என் மலர்
திருவள்ளூர்
- கோயம்பேட்டில் இருந்து சென்னை நகர் மற்றும் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- திருமழிசை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர்:
கோயம்பேட்டில் இருந்து சென்னை நகர் மற்றும் வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து பஸ்களும் நகருக்குள் வருவதால் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்கு வரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புறநகர் பஸ்நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் திறக்கபட இருக்கிறது. இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல் பூந்தமல்லி அடுத்த திருமழிசை துணைக் கோள் நகரம் அருகேயும் புதிய பஸ்நிலையம் 25 ஏக்கரில் ரூ. 336 கோடி மதிப்பில் கடந்த 2021-ம் ஆண்டுமுதல் கட்டப்பட்டு வருகிறது. கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கத்தை தொடர்ந்து 4-வது புதிய பஸ்நிலையமாக திருமழிசை பஸ்நிலையம் அமைய உள்ளது. பஸ்நிலைய கட்டுமானபணி 80 சதவீதம் முடிந்து உள்ளது.
இந்த புதிய பஸ் நிலையத்தில், மேற்கு மண்டலங்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம், மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழகம் மற்றும் ஆம்னி பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் திருமழிசை புதிய பஸ் நிலைய கட்டுமான பணியை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் இன்று காலை ஆய்வு செய்தனர். அவர்கள் பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள், சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமழிசை பஸ் நிலையத்தில் 70 அரசு பஸ்கள் மற்றும் 30 தனியார் பஸ்களை ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 பஸ்களின் நடைமேடைகளும் சுவர் மூலமாக பிரிக்கப்படும்.
37 புறநகர் பஸ்கள் மற்றும் 27 ஆம்னி பஸ்கள் நிறுத்த பார்க்கிங் வசதி மற்றும் பராமரிக்க பணிமனை வசதி அமைக்கப்படுகிறது. மாநகர பஸ்களை இயக்க தனியாக 36 பஸ் நிறுத்தும் இடம் அமைக்கப்படுகிறது. 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேமிப்பு தொட்டி, மழைநீர் வடிகால்வாய், உயர் அழுத்த மின்சார வசதி, மின்தடையின்போது ஜெனரேட்டர் வசதி செய்யப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் இடம், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழித்தடம், மூன்றாம்பாலினத்தவருக்கு தனி கழிப்பறைகள், பாலூட்டும் அறைகள், பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பஸ்நிலையத்தின் உட்புறத்தில் 3.75 ஏக்கரிலும், அருகில் உள்ள திறந்த வெளி பகுதியில் 2.5 ஏக்கரில் பசுமை பகுதி அமைய உள்ளது.
பயணிகள் பயன்படுத்தும் வகையில், நான்கு 'லிப்ட்'டுகள், பணிகள் மேற்கொள்ள இரண்டு 'லிப்ட்'டுகள், மூன்று நகரும் படிக்கட்டுகள் மற்றும் ஒரு கன்ட்ரோல் ரூம் அறையும் இயங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளரச்சித்துறை முதன்மை செயலர்அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல்மிஸ்ரா, பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- போலீசார் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- ஆந்திராவுக்கு வேனில் கடத்தி வந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டு நாகாரஜான் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவுக்கு வேனில் கடத்தி வந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த திருநாவுக்கரசு, தனசேகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். வேனுடன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர்.
- வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த உடலை மீட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார் (வயது20) என்ற வாலிபர் கடந்த புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று செல்பி எடுத்தபோது திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்தார்.
உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர். ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் உதவிகளுடன் தேடினர்.
இந்நிலையில், அந்த வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்டலம் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு எதிரே ஆற்றின் நடுவில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த அவரது உடலை மீட்டனர். இதன் பின்னர் வெங்கல் காவல் நிலைய போலீசார் நவீன் குமார் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- மாணவியின் சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
- சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் - கனிமொழி தம்பதியரின் மகள் பி.ரிதன்யா (வயது 7). அதே பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ கலைமகள் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர், 42 விநாடிகளில், 35 ஆங்கில நா பிறழ் வாக்கியங்களை (டங் டிவிஸ்டர்) கூறி உலக சாதனை படைத்தார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்', ‛அசிஸ்ட் உலக சாதனை' ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்', ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது. சாதனை படைத்த மாணவி ரிதன்யாவுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் திருஞானம், தாளாளர் தேன்மொழி ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பங்கேற்று, மாணவி ரிதன்யா மற்றும் அவர்களது பெற்றோர்களை வெகுவாக பாராட்டி கவுரவித்தனர்.
- மீஞ்சூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி பொன்னேரி 300பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, ஜாமென்ட்ரி பாக்ஸ், வண்ணம் தீட்டுதல், பென்சில் கிட், வழங்கப்பட்டது.
- மாவட்ட பிரதிநிதி கலைவாணி வார்டு செயலாளர் பிரபு குமார் அகத்தீஸ்வரன் யுவராஜ் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்
பொன்னேரி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி நகர கழகம் சார்பாக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் 60 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பி வி சங்கர் ராஜா அவர்கள் முன்னிலையில் பொன்னேரி நகர கழகச் செயலாளர் கா.தயாளன் அவர்கள் தலைமையில் பொன்னேரியில் அமைந்துள்ள மீஞ்சூர் ஊராட்சி தொடக்கப்பள்ளி பொன்னேரி 300பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, ஜாமென்ட்ரி பாக்ஸ், வண்ணம் தீட்டுதல், பென்சில் கிட், வழங்கப்பட்டது.
கழக நிர்வாகிகள் மாவட்ட இணைச் செயலாளர் பானுமதி மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா ஆரணி பேரூர் கழக செயலாளர் தன்ராஜ் எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அன்பு பொன்னேரி நகர இணைச் செயலாளர் சகாயம் பொன்னேரி நகர துணை செயலாளர் முஸ்தாக் பொன்னேரி நகர துணைச் செயலாளர் ரஞ்சனி பொன்னேரி நகர இளைஞரணி செயலாளர் கிரி பொன்னேரி நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் அருணகிரி மாவட்ட பிரதிநிதி கலைவாணி வார்டு செயலாளர் பிரபு குமார் அகத்தீஸ்வரன் யுவராஜ் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதாக புகார் தெரிவித்தனர்.
- பள்ளி மாணவ- மாணவர்களுடன் எம்.எல்.ஏ. கலந்துரையாடி குறைகளை கேட்டு அறிந்தார்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த மாண்டஸ் புயல் மழையால் பாதிப்பால், காட்டூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கால்நடைகள் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் நுழைந்து விடுவதாகவும், மேலும் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து பொன்னேரி எம்எல்ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவ- மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியில் குறைகளை கேட்டு அறிந்தார். பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு பார்வையிட்டு உணவை பரிசோதித்து பார்த்தார். அப்போது காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, சமூக ஆர்வலர் ஜோதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
- அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 2-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடு செய்ய நாளை பணி நாளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பூந்தமல்லி, குமணன்சாவடியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சொத்து வரி, மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பூந்தமல்லி:
சொத்து வரி, மின் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.தி.மு.க.சார்பில் பூந்தமல்லி, குமணன்சாவடியில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமை தாங்கினார். நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட சுமார் 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி, மின்கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது முன்னாள் அமைச்சர் பென்ஜமின் பேசும்போது, அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தி.மு.க.வினர் முடக்கி விட்டார்கள். முதியோர் உதவி தொகை, திருமண உதவி தொகையை நிறுத்தி விட்டனர்.தி.மு.க.வினர் புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
பூந்தமல்லி நகரத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மழை நீர் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்து கால்வாய் அமைத்ததால் தான் தற்போது தண்ணீர் தேங்க வில்லை என்றார்.
- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டைக்கு தினந்தோறும் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- மின்சார ரெயில் வருகை குறித்து ரெயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு வெளியிட்ட ரெயில் நிலைய அதிகாரியிடம் ஏராளமான பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி ரெயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டைக்கு தினந்தோறும் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். பொன்னேரியை சுற்றி உள்ள பொதுமக்கள் பணி சம்பந்தமாக சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிக்கு மின்சார ரெயிலையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கு இன்று காலை 8.16 மணி அளவில் மின்சார ரெயில் பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் தயாராக நின்றனர்.அப்போது அந்த மின்சார ரெயில் பொன்னேரி ரெயில் நிலையத்தில் 4-வது நடை மேடையில் வந்து செல்லும் என்று ரெயில் நிலைய அதிகாரி அறிவித்தார். இதனால் பயணிகள் அனைவரும் 4-வது நடை மேடைக்கு சென்று காத்திருந்தனர்.
ஆனால் அந்த மின்சார ரெயில் 3-வது நடை மேடையில் வந்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர, அவசரமாக பிளாட்பாரங்களில் இடையே தண்டவாளம் வழியாக ஏறிக்குதித்து ரெயிலில் ஏறினர். இதனால் பெண் பயணிகள், முதியோர் பெரிதும் அவதி அடைந்தனர்.
மின்சார ரெயில் வருகை குறித்து ரெயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு வெளியிட்ட ரெயில் நிலைய அதிகாரியிடம் ஏராளமான பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். நடைமேடை மாறி வந்ததால் ஏராளமான பயணிகள் அந்த மினசார ரெயிலில் பயணம் செய்யவில்லை. அவர்கள் தாமதமாக அடுத்த ரெயிலில் சென்றனர். தினந்தோறும் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலதாமதமாக வருவதாகவும், ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள்,போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
- ஒரே மதுக்கடையை குறிவைத்து கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறார்கள்.
- கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்மகும்பல் மதுக்கடையின் பின்பக்க சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த மது பாட்டில்களை அள்ளிச் சென்று விட்டனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை உடைத்தும் சேதப்படுத்தி விட்டு கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து தப்பி சென்று உள்ளனர்.
நள்ளிரவில் அப்பகுதியில் கனகம்மாசத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மதுக்கடையில் துளை போட்டு கொள்ளை நடந்து இருப்பதும் தெரிய வந்தது.
மதுக்கடையில் விற்பனை பணத்தை வைக்காததால் கொள்ளை கும்பல் ஏமாற்றம் அடைந்து மது பாட்டில்களை உடைத்து விட்டு ஏராளமான மது பாட்டில்களை அள்ளிச் சென்று உள்ளனர்.
இதே மதுக்கடையில் இதற்கு முன்பும் கொள்ளை நடந்து உள்ளது. ஒரே மதுக்கடையை குறிவைத்து கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறார்கள். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பூண்டி ஏரியில் கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
- பூண்டி ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து பூண்டி ஏரியில் கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் ஆந்திராவிலும் பலத்த மழை பெய்தது. நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையின் முழு கொள்ளளவு 68 டி.எம். சி. ஆகும். மழை நீர் வரத்தால் அந்த அணையின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையில் 50 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
பலத்த மழை பெய்ததால் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை பயன்படுத்துவதில்லை. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி நவம்பர் 8-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி விதம் திறக்கப்பட்டது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் சாகுபடிக்கு தண்ணீர் எடுக்காதது, பூண்டி ஏரியில் இருந்து திருந்த விடப்படும் நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து ஏரிக்கு பூண்டி தண்ணீர் திறப்பு நேற்று இரவு முதல் குறைக்கப்பட்டது.
வினாடிக்கு 1300 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.10 அடியாக பதிவானது.
2.854 டி.எ்ம. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து 2 ஆயிரத்து 300 கன அடியாக உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக 250 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- சுடுகாடு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
அரண்வாயல்குப்பம்:
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரண்வாயல்குப்பம். இப்பகுதியில் நெடுஞ்சாலையோரம் உள்ள சுடுகாடு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பம்மல் (எ) சிவா(50) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அவரது உடலை உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சுடுகாடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அப்போது சுடுகாடு பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரண்வாயில்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சந்திப்பு பகுதியில் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று மாவட்ட நிர்வாகத்திடம் பேசி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
.






