என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலித் தொழிலாளி பூச்சி மருந்து குடித்து பலியான சோகம்
- சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்
- வெங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், காரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது62) ஆவார். கூலி தொழிலாளியான இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்நிலையில், நேற்று ஏற்பட்ட வயிற்று வலியால் மனம் உடைந்த அவர் பூச்சி மருந்து வாங்கி வந்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அலறி துடித்து மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி இன்று கஜேந்திரன் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கல் காவல் நிலையத்தில் கஜேந்திரனின் மகன் குணசேகரன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.






