என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பழவேற்காட்டில் மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்
- கடலில் சீற்றம் குறைந்து பழைய நிலை திரும்பி உள்ளது.
- மாண்டஸ் புயலுக்கு பிறகு ஒரு வாரத்துக்கு பின்னர் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டது. மணல்அரிப்பு, சாலை சேதம் காரணமாக கடந்த ஒருவாரமாக பழவேற்காடு மீன்வர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது கடலில் சீற்றம் குறைந்து பழைய நிலை திரும்பி உள்ளது. இதைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பின்னர் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் சென்றதால் மீனவர்களின் வலையில் அதிக அளவு மீன்கள் சிக்கியது. மத்தி,மடவை, இறால்,நண்டு, வஞ்சிரம், வாலை,உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் பிடிபட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மீன்கள் வரத்து அதிகமானதால் பழவேற்காடு மார்க்கெட்டில் மீன் விற்பனை மீண்டும் களைகட்டியது. மீன் விலையும் வழக்கத்தைவிட ரூ.200-வரை குறைந்து இருந்ததால் பொதுமக்கள், மீன்வியாபாரிகள் கூட்டம் அலை மோதியது.
இறால் அதிக அளவு பிடிபட்டதால் கிலோ ரூ.500வரை விற்கப்பட்டது. ரூ.200 ஆக குறைந்தது. இதனால் பொதுமக்கள் போட்டிபோட்டி தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச் சென்றனர்.
பழவேற்காடு மீன்சந்தையில் மீன்விலை (கிலோவில்) விபரம் வருமாறு:-
இறால்-ரூ.200, நண்டு-ரூ.300, வஞ்சிரம்-ரூ.700, மத்தி-ரூ.130, கானகத்தை-ரூ.300, மடவை-ரூ.250, நெத்திலி-ரூ.250.
இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, மாண்டஸ் புயலுக்கு பிறகு ஒரு வாரத்துக்கு பின்னர் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதிக அளவு மீன்கள் சிக்கி உள்ளது. மீன் விலையும் குறைந்து உள்ளதால் சந்தையில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. மீன்விற்பனை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது என்றனர்.
இதற்கிடையே கோரைகுப்பம் மீனவ கிராமத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார், அத்திப்பட்டு அன்பாலயா சிவக்குமார் ஆகியோர் வழங்கினர்.






