என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம். எல். ஏ. பள்ளி மாணவ- மாணவிகள் 500 பேருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
    • 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் மண்டல குழு தலைவர் தி. மு தனியரசு ஏற்பாட்டில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம். எல். ஏ. 500 பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் 1000 பேருக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார்.

    திருவொற்றியூர் எம். எல். ஏ. கே. பி. சங்கர் சத்திய மூர்த்தி நகர்,விம்கோ நகர், கே. வி. கே. குப்பம் பகுதியில் பிரியாணி, அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் ராமநாதன், கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் வை. மு. அருள்தாசன் தலைமையில் எர்ணாவூர் நேதாஜி நகர், அன்னை சிவகாமி நகர் பகுதியில் கொடியேற்றி இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தியாகராஜன், கவுன்சிலர் தம்பியா உட்பட பலர் கலந்து கொண்டனர். மணலியில் நடைபெற்ற விழாவில் மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பொது மக்களுக்கு உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், நிகழ்ச்சியில் முத்துசாமி, தினகரன், ரமேஷ் குமார், நாகலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடையில் உள்ள நகையை சரிபார்த்தபோது 3 பவுன் நகை மாயமாகி இருந்தது.
    • இளம்பெண் நூதன முறையில் நகையை திருடி சென்று உள்ளார்.

    பொன்னேரி:

    பொன்னேரி தேரடி தெருவில் பிரபல நகைக்கடை உள்ளது. இங்கு காலை இளம்பெண் ஒருவர் நகை வாங்குவது போல் வந்தார்.

    நீண்ட நேரம் நகையை பார்த்து கொண்டு இருந்த அவர் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள டிசைன்கள் எதுவும் பிடிக்கவில்லை என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் கடையில் உள்ள நகையை சரிபார்த்தபோது 3 பவுன் நகை மாயமாகி இருந்தது.

    இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நகை வாங்குவதுபோல் நடித்த இளம்பெண் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி ஒரு நகையை தனது சேலையில் மறைத்து திருடி செல்வது பதிவாகி இருந்தது. காலை நேரத்தில் கடையில் கூட்டம் இல்லை. எனினும் இளம்பெண் நூதன முறையில் நகையை திருடி சென்று உள்ளார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து நகை திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
    • 32 கிராம் தங்கம், 3 கிலோ 430 கிராம் வெள்ளி யை காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரிகள் சோ.செந்தில்குமார், மாதவன் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.

    இதில், ரூ.54 லட்சத்து 40 ஆயிரத்து 097 ரொக்கம், 32 கிராம் தங்கம், 3 கிலோ 430 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள்  காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடப்பதால் இந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை சுற்றி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
    • அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும்.

    கடம்பத்தூர்:

    பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் பூட்டி கிடக்கும் பூங்காவை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்டது பாப்பரம்பாக்கம் ஊராட்சி. பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டது. இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த பூங்காவில் சிறுவர், சிறுமியர்கள் விளையாட இரும்பினாலான ஊஞ்சல், சறுக்கு போன்ற பல்வேறு உபகரணங்களும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய தனியாக நவீன உடற்பயிற்சி எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது.

    இது கடந்த ஓராண்டுக்கும் மேலாக பூட்டியே இருப்பதால் அனைத்து உபகரணங்களும் துருப்பிடித்து பாழாகி வீணாகி போகும் நிலை உள்ளது.

    ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடப்பதால் இந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை சுற்றி முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே அரசு அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் பயன்பாடு இல்லாமல் பூட்டி கிடக்கும் இந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் பூங்காவை உடனடியாக சீரமைத்து வாலிபர்கள், முதியவர்கள், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.
    • கீழானூர் பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்கள் நுழைவதை தவிர்ப்பதற்காக எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைக்கப்படுகிறது. இது 133 கி.மீ. நீளத்தில் அமைய உள்ளது.

    எண்ணூர் துறைமுகத்தில் இருந்து திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பு வரை 200 அடி சாலை அமைய இருக்கிறது.

    இதில் ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் திருவள்ளூர் அடுத்த கீழானூர் கிராமத்தில் சாலையில் தடுப்பு அமைத்து சாலையை உயர்த்தி பணி நடைபெற்று வருகிறது. இதனால் கீழானூர் பகுதி மக்கள் விவசாய நிலத்திற்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

    இதையடுத்து விவசாய நிலத்துக்கும், குடியிருப்பு பகுதிக்கும் செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் பணி நடந்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கீழானூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு செல்ல புதிதாக அமைக்கும் சாலையில் வழி கேட்டு திருவள்ளூர்- செங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அரிசி கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேசன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு கைது நடவடிக்கைகளை தொடர்ந்தாலும் ரேசன் அரிசி கடத்தல் நீடித்து வருகிறது. வாகனங்கள் மற்றும் ரெயில்களில் அரிசி கடத்தலில் கும்பல் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்துவதாக ஊத்துக்கோட்டை துணை போலீஸ் கண்காணிப்பாளர் கணேஷ் குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் படி சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் ஊத்துக்கோட்டை 4 ரோடுகள் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஊத்துக்கோட்டை அருகே உள்ள அந்தேரி தெலுங்கு காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கஜேந்திரனை கைது செய்தனர். ஆந்திராவுக்கு ரேசன் அரிசியை கடத்தி சென்றதாக அவர் தெரிவித்து உள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனவேதனை அடைந்த ரபி வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லீம் நகரை சேர்ந்தவர் ரபி (வயது 23). தொழிலாளி. இவரது மனைவி ஆயிஷா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த ரபி வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • காக்களூர் ஏரிக்கு செல்லும் நீர் போக்கு கால்வாயில் பன்றிகள் மேய்ந்து கொண்டு இருந்தார்.
    • மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், அம்பேத்கர் தெரு ஏரிக்கரையை சேர்ந்தவர் சந்திரன் (வயது38). இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் காக்களூர் ஏரிக்கு செல்லும் நீர் போக்கு கால்வாயில் பன்றிகள் மேய்ந்து கொண்டு இருந்தார். அப்போது இதனை அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் மீது ஏறினார். இதில் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி சந்திரன் மீது உரசியது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • லாரிகளில் இருந்த உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கட கிருஷ்ணன். எம் சான்ட் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 5 லாரிகளை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் லாரிகளில் இருந்த உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து வெங்கட கிருஷ்ணன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பரமசிவன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் லாரிகளில் திருடியது ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி(25), நரேஷ் குமார்(20), சதீஷ்(22) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    • கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் சரசா புகார் செய்தார்.
    • வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் மூதாட்டி சரசா(வயது67).

    இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். ஐந்து மகள்கள், ஒரு மகன் என ஆறு பிள்ளைகளுக்கும் திருமணம் நடந்து அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மூதாட்டி சரசா மட்டும் தனது கணவர் கட்டிய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிக்கொண்டு தனது பேத்தியை காண சென்னைக்கு சென்று இருந்தார். இன்று மாலை வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

    மர்ம நபர்கள் சரசாவின் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரொக்கப்பணம் ரூ.30,000, ஒரு சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு பீரோவில் இருந்த பொருட்களை அள்ளி கீழே வீசிவிட்டு சென்றதைக் கண்டார்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் சரசா புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது
    • பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் ஊராட்சி இந்துஜா நகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து எச்எப்சி நண்பர்கள் குழு நடத்தும் ஐந்து வீரர்கள் பங்கு கொள்ளும் ஒரு நாள் கால்பந்து போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியினை எச்எப்சி குழுவின் நண்பர்கள் தலைமை வகித்து நடத்தினர். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து13 போட்டியாளர்கள் கொண்ட குழுவினர் பங்கு கொண்டனர். ஆட்டத்தின் முடிவில் டொகோமோ குழுவினர் வெற்றி பெற்று வின்னர் ஆகினர். ரணராக மேலூர் செலக்ட் குழுவினர் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றனர்.

    இவர்களுக்கு பரிசு தொகையாக முதல் பரிசு அரை சவரன் தங்கநாணயம். இரண்டாம்பரிசு கால் சவரன் தங்க நாணயமும் மற்றும் கோப்பைகளையும் பிஎஸ்பி கட்சியின் பொறுப்பாளர்களான பொன்னேரி சட்டமன்ற தொகுதி தலைவர் நாலூர் மா. ஏசுதாஸ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஜோதிராமலிங்கம், தொகுதி அமைப்பாளர் அமரன். சுரேஷ், தொகுதி இளைஞரணி அமைப்பாளர் சத்யா, மீஞ்சூர் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் காமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.

    • உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது.
    • பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சிமன்ற கூட்டம் மன்றவளாகத்தில் இன்று நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கலாதரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் மன்ற பொருட்களை இளநிலை உதவியாளர் முருகவேல் வாசித்தார். அப்பொழுது டெங்கு காய்ச்சலுக்காக மருந்து அடித்ததாக சுமார் ரூ.2 லட்சம் செலவு செய்ததாக கணக்கு கூறினார்களாம். மேலும், மழை நீர் கால்வாய்க்கு மூடி அமைப்பதில் பல்வேறு கணக்கு குளறுபடி இருப்பதாக மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டி கூச்சல்-குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும், சுப்ரமணிய நகர் பகுதியில் சாலை அமைக்காமலேயே பில் போட்டதாக பேரூராட்சி மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

    மேலும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக பதவியேற்றபோது பேரூராட்சி மன்றத்தின் கடன் ரூபாய் ஒரு கோடி என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது மூன்று கோடி கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பேரூராட்சியில் உள்ள பல்வேறு பகுதிக்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. அப்படி இருக்க கடன் ஏன்? கூடியது. என்று காரசாரமாக பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேற்கண்ட குற்றச்சாட்டுக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், செயல் அலுவலரும் உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொன்னரசி, சுஜாதா, சுகன்யா, அருணா, சதீஷ், முனுசாமி, குமார், ரகுமான்கான் உள்ளிட்டோர் கூட்டத்தை புறக்கணித்து மன்றவளாகத்தை விட்டு வெளியேறி வெளிநடப்பில் ஈடுபட்டனர். மேலும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுகுமார் மன்ற பொருட்களை வாசிக்கும் முன்னரே கூட்டத்தை புறக்கணித்து வெளிநாட்டில் ஈடுபட்டார். இதனால் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களது குறைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி இயக்குனர் மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.

    ×