என் மலர்
திருவள்ளூர்
- பொன்னேரியில் நகை கடையில் 33 வயது மதிக்கதக்க இளம்பெண் ஒருவர் நூதன முறையில் நகையை திருடிச் சென்றார்.
- கடை கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியில், ஹரிஹரன் பஜார் தெருவில் பிரபல நகை கடை ஒன்று உள்ளது. அந்த கடையை ராகவன் (வயது 24) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் 33 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தங்க செயின் வாங்க வந்ததாக கூறினார். கடை ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு தங்க செயின் மாடல்களை எடுத்து காண்பித்துக்கொண்டிருந்தனர். நீண்ட நேரமாக நகையை தேர்வு செய்வது போல் நடித்து கடை ஊழியர் கவனத்தை திசைதிருப்பி ஒரு தங்க சங்கிலியை எடுத்து மடியில் போட்டு விட்டு பின்னர் எனக்கு நகை பிடிக்க வில்லை என கூறி திருடிய நகையுடன் தப்பிச் சென்றார்.
பின்னர் ஊழியர்கள் நகைகளை சரி பார்க்கும் போது 26 கிராம் தங்க சங்கிலி காணவில்லை. இதுகுறித்து ராகவன் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- பென்னலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் டி.41-ஏ அரசு பஸ் நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
- மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆவடி:
திருவள்ளூர் அடுத்த பென்னலூர்பேட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி தடம் எண் டி.41-ஏ அரசு பஸ் நேற்று காலை திருவள்ளூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது புல்லரம்பாக்கம் பஜாரில் பஸ் வந்து நின்றபோது மர்ம நபர்கள் பஸ்ஸின் பின்பக்க கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுதொடர்பாக பஸ் கண்டக்டர் ஹேமநாதன் (வயது 29) புல்லரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆட்டோவை திருட முயன்ற வழக்கில் யுவராஜ் என்ற டேனியை போலீசார் கைது செய்தனர்.
- திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(வயது36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டு வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்பொழுது நாய் கத்தியதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தி இருந்த ஆட்டோவை தள்ளிக் கொண்டு சென்றதைப் பார்த்து திருடன்! திருடன்! என்று கூச்சலிட்டார். இதனால் அந்த மர்ம நபர் ஆட்டோவை நடுரோட்டில் விட்டுவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து குறித்து வினோத் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் அந்த நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆட்டோவை திருட வந்தவர் மாகரல் கிராமம், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்ற டேனி(வயது28) என்பது தெரியவந்தது. எனவே, போலீசார் அந்த வாலிபரை கைது செய்து வெங்கல் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் யுவராஜ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. எனவே,அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
நேற்று இரவு மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் குற்றவாளியை போலீசார் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை அருகே சென்றபோது யுவராஜ் தான் இரண்டு உடைந்த பிளேடுகளை விழுங்கி விட்டதாக போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் 15-வது வார்டு காளிகாம்பாள் தெருவில் பாதை நடுவே மின்கம்பம் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைத்து உள்ளது.
இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும்போது சாலை நடுவே உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
எனவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- ரூ. 2 லட்சம் செலவில் 60 மீட்டர் நீளம் 5.5 இஞ்ச் அகலமுள்ள வடக்கயிறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.
திருவொற்றியூர்:
திருவொற்றியூரில் உள்ள வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜசுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடை பெறுகிறது. 47 அடி உயர மரத்தேரில் சந்திரசேகரசுவாமி திரிபுர சுந்தரியுடன் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தேரோட்டத்தின் போது பயன்படுத்தும் தேங்காய் நாரிலான வடக்கயிறு 10ஆண்டுகள் ஆகிவிட்டதால் பழுதாகிவிட்டது. இதையடுத்து சமூக சேவகர் பக்தர் உத்தண்டராமன் ஏற்பாட்டில் நாகர்கோவிலில் இருந்து ரூ. 2 லட்சம் செலவில் 60 மீட்டர் நீளம் 5.5 இஞ்ச் அகலமுள்ள வடக்கயிறு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த புதிய வடக்கயிறு கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இன்று மாலை 5 மணி யளவில் இதற்கு சிறப்புபூஜை செய்யப்பட்டு தேரில் பொறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள். பக்தர்களுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- பணியாளர்களுக்கு இரவு நேர பணியின்போது பாதுகாப்புக்காக ஒளிரும் மேலாடைகள் வழங்கப்பட்டுள்ளது.
- காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட் சாலை பகுதிகளில் பகல் நேரங்களில் தூய்மைப்பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதனால் புதிய முயற்சியாக தற்போது இரவுநேரத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உத்தரவுப்படி 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமும் 1 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. பணியாளர்களுக்கு இரவு நேர பணியின்போது பாதுகாப்புக்காக ஒளிரும் மேலாடைகள் வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் நாள்தோறும் திருவள்ளூரில் உள்ள முக்கிய போக்குவரத்து நெரிசல் காணப்படும் இடங்களில் இரவு நேரங்களில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் செல்கின்றன. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- உடல்நிலை ஓரளவு சீரானதால் சிறுமி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார்.
- கடந்த சில நாட்களாக சிறுமிக்கு மீண்டும் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது.
திருவள்ளூர்:
பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பது வழக்கம். கடந்த 4 மாதத்துக்கு முன்பு சிறுமி மாந்தோப்பிற்குள் மாடு மேய்க்க சென்றபோது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சம்பவம் நடந்த மறுநாள் வீட்டில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே உடல்நிலை ஓரளவு சீரானதால் அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு மீண்டும் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- எர்ணாவூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பகுதி குழு உறுப்பினர் வெங்கட்ஐயா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நாமம் போட்டு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
திருவொற்றியூர்:
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் எர்ணாவூரில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பகுதி குழு உறுப்பினர் வெங்கட்ஐயா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நாமம் போட்டு ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதில் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன், மாதர் சங்கமாவட்ட செயலாளர் எஸ். பாக்கியம், பகுதி செயலாளர் எஸ். கதிர்வேல் கிளைச் செயலாளர் ஆரோக்கியசாமி ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த அதே வாலிபர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளரையும் மிரட்டி தப்பி சென்று விட்டனர்.
- மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பகுதியில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு இரவு பெட்ரோல் பங்க்கை மூடிய பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் தங்களது வாகனத்துக்கு பெட்ரோல் போடும்படி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்த ஊழியர்களை தாக்கி சென்றனர். சிறிது நேரம் கழித்து கூட்டாளிகளுடன் மீண்டும் வந்த அதே வாலிபர்கள் பெட்ரோல் பங்க் உரிமையாளரையும் மிரட்டி தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆயில் லோடுடன் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
- தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர்:
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது35).
சென்னையில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னர் மதுரவாயல் பை பாஸ் சாலையில் ஏற முயன்றார்.
அப்போது பின்னால் ஆயில் லோடுடன் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் செந்திலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மணலியை சேர்ந்த சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்
- வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது62) ஆவார். கூலி தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்நிலையில், நேற்று ஏற்பட்ட வயிற்று வலியால் மனம் உடைந்த அவர் பூச்சி மருந்து வாங்கி வந்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அலறி துடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று கஜேந்திரன் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கஜேந்திரனின் மகன் குணசேகரன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
- புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது.
- இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது.
சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக அம்ரீஸ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது. சிறை பாதுகாப்பினை மேம்படுத்திட 5 நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது. டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி முடித்த பெண் சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஊடுகதிர் அலகிடும் எந்திரம் ரூ.180 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு இயங்கி வருகிறது. ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த 20 சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மூலமாக வாய்ப்பாட்டு பயிற்சி மற்றும் இதர இசை கருவிகள் வாசிப்பு பயிற்சி தொடங்கப்பட்டது.
கனரக தொழில்கூட சலவை எந்திரம் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்கென வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மூலிகை நர்சரியும் தொடங்கப்பட்டுள்ளது.






