்கப்பட்டது.
பின்னர் பலத்த மழை இல்லாததால் பூண்டி எரிக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால் தண்ணீர் திறப்பு நேற்று 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் குறைந்து 5320 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு இன்று காலை முதல் 4 ஆயிரம் கன அடியாக வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இதில் இன்றைய நிலவரப்படி 2854 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பூண்டி கிராம எல்லையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. இதனால் ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், நயப்பாக்கம் நம்பாக்கம், வெள்ளத்து கோட்டை, கூனிபாளையம் உட்பட 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பூண்டிக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. அவர்கள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தின் மீது முழங்கால் அளவுக்கு செல்லும் வெள்ளத்தை கடந்து சென்று வருகின்றனர். கடந்த காலங்களில் இதுபோன்று தரைப்பாலத்தை கடந்து சென்ற 10-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து சென்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வெள்ளம் வடியும் வரை பொதுமக்கள் தரைப்பாலத்தை கடக்காமல் தடுக்க அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 2745 மில்லியன் கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 611 கன அடி தண்ணீர் வருகிறது.
சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் 813 மில்லியன் கன அடி நீர் தண்ணீர்இருப்பு உள்ளது. ஏரிக்கு 200 கனஅடி நீர் வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3228 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலமாக 1924 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 110 கன அடியும், ஏரியின் பாதுகாப்பு கருதி 1500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி மொத்த கொள்ளளவான 500 மி.கன அடி முழுவதும் நிரம்பி காட்சி அளிக்கிறது.
- 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
- பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் பஜார் வீதியில் இன்று மின் கட்டண உயர்வு, சொத்து வரி 150 சதவீதம் உயர்வு, குடிநீர் வரி உயர்வு, கழிவுநீர் வரி உயர்வு, பால் விலை, எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்தும் பொய்யான வாக்குறுதிகளை அளித்த தி.மு.க. அரசை கண்டித்தும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் பூண்டியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூண்டி ஒன்றிய செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். இதில் திரளான அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பழவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மஸ்தான்,மதன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பாலைவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் போலீசார் அரங்குப்பம் கடைகளில் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மஸ்தான்,மதன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
- பொன்னேரி அடுத்த பள்ளம் பகுதியில் 6பட்டாகத்தி, கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டி, சிறு புழல் பேட்டை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா(23). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அவரை நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது தப்பி ஓடிவிட்டார். இந்தநிலையில் பொன்னேரி அடுத்த பள்ளம் பகுதியில் 6பட்டாகத்தி, கஞ்சாவுடன் பதுங்கி இருந்த கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். எண்ணூரில் தனது அண்ணனை வெட்டியவர்களை கொலை செய்வதற்காக குற்றாலம் சென்று கத்தி வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.






