என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கரணையில் பாலத்தின் தடுப்பில் கார் மோதி பெண் என்ஜினீயர் பலி
- பள்ளிகரணை குப்பைமேடு அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பில் வேகமாக மோதியது.
- காரின் கதவு திறந்து கொண்டதில் பின்னால் உட்கார்ந்திருந்த கிருத்திகா கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா(23). இவர் சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தன்னுடன் பணியாற்றும் அபிஷா(26), ஸ்ரீதர்(29), பங்கஜ்(18) ஆகியோருடன் சென்னையை சுற்றி பார்ப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றார். காரை ஸ்ரீதர் ஓட்டினார். காலை 7.45 மணியளவில் துரைப்பாக்கம்-பல்லாவரம் 200 அடி ரேடியல்சாலையில் பல்லாவரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். பள்ளிகரணை குப்பைமேடு அருகே வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பில் வேகமாக மோதியது. அப்போது காரின் கதவு திறந்து கொண்டதில் பின்னால் உட்கார்ந்திருந்த கிருத்திகா கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற மூன்று பேரும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருத்திகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






