

திருவள்ளூர்:
பூண்டி அருகே உள்ள மோவூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பது வழக்கம். கடந்த 4 மாதத்துக்கு முன்பு சிறுமி மாந்தோப்பிற்குள் மாடு மேய்க்க சென்றபோது, அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த சிறுமி சம்பவம் நடந்த மறுநாள் வீட்டில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தததாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே உடல்நிலை ஓரளவு சீரானதால் அந்த சிறுமி ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு மீண்டும் உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.