என் மலர்
திருவள்ளூர்
- பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது.
- விபத்தில் மாணவன் ஹரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
திருத்தணி:
பள்ளிப்பட்டு தாலுகா கர்லம்பாக்கம் ஊராட்சி தாங்கல் காலனியை சேர்ந்தவர் ஹரி (வயது 26). இவர் திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடியில் அமைந்துள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார்.
பஸ் கனகம்மாசத்திரம் அருகே உள்ள பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இந்த விபத்தில் மாணவன் ஹரிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்ட சக பயணியர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதேபோல். திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் (51). இவர் நேற்று முன்தினம் மாலை அருங்குளம் பஸ் நிலையத்தில் இருந்து திருத்தணிக்கு செல்லும் தனியார் மினி பஸ்சில் ஏற முயன்ற போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், வலது கால் மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த பாண்டியனை சக பயணிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
- அடுத்த மாதம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்கும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த இடத்தை திருவள்ளூர் தொகுதி எம். எல். ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.
அதன்படி புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.33 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரே நேரத் தில் 56 பஸ்கள் நிறுத்தம் செய்யவும், நகரப் பேருந்துகள் வந்து செல்லவும் முடியும். மேலும் 103 வணிக வளாகம், முதல் தளத்தில் 93 கடைகளும் இடம் பெற உள்ளன.
மேலும், குடிநீர் வசதி, கழிப்பறைகள், இரு சக்கர வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைய இருக்கிறது. இதற்கான ஒப்பந்தப் பணி ஒரு வாரத்தில் நடைபெறும்.
அடுத்த மாதம் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் தொடங்கும். இதையடுத்து புறவழிச்சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொ டங்க நடவடிக்கை எடுக்கப் படும்.
இன்னும் 10 ஆண்டுகளில் பூந்தமல்லி வரை வந்துள்ள மெட்ரோ ரெயில் திட்டம் திருவள்ளூர் வரை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் மதியழகன், நகர்மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
- கோவிலை ரூ.1.25 கோடி செலவில் புதுப்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
- விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலை ரூ.1.25 கோடி செலவில் புதுப்பித்து கடந்த ஆகஸ்ட் மாதம் மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இந்நிலையில், இக்கோவிலுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு பின்னர் செவ்வாய்க்கிழமை மற்றும் விடுமுறை நாட்கள் மற்றும் கிருத்திகை-சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், இன்று மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இவருடன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார், சோழவரம் வடக்கு மண்டல் பொதுச் செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி ஏதும் வேண்டாம் எனக்கூறி விட்டு மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
- திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது.
- தினமும் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த, 25-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று யாளி வாகனத்தில், ஆறுமுக சுவாமி கோவிலுக்கு உற்சவர் சென்றடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று 10-வது நாள் விழாவாக முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. அ காலை 4.30 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்தி பரவியது.
- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை.
பொன்னேரி:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வதந்தி பரவியது. இதையடுத்து இதுபோன்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்குப்படும் என்று தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் பொன்னேரியில் வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தனியார் தொழிற்சாலை உரிமையாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ்சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெற்ற மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்று.மாநிலத்தில் உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீதம் திருவள்ளூர் மாவட்டத்தில் வருகிறது.
கடந்த 2 நாட்களாக பரவிவரும் வதந்தி வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளாது. தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக 180 தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டத்தில் மொத்தம் 2.5லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
வடமாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை, பாதிப்புகள் ஏற்பட்டால் திருவள்ளூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 7626 -ல் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப்பில் புகார்களுக்கு 9444317862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாதுகாப்புக்காக தமிழ்நாடு போலீஸ் எப்போதும் இருக்கும்.
- வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்தி என்பதை புரிந்து கொண்டோம் என்றனர்.
அம்பத்தூர்:
வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக பாடியில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அருகே விழிப்புணர்வு நிகழ்ச்சி கொரட்டூர் போலீஸ் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் சுற்றி உள்ள பகுதிகளில் பணிசெய்து வரும் சுமார் 500 வடமாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பரவி வரும் வதந்தி குறித்து பேசினர். அப்போது தொழிலாளர்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் கூறப்பட்டது.
இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசும்போது, 'தற்போது பரவி வரும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். பாதுகாப்புக்காக தமிழ்நாடு போலீஸ் எப்போதும் இருக்கும். உங்களுக்கு அனைத்து பாதுகாப்பையும் போலீசார் வழங்குவார்கள் என்று இந்தியில் தெரிவித்தார்.
இதனை புரிந்து கொண்ட வடமாநில தொழிலாளர்கள், தமிழ்நாடு தான் எங்களுக்கு பாதுகாப்பான இடம், நாங்கள் இங்கே மகிழ்ச்சியாக பணிபுரிகிறோம், எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது வதந்தி என்பதை புரிந்து கொண்டோம் என்றனர்.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகமாக ஹேப்பி தமிழ்நாடு... ஹேப்பி தமிழ்நாடு.. என்று குரல் எழுப்பினர்.
+2
- கடந்த மாதம் 28-ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள தமிழர் காலனியில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று உற்சவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.
அந்த வகையில், கடந்த மாதம் 28-ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு காப்புக் கட்டிக் கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறுவாபுரி கோவிலுக்கு அலகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும், பால்குடங்களை சுமந்து கொண்டும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.
மதியம் ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமிகள் ஜி.மகேந்திரன், இ.ரவி தலைமையில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
- மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
- மாத வரம்பு ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த வட சென்னை அனல் மின் நிலையம் நிலை 2ல் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பெயர் பலகை திறப்பு விழா, தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இதில் நீண்ட நாள் கோரிக்கைகளான மாத வரம்பு ஊதியத்தை உயர்த்தி தரக்கோரியும் வாகனத்திற்கான தின வாடகையை உயர்த்தி தரக்கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டது. விழாவில் கௌரவத் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் திவாகர், செயலாளர் பிரபாகரன், துணை செயலாளர்கள் போஸ் குமார், ராம் முகேஷ், பொருளாளர் விமல், துணை பொருளாளர் மோகன் மற்றும் ஆலோசகர்கள், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
- கட்டிடத்தில் 4-வது மாடியில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் உள்ள தேன்கூட்டை தகுந்த பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் ஜெ.என் சாலையில் அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை உள்ளது.
இங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு கட்டிடத்தில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தக் கட்டிடத்தில் 4-வது மாடியில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுவை சிகிச்சை பகுதியில் ஜன்னல் அருகே பெரிய தேன்கூடு உள்ளது.
இதனால் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை பெறும் பெற்றோர்கள், சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையில் உள்ள தேன்கூட்டை தகுந்த பாதுகாப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும்.
- பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.
பொன்னேரி:
பொன்னேரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பல மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றன.
இதனால் விபத்து உயிர் இழப்பு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அவதிப்பட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் சாலை ஓர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சாலையில் குறிக்கப்பட்ட அளவிற்கு கயிறுகள் கட்டி அளவீடு செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும் எனவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போலீசார் வாகன நெரிசலை சரிபடுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன எனவும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அனுமதி பெற்று ஒரு நாள் மட்டும் வைத்துக் கொள்ளவும் மீறினால் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
பொன்னேரி தேரடி தெருவில் கடைகளில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அபராததொகை மற்றும் கடைகள் அகற்றப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு மீறினால் நகராட்சி நிர்வாகம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பஸ் வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு தினமும் 180 உள்ளூர் மின்சார ரெயில்கள், 22 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து செல்கின்றன. திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் வேலைகள் மற்றும் அன்றாட பணிகளுக்கு செல்ல ரெயில்களையே நம்பி உள்ளனர்.
தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தை பயன்படுத்துகிறார்கள். திருவள்ளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு செல்ல ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையே பயன்படுத்த வேண்டி உள்ளது. திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கும், திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் ஆட்டோக்கள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
ரெயில் நிலையத்துக்கு திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்துக்கு செய்ய 2 பஸ்களில் பயணம் செல்ல வேண்டி உள்ளது. ரெயில் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கும், பின்னர் அங்கிருந்து பஸ் நிலையத்துக்கும் தனித்தனி பஸ்களில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
மேலும் செங்குன்றம், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து டவுன் பஸ்களும் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கே செல்கின்றன. இதனால் அங்கிருந்து ரெயில் நிலையம் செல்ல மேலும் 2 பஸ்களுக்கு மாற வேண்டி உள்ளது. எனவே இந்த அனைத்து டவுன் பஸ்களையும் திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு நேரடியாக இயக்கினால் பயணிகள் சந்திக்கும் சிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மேலும் ரெயில் நிலையத்தின் அருகே உள்ள பஸ் நிலையத்தையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். திருத்தணி, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் இருந்து வரும் புறநகர் பஸ்களை கூட திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு பதிலாக திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு இ யக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.
எனவே திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்குவார்களா என்று பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இதற்கிடையே இந்த பஸ் வழித்தடத்தை மாற்றுவதற்கான சாத்தியக்கூ றுகளை ஆராய்வதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் ரெயில் நிலையம் டவுன் பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்களை திருவள்ளூர் ரெயில் நிலையத்துக்கு இயக்கும் பட்சத்தில் அங்கு போக்குவரத்து நெரிசல் மோசமடையும் என்றும் அதிகாரிகள் மற்றொருபுறம் கருத்து தெரிவிக்கிறார்கள்.
- மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர்.
- கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி:
பள்ளிப்பட்டு ஒன்றியம் கொல்லாலகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் காட்டுக்கொல்லி காலனியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
மலை கிராம மக்கள் பிரதான சாலைக்கு செல்ல மலைப்பகுதி வழியாக மண் சாலையில் பல ஆண்டுகளாக சென்று வந்தனர். இக்கிராமத்தில் பள்ளி, அங்கன்வாடி மையம் இல்லாததால், 3 கி.மீ. தூரத்தில் உள்ள கொல்லாலகுப்பம், கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில், தேசிய நெடுஞ்சாலை சார்பில் தச்சூர் முதல் சித்தூர் வரை எட்டுவழி சாலைப் பணிகளுக்காக காட்டுக்கொல்லி கிராமத்திற்கு செல்லும் மலைப்பகுதியில் எட்டு வழிச்சாலை திட்ட அலுவலகம், தளவாடம் மற்றும் தொழிலாளர்கள் தங்கும் அறைகள், கட்டப்பட்டதால் மலை கிராமத்திற்கு பொதுமக்கள் சென்று வரும் சாலை அடைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராம மக்கள் சென்று வந்த பாதைக்கு நடுவில் கால்வாய் ஆழப்படுத்தப்பட்டு கிராம மக்கள் சென்று வந்த சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் வேலைக்கு சென்று வரவும், மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சாலையில்லாத காட்டுப்பகுதி வழியாக சென்றுவரும் நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் விவசாயிகள் சாகுபடி செய்த பொருட்களை சந்தைக்கு எடுத்துச் செல்லவும், கர்ப்பிணிகள், நோயாளிகள் மருத்துவமனைக்கு சென்று வரவும் முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.






