என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
    • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யகுமார் (வயது19) தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது நண்பரான சிபியுடன் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சிறுவானூர் அருகே சென்றபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திவ்யகுமாரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் திவ்யகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சி பி லேசான காயத்துடன் தப்பினார்.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.அப்போது லாரியை திருப்பும் போது சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் டீசல் டேங்க் சேதமடைந்து திடீரென தீப்பிடித்தது. இதில் லாரி முழுவதும் தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    சாலையின் நடுவே லாரி நின்றதால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தா சுக்லா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர்.

    • மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.

    மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். வேலாயுதத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரேவதி சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வேலாயுதம் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் வேலாயுதம் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறிவந்தார்.

    நேற்று இரவும் மது போதையில் வந்த வேலாயுதம் இதுதொடர்பாக மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேவதி அங்கேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரேவதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபோதையில் இருந்த வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • ராபீஸ் குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வெங்கல் கிராமத்தில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ராபீஸ் குமார் (வயது21) உள்ளிட்ட 7 பேர் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில், நள்ளிரவு ராபீஸ் குமார் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பெரியபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். ராபீஸ் குமாரின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து அவருடன் தங்கி இருந்த நண்பர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    • பள்ளிகரணை குப்பைமேடு அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பில் வேகமாக மோதியது.
    • காரின் கதவு திறந்து கொண்டதில் பின்னால் உட்கார்ந்திருந்த கிருத்திகா கீழே விழுந்து பலத்த காயம்‌ அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா(23). இவர் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை தன்னுடன் பணியாற்றும் அபிஷா(26), ஸ்ரீதர்(29), பங்கஜ்(18) ஆகியோருடன் சென்னையை சுற்றி பார்ப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார். காரை ஸ்ரீதர் ஓட்டினார். காலை 7.45 மணியளவில் துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல்சாலையில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பள்ளிகரணை குப்பைமேடு அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பில் வேகமாக மோதியது. அப்போது காரின் கதவு திறந்து கொண்டதில் பின்னால் உட்கார்ந்திருந்த கிருத்திகா கீழே விழுந்து பலத்த காயம்‌ அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற மூன்று பேரும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருத்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.
    • தரைப்பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி.

    இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் 16 மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றம் பாக்கம், ஒதப்பை, மெய்யூர், திருக்கண்டலம், அணைக்கட்டு, ஜனபன்சத்திரம் கூட்டு சாலை வழியாக பாய்ந்து எண்ணூரில் வங்கக் கடலில் கலக்கிறது.

    பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் போதெல்லாம் ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது உள்ள தரைப்பாலம் மூழ்கி விடுவது வழக்கம்.

    இந்த தரைப்பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    தரைப்பாலம் மூழ்கிவிட்டால் வெள்ளம் குறையும் வரை வாகன போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகிறது.

    இது போன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி பல்வேறு பகுதிகளுக்கு மாற்று மார்க்கத்தில் சென்று வரும் நிலை உள்ளது.

    மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது.

    ஒதப்பை தரைப்பாலத்தை ஒட்டி வெள்ளம் பாய்ந்து சென்றது. இதனால் ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையே வாகனப் போக்குவரத்து 6 நாட்கள் தடை செய்யப்பட்டது.

    கடந்த காலங்களில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் தரைப்பாலம் மூழ்கி நாள் கணக்கில் வாகனப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வந்தது.

    இதனை கருத்தில் கொண்டு ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் மீது பாலம் அமைக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்று தமிழக அரசு ஒதப்பை கொசஸ்தலை ஆற்று தரைப்பாலத்தில் இடது, வலது புறங்களில் 2 பாலங்கள் அமைக்க முடிவு செய்தது. இடது புறத்தில் பாலம் அமைக்க ரூ.11.50 கோடி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணிகள் 2019ம் வருடம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 180 மீட்டர் நீளத்தில், 9.50 மீட்டர் அகலத்தில் 8 மெகா தூண்கள் மீது இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் வலது புறத்தில் ரூ.13.89 கோடி செலவில் மற்றொரு பாலம் அமைக்கும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ஈரோட்டை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இந்த பாலத்தை அமைக்கிறது. 139 மீட்டர் நீளத்தில், 5 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது. 8 தூண்கள் அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்கும். இந்த 2 பாலங்களை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

    காய்ச்சல் இருமல், சளி, பிரசவம், எக்ஸ்ரே ஸ்கேன், பல் சிகிச்சை, விபத்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், பொது மருத்துவம் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்நோயாளியாகவும் வெளிநோயாளியாகவும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.

    இந்நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், திருப்பாலைவனம், பழவேற்காடு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவ கால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

    மழைக்காலம் தொடங்கிய அக்டோபர் மாதத்தில் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. மழை, பனி, குளிர் போன்றவற்றால் வைரஸ் தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வருகிறது. காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி போன்றவை இதன் அறிகுறியாக இருந்தாலும் தொண்டை வலியும் அதிகமாக உள்ளது.

    பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. வழக்கமாக மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் இரவு 10 மணி வரை செயல்படக்கூடிய கிளினிக்குகள் இப்போது கூட்டம் குவிவதால் நள்ளிரவு வரை செயல்படுகிறது.

    குறிப்பாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவ வெளி நோயாளி சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அதிகமாக கூட்டம் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் மருத்துவர்கள் சென்று விடுவதால் நோயாளிகள் மருத்துவரை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு திரும்பி விடுவதாகவும் தனியார் மருத்துவமனையை நாடுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
    • காட்டன் சூதாட்டத்தின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை காட்டிய இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் காட்டன் சூதாட்டம் கொடிக்கட்டி பறப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே, அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மற்றும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், வெங்கடேசன், தியாக ராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் ஆரணி பஜார் வீதியில் நேற்று கண்காணித்தனர்.

    அப்பொழுது ஆரணி புதிய இருளர் காலனியை சேர்ந்த ரெனால்ட் என்ற கார்த்திக் (32), விஜயன் (48), நாகராஜ் (31), அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் (56), எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த நாகூர் (40) ஆகிய 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    மேலும், அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.5,450 மற்றும் நோட்டு, வெள்ளை பேப்பர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், 5 பேரையும் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் போலீசார் அனைவரையும் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். காட்டன் சூதாட்டத்தின் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை காட்டிய இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் மற்றும் ஆரணி போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
    • கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.5,450 பறிமுதல் செய்யப்பபட்டது

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் காட்டன் சூதாட்டம் கொடிக்கட்டி பறப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே, அவரது உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், வெங்கடேசன், தியாகராஜன், ராஜ்குமார் மற்றும் போலீசார் ஆரணி பஜார் வீதியில் கண்காணித்தனர்.

    அப்பொழுது ஆரணி புதிய இருளர் காலணியை சேர்ந்தவர்களான ரெனால்ட் என்ற கார்த்திக்(வயது32), விஜயன் (வயது48), நாகராஜ் (வயது31), அத்திக்குளம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன்(வயது56), எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த நாகூர்(வயது40) ஆகிய ஐந்து பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரொக்க பணம் ரூ.5,450 மற்றும் நோட்டு, வெள்ளை பேப்பர் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து காட்டன் சூதாட்டத்தின் முக்கிய பிரமுகர்கள் யார்? யார்? என விசாரணை மேற்கொண்டனர். பின்னர், 5 பேரையும் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் போலீசார் அனைவரையும் பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். 

    • குடியிருப்புகளில் தெருக்கள் முன்பு குளம்போல் தேங்கி உள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    • கழிவு நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக் குட்பட்ட 5-வது வார்டு பொன்னியம்மன் நகர், சி.ஆர்.எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரோடு கழிவுநீர் தேங்கி வீடுகளை சூழ்ந்து நிற்கிறது.

    இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். குடியிருப்புகளில் தெருக்கள் முன்பு குளம்போல் தேங்கி உள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கழிவு நீரை உடனடியாக அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் கவுன்சிலர் வடிவேல் தலைமையில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில ஈடுபட்டனர்.

    அவர்கள் நகராட்சி கமிஷனர் நாராயணனின் அலுவலக அறை முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களிடம் கமிஷனர் நாராயணன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் மீது பொதுமக்கள் சரமாரியாக குற்றம் சாட்டி முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களின் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் இல்லை என்றால் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறி அவர்கள் தெரிவித்தனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மழைநீர், கழிவு நீர் தேங்கி நிற்கும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மழை நீர் கால்வாய் அமைத்தும் இந்த பகுதியில் மழை நீர் செல்ல வில்லை என்று பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கழிவு நீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

    • முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமை தாங்கினர்
    • ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    பொன்னேரி:

    பால் விலை, சொத்து வரி, மின் கட்டண உயர்வை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் அதிமுக சார்பில் மீஞ்சூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் மற்றும் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் பட்டாபிராமன் தலைமை தலைமை தாங்கினர். அப்போது திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், முன்னாள் எம்எல்ஏ பொன் ராஜா, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மாவட்ட மாணவரனி செயலாளர் ராகேஷ், கவுன்சிலர்கள், பானுபிரசாத், சுமித்ரா குமார், செல்வழகி எர்ணாவூரான், கோளூர் கோதண்டம், மீஞ்சூர் மாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

    • தனசேகரோடு கடந்த சில நாட்களாக சுற்றிவந்த அவரது தங்கையின் கணவர் சீனிவாசன் தலைமறைவாக இருந்தார்.
    • மறுநாள் பகலில் வந்து கொலைக்கு பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த கல்லை எடுத்து கழுவி வேறு இடத்தில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டேன்.

    எண்ணூரை அடுத்த சின்ன எர்ணாவூர் 4-வது தெருவை சேர்ந்தவர் தனசேகர் (வயது48). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருவொற்றியூர் தொகுதி துணை செயலாளராக இருந்தார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தீபா மகனுடன் திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனசேகர் மட்டும் வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

    நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் தனசேகர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனசேகர் சாவில் சந்தேகம் இருப்பதாக விடுதலை சிறுத்தை கட்சியினரும் மாவட்ட செயலாளர் அன்பு செழியன் தலைமையில் திருவொற்றியூர் அம்பேத்கர் நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தனசேகரோடு கடந்த சில நாட்களாக சுற்றிவந்த அவரது தங்கையின் கணவர் சீனிவாசன் தலைமறைவாக இருந்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் பிரம்மானந்தம் தலைமையிலான போலீசார் மணலி புதுநகர் அருகே நடந்து சென்ற சீனிவாசனை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் தனசேகரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். அவர்போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    தனசேகரின் தங்கையான எனது மனைவி சின்னப் பொண்ணு குடும்பதகராறில் பிரிந்து சென்று போரூரில் வசித்து வருகிறார். அவரை என்னுடன் சேர்ந்து வாழ வைக்கும் படி தனசேகரிடம் கூறினேன். ஆனால் இதற்கு தனசேகர் எதிர்ப்பு தெரிவித்து சேர்த்து வைக்க மறுத்தார். இதனால் ஆத்திர மடைந்த நான் கடந்த 12-ந்தேதி வீட்டில் போதையில் தூங்கி கொண்டு இருந்த தனசேகரின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டேன்.

    பின்னர் மறுநாள் பகலில் வந்து கொலைக்கு பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த கல்லை எடுத்து கழுவி வேறு இடத்தில் போட்டு விட்டு தலைமறைவாகி விட்டேன்.

    இவ்வறு அவர் கூறி உள்ளார்.

    • சகோதரர்கள் இருவரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்ப முயன்ற 2பேரை அங்கிருந்த பொதுமக்கள் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்து மதுரவாயல் போலீசில் ஒப்படைத்தனர்.  

    விசாரணையில் அவர்கள் வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் அவனது 18வயதுக்கு உட்பட்ட தம்பி என்பது தெரிந்தது. சகோதரர்கள் இருவரும் சேர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×