search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தை அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
    X

    தை அமாவாசை: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

    • வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர்.
    • திங்கட்கிழமை தேரோட்டம் நடக்கிறது.

    திருவள்ளூர் வைத்திய வீரராகவப்பெருமாள் கோவிலில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால் தை அமாவாசையன்று பக்தர்கள் இங்கு வந்து கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் மற்றும் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நேற்று மாலை முதலே திருவள்ளூர் வந்தனர்.

    இன்று அதிகாலை முதலே பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் மூலவர் வீரராகவர் பெருமாளை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

    தை அமாவாசையையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மண்டபத்தில் ரத்னாங்கி சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்ததால், திருவள்ளூர் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பிரம்மோற்சவத்தின் 7-ம் நாளான நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை தேரோட்டம் நடக்கிறது. 10- வது நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு வெட்டிவோ் சப்பரத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்க உள்ளாா்.

    Next Story
    ×