என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே டாஸ்மாக் கடை சுவற்றில் துளைபோட்டு மதுபாட்டில்களை அள்ளிச்சென்ற கும்பல்
- ஒரே மதுக்கடையை குறிவைத்து கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறார்கள்.
- கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த மாமண்டூர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்மகும்பல் மதுக்கடையின் பின்பக்க சுவற்றில் துளை போட்டு உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த மது பாட்டில்களை அள்ளிச் சென்று விட்டனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை உடைத்தும் சேதப்படுத்தி விட்டு கடைக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து தப்பி சென்று உள்ளனர்.
நள்ளிரவில் அப்பகுதியில் கனகம்மாசத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மதுக்கடையில் துளை போட்டு கொள்ளை நடந்து இருப்பதும் தெரிய வந்தது.
மதுக்கடையில் விற்பனை பணத்தை வைக்காததால் கொள்ளை கும்பல் ஏமாற்றம் அடைந்து மது பாட்டில்களை உடைத்து விட்டு ஏராளமான மது பாட்டில்களை அள்ளிச் சென்று உள்ளனர்.
இதே மதுக்கடையில் இதற்கு முன்பும் கொள்ளை நடந்து உள்ளது. ஒரே மதுக்கடையை குறிவைத்து கொள்ளையர்கள் தொடர்ந்து கைவரிசை காட்டி வருகிறார்கள். இது குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






