என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம்.
    • புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுர் மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கான பாதுகாப்பினையும் மாவட்ட நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

    தனி சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் இடங்கள், தொழிற்சாலைகள் கண்காணிக்கப்பட்டு, அக்குழுக்கள் மூலம் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களை ஆய்வு செய்து சரியான பணிச் சூழல் நிலவுவதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சம்பவம் நிகழ்ந்தால் உடன் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி 1800 599 7626 மற்றும் வாட்ஸ்அப் எண். 9444317862-ல் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் அச்சமின்றி திருவள்ளுர் மாவட்டத்தில் தொடர்ந்து பணிபுரியலாம் திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தொழிலாளர் நலத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினருக்கு உரிய உத்தரவிடப்பட்டு புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. இதில் 2,474 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    பூண்டி ஏரியில் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மழை நீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்புவது வழக்கம்.

    புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இணைப்பு கால்வாய் வழியாக 150 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கனஅடி. இதில் 2,474 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கனஅடி. இதில் 2,957 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக 185 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
    • கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தொழிற்சாலை முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர்.
    • பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்

    பொன்னேரி:

    பொன்னேரி அண்ணாநகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் பொன்னேரி அடுத்த சயனாவரம் பகுதியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் செயினை பறித்து தப்பி சென்று விட்டனர். இந்த காட்சி கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இதனை வைத்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைலாச வாத்தியம் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
    • அருள்மிகு சோமஸ்கந்தர் அம்பாள் கோவிலில் பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் புகழ்பெற்ற அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் திருக்கோவில் ஒன்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இத்திருகோவிலில் நேற்று இரவு 17-ம் ஆண்டு மாசிதெப்ப திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு சனிக்கிழமை மாலை சுந்தர விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை புறப்பாடு நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலை சுக்கிரவல்லி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. நேற்று மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    எனவே, கிராம மக்கள் மடவிளாகம் கிராமத்திலிருந்து தாய் வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழம், புடவை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் மேள-தாளம் முழங்க கோவிலுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், கைலாச வாத்தியம் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பின்னர், அருள்மிகு சோமஸ்கந்தர் அம்பாள் கோவிலில் பிரகார புறப்பாடு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கோவிலின் எதிரே உள்ள திருக்குளத்தில் சுவாமி உலாவரும் நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ் ஏற்பாட்டில் 8-வது ஆண்டாக 3,000 பேருக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆ.சத்தியவேலு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், பொதுமக்கள், பக்தர்கள் என சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர்.
    • ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர்:

    தண்டையார்பேட்டை, சேனி அம்மன் கோவில் தெருவில் நேற்று இரவு ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் அனுமதி இல்லாமல் எல்.இ.டி. திரைகள் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக ஒளி பரப்பியது உள்பட பல்வேறு புகார்கள் குறித்து தி.மு.க. வின் 42-வது வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் மனு அளித்தார்.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வடக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர். கே. நகர்பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, 42-வது வட்ட செயலாளர் எஸ். ஆர் அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
    • வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் பஜார் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் சேகர்(வயது43) ஆவார். இவர் நேற்று முன்தினம் தனது கடையில் விற்பனை செய்த பணம் ரூ.24 ஆயிரத்து 500-யை கல்லா பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில், நேற்று வழக்கம்போல் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லா பெட்டியலில் இருந்த ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சேகர் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • இன்று இரவு மகிழடி சேவை நடக்கிறது.
    • திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

    திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    உற்சவர் சந்திரசேகரர், சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். தேரோட்டம் நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது.

    இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது.

    இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், வடிவுடையம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப்பட்டது.

    கல்யாணசுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலகலமாக நடைபெற்றது. இதில் திருவொற்றியூர் உள்ளிட்ட வடசென்னை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது. பின்னர் பால், பழம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவம் நடைபெற்றது.

    இன்று இரவு 9 மணிக்கு கல்யாணசுந்தருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடை பெறுகிறது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையாளர் பாஸ்கரன் மற்றும் அதி காரிகள் செய்து இருந்தனர். திருக்கல்யாண விழாவையொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் காதர்மீரா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சிகிச்சை பலனின்றி மூதாட்டி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த மெரட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 70). இவர் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கட்டில் அருகே குப்பையை குவித்து எரிப்பது வழக்கம்

    இந்த நிலையில் வழக்கம்போல் அவர் கட்டிலின் அடியில் கொசுவை விரட்ட புகைக்காக தீவைத்தார். பின்னர் மாரியம்மாள் தூங்கி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் உடலில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதில் உடல் கருகிய மாரியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மூதாட்டி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முதலாவது நிலையின் 3-வது அலகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் தினந்தோறும் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முதலாவது நிலையின் 3-வது அலகில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் 2-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஜனார்த்தனம் திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.
    • தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஈக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் ஜனார்த்தனம். இவர், அதே பகுதி திருவள்ளூர் - செங்குன்றம் நெடுஞ்சாலையில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அங்கிருந்த பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் வேகமாக தீப்பற்றி எரிந்ததால் அதனை அணைக்க முடியவில்லை. அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் விநாயகமூர்த்தி, ஞானவேல் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.

    இந்த தீவிபத்தில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீயை கட்டுப்படுத்த மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பூண்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களுக்கு மின்சாரம் தடைபட்டது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோல் கடையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. தீ விபத்துக்கான காரணம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
    • விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கொக்கு மேடு வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 25 ம் ஆண்டை முன்னிட்டு வெள்ளி விழாவாக பள்ளியின் முதல்வர் ஹேமாமாலினி தலைமையில் கொண்டாடபட்டது.

    சிபிஎஸ்இ மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிபிஎஸ்இ பள்ளியின் சின்னம் வெளியிட்டார். குருநானாக் கல்லூரி முதல்வர் ரகுநாதனன் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி துணை முதல்வர் தனலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் துர்கா நன்றியுரை ஆற்றினார். விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்

    ×