என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வருகையின் நடைபாதை தவறான அறிவிப்பால் பயணிகள் அவதி
- கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டைக்கு தினந்தோறும் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
- மின்சார ரெயில் வருகை குறித்து ரெயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு வெளியிட்ட ரெயில் நிலைய அதிகாரியிடம் ஏராளமான பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி ரெயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டைக்கு தினந்தோறும் சுமார் அரை மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பொன்னேரி ரெயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். பொன்னேரியை சுற்றி உள்ள பொதுமக்கள் பணி சம்பந்தமாக சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிக்கு மின்சார ரெயிலையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் இருந்து பொன்னேரிக்கு இன்று காலை 8.16 மணி அளவில் மின்சார ரெயில் பொன்னேரி ரெயில் நிலையத்துக்கு வந்து கொண்டு இருந்தது. அதில் பயணம் செய்ய ஏராளமான பயணிகள் தயாராக நின்றனர்.அப்போது அந்த மின்சார ரெயில் பொன்னேரி ரெயில் நிலையத்தில் 4-வது நடை மேடையில் வந்து செல்லும் என்று ரெயில் நிலைய அதிகாரி அறிவித்தார். இதனால் பயணிகள் அனைவரும் 4-வது நடை மேடைக்கு சென்று காத்திருந்தனர்.
ஆனால் அந்த மின்சார ரெயில் 3-வது நடை மேடையில் வந்து நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவசர, அவசரமாக பிளாட்பாரங்களில் இடையே தண்டவாளம் வழியாக ஏறிக்குதித்து ரெயிலில் ஏறினர். இதனால் பெண் பயணிகள், முதியோர் பெரிதும் அவதி அடைந்தனர்.
மின்சார ரெயில் வருகை குறித்து ரெயில் நிலையத்தில் தவறான அறிவிப்பு வெளியிட்ட ரெயில் நிலைய அதிகாரியிடம் ஏராளமான பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர். நடைமேடை மாறி வந்ததால் ஏராளமான பயணிகள் அந்த மினசார ரெயிலில் பயணம் செய்யவில்லை. அவர்கள் தாமதமாக அடுத்த ரெயிலில் சென்றனர். தினந்தோறும் மின்சார ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் காலதாமதமாக வருவதாகவும், ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள்,போலீஸ் பாதுகாப்பு இல்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.






