என் மலர்
திருவள்ளூர்
- அரக்கோணம் நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடந்துவருகிறது.
- கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
அரக்கோணம்:
நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த முனுசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது.
- ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி நேற்று காலை மாநகர பஸ்(தடம் எண் 61-கே) வந்து கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 80 பேர் பயணம் செய்தனர். ஆவடி டேங்க் பேக்டரி செல்லும் சாலையில் சிக்னல் அருகே வரும்போது திடீரென சாலையின் குறுக்கே எச்.வி.எப். நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதற்காக டிராக்டர் ஒன்று வந்தது.
அந்த டிராக்டரை ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். அதில் சுமார் 4 தொழிலாளிகள் அமர்ந்து இருந்தனர்.
அப்போது மாநகர பஸ் மீது டிராக்டர் மோதியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. முன்பகுதியும் சேதம் அடைந்தது. விபத்தில் டிராக்டரை ஓட்டி வந்த முனுசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் வந்த பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- 167 மனுக்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் சரிபார்த்து தீர்வு வழங்கப்பட்டது.
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சியில் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஹரிகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைத்தார். இதில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,சேர்த்தல்,புதிய கார்டு விண்ணப்பித்தல்,குடும்ப அட்டையுடன் ஆதார் எண் இணைத்தல்,தொலைபேசி எண் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்து ஏராளமானோர் மனு அளித்தனர்.
167 மனுக்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் சரிபார்த்து தீர்வு வழங்கப்பட்டது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் ரமணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைவாணன், ஊராட்சி செயலர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அடுத்த வெங்கல் அருகே உள்ள வெள்ளியூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் தசரத நாயுடு(72). விவசாயி. இவரது மனைவி விஜயா. இவர்களது மகன், மகள் திருமணமாகி வெளிநாடுகளில் வசித்து வருகிறார்கள்.
வயதான தசரதநாயுடு-விஜயா தம்பதி மட்டும் விட்டில் தனியாக வசித்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள அறையில் தூங்கினர். நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் வீட்டின் கதவு பூட்டை உடைத்து புகுந்து, பீரோவில் இருந்த ரூ.51 ஆயிரத்து 500 ரொக்கம், 10 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இன்று காலை தசரத நாயுடு அறையில் இருந்து வெளியே வந்த பின்னர் தான் வீட்டில் கொள்ளை நடந்து இருப்பது தெரிந்தது. இதுகுறித்து வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர், ஏட்டுகள் தலைமையில் தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபடும் பெண் குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூனிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணி(வயது 70). சில நாட்களுக்கு முன்பு இவரிடம் டிப்டாப் இளம்பெண் ஒருவர் பேச்சு கொடுத்து முதியோர் ஓய்வு தொகை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்.
அப்போது மூதாட்டி ராணியிடம் அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை ஒரு முறை போட்டு பார்த்து கொடுத்து விடுவதாக கூறி நகையை சுருட்டிக்கொண்டு சென்று திருடி சென்று விட்டார்.
இதேபோல் திருவள்ளூர் அருகே உள்ள பொன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சாந்தி, பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த எல்லம்மாள் (60) ஆகியோரிடமும் இதேபோல் நகை பறிக்கப்பட்டது.
நூதன முறையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபடும் டிப்-டாப் இளம்பெண் குறித்து ஊத்துக்கோட்டை மற்றும் பென்னாலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை, ஏட்டுகள் ராவ்பகதூர், செல்வராஜ், லோகநாதன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை போலீசார் நகை பறிப்பில் ஈடுபடும் பெண் குறித்து தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இதற்கிடையே ஊத்துக்கோட்டை அருகே உள்ள சூளைமேனி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிய இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அவர் அம்பத்தூர் அருகே உள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி ஷீபா புஷ்பராணி (35) என்பதும் அவர் மூதாட்டிகளை குறிவைத்து முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக பேச்சு கொடுத்து நூதன முறையில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஷீபா புஷ்பராணியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஷீபா புஷ்ப ராணியை போலீசார் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
- மின்வாரிய அலுவலகத்தின் ஆவணங்கள் இருந்த அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேவந்தது.
- செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
செங்குன்றம், காமராஜர் நகர், பைபாஸ் சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. நேற்று இரவு பணி முடிந்ததும் வழக்கம்போல் ஊழியர்கள் அலுவலகத்தை மூடிச்சென்றனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் மின்வாரிய அலுவலகத்தின் ஆவணங்கள் இருந்த அறையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேவந்தது. சிறிது நேரத்தில் தீ மள, மளவென அறைமுழுவதும் பற்றி எரிந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக செங்குன்றம, மாதவரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் அறையில் இருந்த கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. மற்ற அறைகளுக்கு தீ பரவாததால் பெரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.
- அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.
மேலும் நீர் நிலைகள், குடிநீர் வசதி, அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், மக்கும் குப்பை-மக்கா குப்பை, கழிவறை வசதிகள், உறிஞ்சி குழிகள், ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகள், குடிநீர் ஆதாரங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியின்போது, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி திட்ட அலுவலர்கள் முரளி, அனுராதா, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிர்தமன்னன், ஊராட்சிமன்ற தலைவர் செல்வி பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலக செயற்பொறியாளர்கள் பிரபாவதி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
- மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
- பிரச்சாரத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மனிதநேய மார்க்கம் இஸ்லாம் என்ற தலைப்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் கழக கொடியேற்றுதல் நிகழ்ச்சி பொன்னேரி நகர தலைவர் ஹபீஸுர் ரஹமான் தலைமையில் நடைப்பெற்றது.
பொன்னேரி மசூதி தெரு புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் குணங்குடி மொய்தீன், மாவட்டத் தலைவர் அப்துல் காதர், முன்னாள் மாவட்ட தலைவர் உசேன் அலி, மாவட்ட செயலாளர் யூசுப் அலி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தாயை தாக்கிய தந்தையை தடுத்தபோது தவறி விழுந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம், குளதெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன் (வயது70) விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவரது மனைவி கஸ்தூரி (வயது65), மகன் ராஜேஷ் (வயது26) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
ராஜேஷ் டிராக்டர் டிரைவராகவும், விவசாயக் கூலித் தொழிலாளியாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சீனிவாசன் குடிபோதையில் தனது மனைவி கஸ்தூரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினாராம். அப்பொழுது வீட்டிற்கு வந்த ராஜேஷ் இதனைக் கண்டு தனது தாயிடம் ஏன்? சண்டை போடுகிறீர்கள் என்று கூறி தனது தந்தை சீனிவாசனை தடுத்து தள்ளினாராம். அப்பொழுது நிலை தடுமாறி சீனிவாசன் கீழே விழுந்தாராம். இதில் தலையின் பின்பக்கம் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மஞ்சங்காரணியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று சீனிவாசன் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்து கொண்டு வந்தனர்.மேலும், இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். தாயை தாக்கிய தந்தையை தடுத்தபோது தவறி விழுந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.
- திங்கட்கிழமை தேரோட்டம் நடக்கிறது.
திருவள்ளூர் வைத்திய வீரராகவப்பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால் தை அமாவாசையன்று பக்தர்கள் இங்கு வந்து கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நேற்று மாலை முதலே திருவள்ளூர் வந்தனர்.
இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் மூலவர் வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
தை அமாவாசையையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. 10- வது நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.
- கோயம்பேடு பஸ் நிலையத்தில் 3 சிறுவர்கள் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
போரூர்:
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு 11 மணி அளவில் சிறுவர்கள் 3 பேர் அழுதுகொண்டே சுற்றி திரிவதாக பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் திருச்சி செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது நண்பர்களான 3 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்ததால் 3 பேரும் வீட்டை விட்டு வெளியேறி அரசு பஸ் மூலம் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு புனரமைத்தல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டத்தின் கீழ் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கங்கள் மற்றும் 336 ஏரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஆட்டரம்பாக்கம், கோடுவெளி, கோட்டையூர், கடப்பேரி ஏரிகளில் பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை ஜல்சக்தி அமைச்சகத்தின் ஆணையர் கோயல் தலைமையில் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தது. பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முரளிதரன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் சத்யநாராயணா, உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






